குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, June 12, 2013

மாடு அறுப்பது மாத்திரம் தானா பிரச்சினை


                                                                -பஹமுன அஸாம்-

காலத்தின் வேகத்துக்கு ஏற்ப பல வளர்ச்சிகளைக் கண்டு கொண்டு மிக வேகமாகப் பயணித்துக்கு கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அந்த வளர்ச்சிகளுக்கு நிகராக பல பிரச்சினைகளும் காலத்துக்குக் காலம் புகைந்து கொண்டே தான் இருக்கும். அவை சமூகம் சார்ந்தவையாகவோ அல்லது தனி மனிதர்கள் சார்ந்தவையாகவோ இருக்கலாம். தனி மனிதர் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரு சமுகத்தின் பிரச்சினையாக திசை திருப்பி அதில் குளிர் காய நினைப்பவர்கள் எத்தனையோ பேர். 

அந்த விதத்தில் சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்து தற்போது ஓரளவுக்கு ஓய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் மிருகவதை. உண்மையில் மிருக வதை என்று எதனைச் சொல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. வெறுமனே இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை மாத்திரம் தூக்கிப் பிடித்து பாரிய ஒரு பிரச்சினையாக திசை திருப்பிக் கொண்டிருப்போருக்கு அநியாயமாகக் கொல்லப்படும் ஏனைய உயிர்கள் பற்றிய எண்ணங்கள் வருவதில்லை போலும்.

ஒரு நாளைக்கு எத்தனைபன்றிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை ஆயிரம் கோழிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை இலட்சம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவைகள் உயிரினங்களின் வரிசையில் வருவதில்லையா? இவற்றின் உயிருக்கு பெறுமதியில்லையா.? ஒவ்வொரு நாளும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகளின் தொகையைவிட பல மடங்கு கோழிகள் மற்றும் மீன்கள் போன்ற உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இது வரையில் இவை பற்றி யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
சரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி யுத்தத்தின் போது எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. அவை உயிர்கள் இல்லையா? ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் மீதே இவ்வளவு கருணை காட்டும் இந்த (அநியாயத்துக்கு) நல்ல உள்ளங்கள் அன்று அவ்வளவு மனித உயிர்கள் காவுகொள்ளப்படும் போது எங்கு(தூங்கப்)போயிருந்தார்கள் என்று தான் புரியவில்லை. 


இன்று ஒரு புத்த பிக்கு, மாடு அறுக்கிறார்கள் என்று அதனை எதிர்த்துத் தீக்குளித்தார். 26 வருடங்களுக்கு முன்பு அரந்தலாவை பஸ் குண்டு வெடிப்பில் 30 பிக்குகள் கொல்லப்பட்டார்களே! அப்படியானால் ஒரு மாட்டின் உயிரை விட இந்த 30 பிக்குகளின் உயிர்களும் பெறுமதியற்றுப் போய்விட்டதா என்று தான் தெரியவில்லை.

இறைச்சிக்காக  ஆடு மாடு கோழி பன்றி போன்ற விலங்குகளை வளர்ப்பது உலகில் பிரபல்யமான ஒரு கைத் தொழிலாகவே உள்ளது. பல நாடுகள் இன்று ஏற்றுமதி  செய்யும் அளவுக்கு பெரிய பண்ணைகளை வைத்து நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து கனடா, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளையும் குறிப்பிடலாம். ஏன் காந்தி வாழ்ந்த இந்திய மண்ணில் கூட இறைச்சிக்காக மாடுகள் கோழிகள் அறுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 900 கோடி விலங்குகள் அறுக்கப்படுவதாகவும் அத் தொழிலில் 5 இலட்சத்து 30 ஆயிரம் போர் ஈடு பட்டுள்ளதாகவும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரம் கனடா வருடமொன்றுக்கு 65 கோடி விலங்குகளை அறுப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வருடமொன்றுக்கு 30 கோடி விலங்குகளையும் 400 கோடி கோழிகளையும் அறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் 130 ற்கும்  மேற்பட்ட மாடுகளும் 100 ற்கும்  மேற்பட்ட ஆடுகளும் அறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆடு மாடுகளை அறுப்பதால் அவற்றில் எந்தவிதமான குறைவுகளும் ஏற்பட்டதாக இதுவரையில் எங்கும் பதிவாகவில்லை. மாறாக முன்னரை விட தற்கால சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றின் தொகையும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. பூனைகளும் நாய்களும் வருடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குட்டிகளை ஈணுகின்றன. அதிலும் ஓரே சூலில் மூன்றுக்குக் குறையாத குட்டிகளை அவை ஈணுகின்றன. அவற்றை யாரும் அறுப்பதில்லை. அவை பட்டியாக வாழ்வதும் இல்லை. ஆனால் மாடுகள் வருடத்துக்கு ஒரு முறை தான் கன்று போடுகின்றன. அதுவும் ஒரு கன்றுதான். இப்படியிருந்தும் இவ்வளவு மாடுகள் அறுக்கப்பட்டும் அவற்றின் பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு சம நிலை பேணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

