குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Monday, March 26, 2012

தேனிலவு கொலைகாரன் சிக்கியது எப்படி


கடந்த மாதம் கொள்ளுப்பிட்டியில் நடந்த கொலைச் சம்பவத்தை அனேகர் அறிந்திருப்பர். திருமணம் முடிந்து தேனிலவுக்கு வந்த சுதர்ஷனி கடந்த 26ஆம் திகதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். கொலை செய்யப்பட்ட சுதர்ஷனி ஷகிலா கனகசபை இரு பிள்ளைகளின் தாயாவார். தனது முதலாவது கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்றிருந்த சுதர்ஷனி இரண்டாவது திருமண பந்தத்தில் இணைவதற்காகவே இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார்.

தனது தாயாருடன் இலங்கைக்கு வந்து சுதர்ஷனி கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். ஜனவரி மாதம் 14ஆம் திகதி ஹோட்டலில் அறையொன்றை பதிவுசெய்யும் சுதர்ஷனி தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் சின்னதுறை ஞானச்சந்திரனையும் தன்னுடன் ஹோட்டலில் தங்கவைக்கிறார். சுதர்ஷனி, சின்னதுறை ஆகிய இருவரும் பெப்ரவரி 19ஆம் திகதி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள விவாகப் பதிவாளரிடம் சென்று தமது குடும்ப வாழ்க்கையை சட்டபூர்வமாகப் பதிவு செய்து கொள்கிறார்கள்.

இவ்வாறு குடும்ப வாழ்க்கையில் இணைந்த அவர்கள், 23ஆம் திகதி தங்கியிருந்த அறையை மாற்றி வேறு ஒரு அறைக்குச் செல்கிறார்கள். அத்தோடு அதுவரையில் அவர்களுடன் இருந்த சுதர்ஷனியின் தாய் புதுமணத் தம்பதியினரை தனியாக இருக்க இடம் கொடுத்துவிட்டு மீண்டும் இங்கிலாந்துக்குச் செல்கிறார். இதற்கிடையில் 23ஆம் திகதி சுதர்ஷனியால் ஹோட்டலின் பில்லும் கட்டப்படுகிறது. பெப்ரவரி 25ஆம் திகதியில் இருந்து சுதர்ஷியின் அறைக்கதவில் “Do Not Disturb” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட “டக்” தொங்கவிடப்படுகிறது.
அறையை சுத்தம் செய்து இரண்டு நாட்களாகிறது என்பதால் ஹோட்டல் சேவையாளர் ஒருவர் கதவைத் தட்டி அறையை சுத்தம் செய்யவா என்று கேட்டுள்ளார். கதவை சிறிதாகத் திறந்த சின்னதுறை தலையை மாத்திரம் வெளியே போட்டு “இப்போதைக்கு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு மீண்டும் கதவை முடியிருக்கிறார். அத்தோடு அவர்கள் அன்று இரவு மதுபானமும் வரவழைத்துக் குடித்துள்ளார்கள்.

26ஆம் திகதி காலையிலும் காலை உணவு, மதுபானம் என்பவற்றை அறைக்கு வரவழைத்துள்ளார்கள். அதன்பிறகு அந்த அறையில் எந்த சலனமும் இருக்கவில்லை. ஏனைய நாட்களில் சுதர்ஷனி, சின்னதுறை ஜோடி வெளியே போய் வந்தலும் 25ஆம் திகதிக்குப் பின்னர் அவர்கள் எங்கும் வெளியே போய் வருவதை யாரும் அவதானிக்கவில்லை. 28ஆம் திகதி காலையும் உதயமாகியது. அன்றும் சுதர்ஷனியின் அறையில் எந்த சத்தமும் இல்லை. அன்றைய தினம் ஹோட்டல் சேவையாளர் அவ்வறையின் அருகால் செல்லும்போது வித்தியாசமான ஒரு துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். உடனே ஹோட்டல் நிர்வாகத்துக்கு இதனை அறிவித்தார்கள்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் வந்து கதவைத் தட்டியும் அறையில் இருந்து எந்த பதிலும் இல்லாததால் ஹோட்டல் நிர்வாகத்திடம் உள்ள மேலதிக சாவியால் அறைக் கதவை திறக்கிறார்கள். அங்கு அவர்களுக்குக் காணக் கிடைத்தது கட்டிலின் மேல் நிர்வாணமாகக் கிடந்த சுதர்ஷனியின் சடலத்தை மாத்திரம்தான். உடனே பொலிஸாருக்கு அறிவிக்கப்படுகிறது. கட்டிலின் மேல் தலை மாத்திரம் தெரியும் விதத்தில் வெள்ளைப் போர்வையொன்றால் மூடியிருந் சுதர்ஷனியின் உடலை சோதனையிட்ட பொலிஸாருக்கு சுதர்ஷனி கழுத்தில் கூறிய கத்தியால் தாக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஊகிக்க வெகுநேரம் எடுக்கவில்லை.

