அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல் களும் இந்துக் கோவில்களும் விஷமிகளால் சேதமாக்கப்படுவதும் உடைக்கப்படுவதும் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அத்தாக்குதல்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கு இந்த அரசாங்கமோ சம்பந் தப்பட்ட அரசியல் தலைமைகளோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அவ்வாறு, குறிப்பிட்ட இனவாதிகளால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அரசு தலையிட்டு உடனுக்குடன் கட்டுப்படுத்தியிருந்தால் இன்று அநியாயமாக 5 உயிர்களை காவுகொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது.
கடந்த வியாழக்கிழமை பொசன் போயா தினத்தன்று அளுத்கமவில் இருவருக்கி டையில் ஏற்பட்ட வாக்குவாதமே இன்று பாரியளவில் பூதாகரமாகி வெடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
“பதிராஜகொடை ஸ்ரீ சுமங்கல பிரிவேனா தேரர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது பாதையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அவரது பயணத்துக்கு இடையூறாக இருந்துள்ளன. அப்போது தேரரின் காரை ஓட்டிச் சென்ற சாரதி இறங்கிச் சென்று போக்குவரத்துக்கு இடைஞ்சலான முறையில் பாதையில் வாகனங்களை நிறுத்தியிருந்தமை தொடர்பில் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியுள்ளார். அப்போது கார் சாரதிக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரினுள் இருந்த பதிராஜகொடை ஸ்ரீ சுமங்கல பிரிவேனா தேரர் விகாரைக்கு ஓடிச் சென்று சம்பவத்தைக் கூறியுள்ளார்.
அத்துடன் தேரர், சில ஆதரவாளர்களுடன் பொலிஸ் நிலையம் குறிப்பிட்ட முஸ்லிம் இளைஞர்கள் சென்று தன்னைத் தாக்கியதாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாரதியுடன் கைகலப்பில் ஈடுபட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தடுப்புக் காவலில் இருக்கும் நேரத்தில் பொலிஸார் மற்றும் சில தேரர்களும் அங்கு வைத்து அவர்களைத் தாக்கியதாக அளுத்கமையில் இருந்து ஹுஸைமத் என்பவர் உதயசூரியனுக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுபலசேனா அமைப்பு அளுத்கமவில் பாரிய கூட்டமொன்றையும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்தப் போவதாக அறிவித்தது. இவ் அறிவித்தலைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புக்களான அகில இலங்கை ஜெமியதுல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ., முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனம் போன்றன இச்சந்தர்ப்பத்தில் இதுபோன்ற தொரு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவது பாரிய உயிராபத்துகளை ஏற்படுத்தும் எனவும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்து இவ்வார்ப்பாட்டப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொண்ட போதும் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
அளுத்கமவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவ்வாறானதொரு ஒன்று கூடல் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பௌத்த மக்கள் கலகொட அத்தே ஞானசார தேரரின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலான ஆக்ரோஷ மான உரையைக் கேட்டிருக்கவும் மாட்டார்கள். பௌத்த மக்கள் ஆத்திரமடைந்திருக்கவும் மாட்டார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் கூட்டத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த மக்கள் கொந்தளிக்கும் விதத்தில் மிக நீண்டதொரு உரையை ஆற்றியுள்ளார். இந்த உரையின் நிறைவில் பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமாகியது. இப்பேரணியில் பொதுபலசேனா அமைப்புடன் இராவண பலய, புத்தசாசன பாதுகாப்புக் கமிட்டி என்பனவும் இணைந்து கொண்டன. உணர்ச்சிவசப்பட்டிருந்த பௌத்த மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி கோஷமிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர்.
இதற்கிடையில் தமது வணக்கஸ்தலத்தைத் தாக்கிவிடுவார்கள் என்று அச்சமடைந்த முஸ்லிம் தரப்பினர் சுமார் 400 பேர்வரை பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கில் அங்கு ஒன்று கூடினார்கள்.
இச்சந்தர்ப்பத்திலேயே சில விஷமிகளால் கல் எறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு இனத்துக்கிடையிலும் ஏற்பட்ட கைகலப்பு உக்கிரமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
இதன் போது அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கலவரம் மேலும் உக்கிரமடைந்தது. சுமார் 5.30 மணியளவில் ஆரம்பமான இக்கலவரம் 6.30 வரை ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் நீடிக்கவே 6.45 அளவில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர். இருப்பினும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் அட்டகாசம் ஓயவில்லை. மாறாக இந்த ஊரடங்குச் சட்டம் கலகக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவே அமைந்தது. பள்ளியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் முஸ்லிம் தரப்பு ஆண்கள் பலரும் பள்ளிவாசலில் இருக்க கலகக்காரர்கள் ஊருக்குள் நுழைந்து முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றை உடைத்து தீ மூட்டி எரிக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த ஒரு சில ஆண்களும் தமது குடும்பத்தில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக நின்றதனால் கலகக்காரர்களை எதிர்த்து நிற்க முஸ்லிம்தரப்பினரால் முடியாமல் போய்விட்டது.