அண்மையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி கோடிக்கணக்கில் கோழிகள் குவியல் குவியலாகப் அழிக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டன. மேற்கவ் என்ற வியாதி பரவிய காலத்தில் மில்லியன் கணக்கான மாடுகள் கொன்று எரிக்கபட்டன. இவற்றினால் மாட்டிறைச்சிக்கோ கோழி இறைச்சிக்கோ பெரிதாக தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த இன்றை காலத்தில் இயந்திரங்கள் மூலம் ஓரே நாளில் பல்லாயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் எம்மில் அநேகமானவர்கள் அறிந்திருப்பார்கள்.

நமது வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால். இன்று போல் விதவிதமான உணவுகளோ உடன் உணவுகளோ அன்று இருக்கவில்லை. விவசாயம் செய்தும் வேட்டையாடியுமே நமது முன்னோர்கள் ஜீவித்தார்கள். பௌத்தர்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் போற்றும் பண்டைய அரசர்கள் கூட வேட்டையாடி இறைச்சியைச் சாப்பிட்டுள்ளார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக தேவநம்பிய தீஸ மன்னன் காட்டுக்கு மான் வேட்டையாடச் சென்ற சமயமே மகிந்த தேரரைச் சந்தித்து பௌத்த மதத்தை தழுவிக் கொண்டார் என்ற வரலாற்றை பலரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே ஆரம்பக்கால பௌத்த மக்களிடமும் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் பழக்கம் இருந்தமை உறுதியாகின்றது.

மேலும் தாய்லாந்து பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். அந்நாட்டு மக்கள் விஷப்பாம்புகளை உணவாக உற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் மிகவும் விலை உயர்ந்த உணவாக மாட்டிறைச்சி கருதப்படுகிறது. இவர்கள் சமைக்காத மீன்களையும் உட்கொள்கின்றனர்.  வியட்நாம் மக்கள் ஈசல், கரப்பான் பூச்சிகளையும் உணவாக உட்கொள்கின்றனர். இந்த நாடுகளில் எல்லாம் பேசப்படாத மிருக வதை  இலங்கையில் மாத்திரம் பேசப்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் மாடு அறுப்பதல்ல சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினை. அது ஒரு  இன ரீதியான பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக மீன்பிடித்துறையை எடுத்துக் கொண்டால் 70 வீதமான மீனவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் அனைவரும் மீனை உட்கொள்கிறார்கள். எனவே மீன் பிடித்தலுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மீறி யாரும் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் கிளர்ந்து எழுந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

எனவே இலங்கையில் ஆடு மாடு கோழிகள் அறுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்றதாகும். மாடு அறுப்பதைத் தடை செய்வதானால் கோழி அறுப்பது மற்றும் மீன் பிடிப்பது என்பவற்றையும் தடை செய்யவேண்டும். ஆடு மாடு கோழி வளர்ப்பினால் இன்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுகின்றன. வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றில் அதிகமான சிங்களவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனவே இவற்றைத் தடை செய்தால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பலருக்கு தொழில் வாய்ப்பின்றிப் போகும் என்பதில் ஐயமில்லை.  
பஹமுன அஸாம்

No comments:

Post a Comment