அறையை நன்றாக மோப்பமிட்ட பொலிஸாருக்கு சுதர்ஷனி, சின்னதுறை தம்பதியின் விவாகப் பதிவுச் சான்றிதழும் தமிழில் எழுதிய சில கடிதங்களும் கிடைக்கின்றன. இச்சந்தர்ப்பத்தில் அங்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அது சுதர்ஷனியின் உறவினர் ஒருவராகும். “சில நாட்களாக சுதர்ஷனியின் மொபைல் போனுக்கு அழைப்பெடுத்தேன். எந்த பதிலும் இல்லை. அதனால்தான் ஹோட்டல் நம்பருக்கு எடுத்தோம்” என்று மறுமுனையில் இருந்து பதில்வந்தது.
கொலைகாரனுக்கு நீண்டநாள் மறைந்திருக்க முடியாது. பரபரப்பாக செயற்பட ஆரம்பித்த கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கொலைகாரனை கண்டுபிடிக்க நீண்டநாள் காத்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை. சுதர்ஷனியின் உறவினர் முலம் பெற்றுக்கொண்ட தகவலினாலும் விவாகப் பதிவாளரிடம் பெற்றுக்கொண்ட தகவல்களின் மூலமும் சுதர்ஷனியின் கணவனான சின்னதுறைதான் அவரைக் கொலை செய்திருக்கக் கூடும் என்று சந்தேகித்தனர்.

அதற்கு முக்கிய காரணம் சின்னதுறை ஹோட்டல் அறையைப் பெற்றுக் கொள்ளும்போது வழங்கியிருந்த முகவரியும் விவாகப் பதிவில் வழங்கியிருந்த முகவரியும் வெவ்வேறானவை. அத்தோடு 26ஆம் திகதி ஹோட்டலை விட்டு வெளியேறி மீண்டும் ஹோட்டலுக்கு வரவில்லை. மேலும் அவரது கையடக்கத் தொலைபேசியும் அனைத்து வைக்கப் பட்டிருந்தது. உஷாரடைந்த பொலிஸார் கையடக்கதொலைபேசி வழங்குனர்களின் உதவியோடு சின்னதுறையின் கையடக்கத் தொலைபேசியை கண்காணிக்க ஆரம்பித்தனர்.

எந்நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சின்னதுறையின் தொலைபேசி சிலநேரங்களில் “ஒன்” செய்யப்பட்டது. “ஒன்” செய்த அனைத்து நேரங்களிலும் கொள்ளுப்பிட்டி மற்றும் அதனை அண்டியுள்ளள பகுதிகளிலுள்ள தொலைபேசி கோபுரங்களில் இருந்தே சமிக்ஞை சென்றது. இதன்மூலம் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பகுதியிலேயே உள்ளார் என்று உறுதி செய்யப்பட்டது. கொள்ளுப்பிட்டி பகுதியில் இரகசியப் பொலிஸார் காண்கானிக்க ஆரம்பித்தனர். இதற்கு ஹோட்டல் பாதுகாப்புக் கமராவில் பதிவாகியிருந்த சின்னதுறையின் புகைப்படங்கள் மிகவும் உதவியாக இருந்தன.