இச்சம்பவத்தில் முக்கியமான கேள்வியாக இருப்பது கண்டனப் பேரணிக்காகச் சென்றவர்களுடைய கைகளுக்கு பெற்றோல், வாள், கத்திகள், தடிகள் என்பன எவ்வாறு கிடைத்தன என்பது தான். இதிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணிக்காகச் சென்றவர்கள் முன்கூட்டியே கலவரத்தை மேற்கொள்ளத் தயார் நிலையிலேயே அங்கு சென்றுள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிகின்றது.
மேலும் கலவரத்தின் போது 7 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் குண்டடிபட்ட ஏழு பேரும் முஸ்லிம்கள் இந்த 7 பேரில் ஏன் கலகக்காரர்களில் ஒருவரைக்கூட துப்பாக்கி ரவைகள் பதம் பார்க்கவில்லை. கலவரத்தின் போது வெடித்த துப்பாக்கிகள் பாதுகாப்புப் படையினரது மட்டும்தானா அல்லது கலகக்காரர்களுடைய துப்பாக்கிகளும் களத்தில் இறங்கியதா என்பது பாரிய கேள்விக் குறிதான்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் கலவரம் இரவு 3 மணி வரை தொடர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் இருக்க ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் அவ்வளவு நேரம் கலவரம் தொடர்ந்தமைக்கான காரணம் என்ன?
ஊரடங்குச் சட்டமும், பாதுகாப்புப் படையினரும் சரியாகச் செயற்பட்டிருந்தால் இன்று அளுத்கம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களது வீடுகள், வாகனங்கள் மற்றும் பெறுமதியான உடமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். எனவே சம்பவ தினம் ஊரங்குச் சட்டம் முஸ்லிம் தரப்பினருக்கு மாத்திரம் தானா என்பது யோசிக்க வேண்டிய விடயம் தான்.
எது எப்படியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 இற்குப் போட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் 12 மணிவரை மக்களின் நலன்கருதி ஊரடங்குச்சட்டத்தை பொலிஸார் சற்று நேரம் தளர்த்தினர்.
அந்த நேரம் மக்களுக்கு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள போதுமானதாக இருக்க வினலை. காரணம் ஊருக்குள் உள்ள அனைத்துக் கடைகளும் எரித்து நாசமாக்கப்பட்டு விட்டன. மக்கள் பொருட்களை வாங்க நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு சென்று வர குறித்த நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இருக்க வில்லை. இதனால் நேற்றைய தினம் காலை 8 மணிக்கு மீண்டும் ஊர்வலத்தைத் தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 2500 பேர் பேருவளை ஜாமியா நளீமியாவில் தஞ்சமடைந்திருந்த போதும் பாதுகாப்புக் கருதி திங்கட்கிழமை நண்பகல் முதல் பேருவளை அல் ஹுமைசரா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர்.
இத்தனை சம்பவமும் நடந்தேரிய நிலையில் முஸ்லிம்களின் ஆலமரமாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் சிரிப்புவராத கோமாளிக் கூத்தாகவே உள்ளது. கடந்த திங்கட் கிழமை சம்பவ இடத்துத்துக்குச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்ணீர் மல்க மிக உருக்கமான வார்த்தைகளை முன்வைத்தார். அதாவது நான் அரசாங்கத்துடன் இருக்கும் போது எனது மக்களுக்கு இவ்வாறான தொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இனியும் நான் இந்த அரசாங்கத்துடன் இருக்க வேண்டுமா என்று அன்றைய தினம் காலை பாதிக்கப்பட்ட மக்கள் முன்பாக தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அவர், அன்று மாலை நேரமே அரசாங்கத்தை விட்டு விலகி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்னும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என்று அறிக்கை விடுகின்றார்.
இவ்வளவு காலமும் சிறு சிறு அசம்பாவிதங்கள் நடந்தபோது மௌனமாக இருந்த அரசியல் தலைமைகள் இச்சம்வத்துக்குப் பிறகாவது ஒரு முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த முஸ்லிம் மக்களுக்கு இதிலும் பெரிய ஏமாற்றம் தான் எஞ்சியது.
பொலிவியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஏனைய சம்பவங்களைப் போன்று இச்சம்பவத்துக்கும் டுவிட்டரில் தனது அனுதாபச் செய்தியை விடுத்துள்ளதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படியோ முஸ்லிம்களின் நிலையை சர்வதேசம் தெரிந்து கொள்ள 5 உயிர்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டமைதான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.