சிலநாட்களில் ஒரு வைத்தியசாலை அருகில் இருந்து சந்தேகநபர் கைது செய்யப்படுகிறார். அத்தோடு சுதர்ஷனியின் கொலைக்கான மர்மமும் அம்பலமாகிறது. சந்தேகநபர் ஏற்கனவே திருமனம் செய்தவர். இந்தியாவில் தனது மனைவி பிள்ளைகள் மூவருடனும் வாழ்ந்து வந்தவர். வீட்டருகில் இருந்த எரிவாயு நிலையம் ஒன்று திடீரென்று வெடித்ததில் தனது முதலாவது மனைவியையும் பிள்ளைகளையும் சந்தேக நபர் பறிகொடுத்திருந்தார்.
கொலையுண்ட சுதர்ஷனியும் ஏற்கனவே திருமணமானவர். கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்றிருந்த அவர் தனது இரு பிள்ளைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வந்தார். முதல் கணவனிடம் இருந்து விவாகரத்துப் பெற்ற பின்னர் பழைய சிநேகிதனான சின்னதுறையுடன் இருந்த நட்பு காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்வதற்காக சுதர்ஷனி தனது தாயுடன் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகிறார்.

கடந்த ஜனவரி 14ஆம் திகதி சின்னதுறையின் பெயரிலேயே அறை பதிவு செய்யப்படுகிறது. இருவரின் விருப்பத்தோடு பெப்ரவரி 19ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. சுதர்ஷனி இங்கிலாந்தில் வாழ்வதற்கே அதிகம் ஆசைப்பட்டார். அதனால் அடிக்கடி சின்னதுறையை இங்கிலாந்துக்குச் செல்லக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். “தனது வியாபாரத்தை நிறுத்திவிட்டு உடனடியாக வரமுடியாது, சிறிது நாட்கள் செல்லட்டும். இவற்றையெல்லாம் ஒரு நிலைப்படுத்திவிட்டு போவோம் அல்லது நீங்க முன்னாடி போங்க நான் இவற்றையெல்லாம் முடித்துவிட்டு ஒரு மாத்தில் வந்து விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இருந்தாலும் சுதர்ஷனி இங்கிலாந்துக்குச் செல்லவேண்டும் என்று அடிக்கடி நச்சரித்ததால் இருவருக்கிடையிலும் அடிக்கடி சண்டைகள் எழுந்தன. இந்த சண்டைகளின் இறுதிநாள் தான் அவர்கள் திருமணம் முடித்து குடும்பம் நடத்திய 7ஆவது நாள். அதாவது பெப்ரவரி 26ஆம் திகதி. காலை உணவேடு மதுபானமும் அருந்தியதால் போதையில் இருந்த அவர்களுக்கிடையில் மீண்டும் இங்கிலாந்து செல்லுவது பற்றிய வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது. சின்னதுறையின் கோபத்தின் எல்லைமீறி அறையில் அப்பிள் பழம் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தி சுதர்ஷனியின் கழுத்தை பதம்பார்க்கிறது.
சந்தேக நபர் சுதர்ஷனியை கட்டிலில் தள்ளிவிட்டு அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்திக்கொண்டு கழுத்தில் குத்தியுள்ளார். உயிர் பிரிந்த சுதர்ஷனி கட்டிலில் விழுந்துகிடக்க கட்டில் போர்வையை அவரின் மேல் விரித்துவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறார் சந்தேக நபர். திட்டமிட்டு செய்யாத கொலை என்பதால் சந்தேக நபரால் நீண்ட நாட்கள் தலைமறைவாக இருக்க முடியாமல் போய்விட்டது. சந்தேகநபர் அறையில் விட்டுச் சென்றிருந்த ஆதாரங்களும் அவரது கையடக்கத் தொலைபேசியும் சந்தேக நபரை பொலிஸாரின் வலையில் சிக்கவைத்தது.