குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Tuesday, October 16, 2012

தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் தமிழர்கள்


செம்மொழியாம் நம் தாய் மொழியான தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்தது என்பதை நாம் நன்றாக அறிவோம். 65இற்கும் மேற்பட்ட நாடுகளில் பேசப்படும் மொழியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இதன் மகிமையை அறியாதவர்களாய் நாம் இருக்கின்றோம் என்று நினைக்கும் போது தான் சற்று கவலையாக உள்ளது.

மொழி என்பது ஒரு தனிமனிதனுக்கோ அல்லது சமுதாயத்துக்கோ மிக முக்கியமான ஒரு விடயமாகும். அது அவனையோ அல்லது அந்த சமுதாயத்தையோ அடையாளப்படுத்தக் கூடிய ஒரு விடயம் என்றும் குறிப்பிடலாம்

இலங்கையைப் பொறுத்தவரையில் பல்லின மக்கள் வாழும் பல மொழி கலாசாரங்களைப் பின்பற்றுகிறவர்களே காணப்படுகின்றனர். இருந்தும் சிங்கள மொழியே ஆக்கிரமிப்பு மொழியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. சனத்தொகை அமைப்பில் பார்க்கும் போது இது நியாயமான ஒரு விடயமாக இருந்தாலும் பொதுவாகப் பார்க்கும் போது அது இனவாதத்தின் பிரதிபலிப்பாகவே தெரிகிறது.

சிங்களம் மட்டுமல்ல தமிழும் அரச கருமஃநிர்வாக மொழியாகத்தான் இருக்கிறது. இருந்தும் அதை நாம் சரிவரப் பயன்படுத்தாமல் இருக்கின்றோம் என்று தான் சொல்ல வேண்டும். இது அறியாமையா அல்லது அடங்கிப் போதலா என்று தெரியவில்லை. இருப்பினும் தமிழும் நிர்வாக மொழி என்பதை மறந்து விடக்கூடாது. இதற்கான சுற்றுநிருபம் சகல நிறுனங்களுக்கும் அனுப்பட்டுள்ளது என்பதை அண்மையில் ஒரு தேசிய பத்திரிகையில் வாசித்தேன்

இவ்விடயம் செயற்பாட்டு ரீதியில் நடைமுறைக்கு இன்னும் வரவில்லை என்று நினைக்கும் போது சற்று கவலையாகத்தான் உள்ளது. இதற்கான காரணம் யாது? தமிழ் பேசும் மக்களாகிய நாமே தான் இதற்கு காரணம்.தமிழ் மொழியைப் பயண்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை நாமே புறக்கணிக்கின்றோம். நமது உரிமைகளை நாமே செயலிழக்கச் செய்கின்றோம். அதாவது நமது அன்றாட நடவடிக்கைகளான வங்கிஇ வைத்தியசாலைஇ பிரதேச செயலகம்இ கிராம உத்தியோகஸ்தர் போன்றவர்களிடம் நமது அலுவல்களுக்காக போகும் பட்சத்தில் நாம் அங்கு நமது உரிமையை விட்டுக் கொடுத்துவிட்டு சிங்களத்திலேயே நமது காரியத்தை சாதித்துவிட்டு திரும்புகிறோம். நம்மில் அனேகர் நமக்கென்ன என்று ஒதுங்கிப் போவதாலேயே நாம் இன்னும் அதே நிலையில் உள்ளோம். நாம் ஒவ்வொருவரும் இது தொடர்பாக பேசாது வாய்மூடி மௌனமாக இருக்கும் வரைக்கும் நமது எதிர்கால சந்ததிக்காவது இந்த உரிமையை பெற்றுக் கொடுக்க இன்னும் நாம் முன்வரவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்

உதாரணமாக வங்கிகளில் உள்ள பற்றுச் சீட்டுக்கள்இ விண்ணப்பபடிவங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் தமிழ் சிங்களம்இ ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் விபரம் நிச்சயம் இருக்கும். ஆனாலும் இந்த இடத்தில் நாம் நமது தன்மானத்தை விட கௌரவத்தையே பெரிதாகப் பார்க்கின்றோம். ஆங்கிலத்தில் பூர்த்திசெய்தால் தான் கௌரவம்இ ஏனையவர்கள் மதிப்பார்கள் என்று ஆங்கிலத்திலேயே அந்த விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வோம். அது அவ்வாறிருக்க ஆங்கிலம்இசிங்களம் தெரியாத ஒருவர் வங்கிக்குச் சென்றாலும் கூட அவருக்கு தமிழ் எழுதத் தெரிந்திருந்தாலும் தனது பற்றுச் சீட்டை இன்னொருவரிடம் கொடுத்து ஆங்கிலத்தில் பூர்த்தி செய்வதை அவதானித்திருப்போம். ஏன் நமக்கும்  அவ்வாறான அனுபவங்கள் இருக்கக்கூடும். ஏன் அந்த இடத்தில் பற்றுச் சீட்டையோ அல்லது விண்ணப்பப்படிவத்தையோ நாம் தமிழில் பூர்த்தி செய்து கொடுக்கக் கூடாது. அவ்வாறு தமிழில் பூர்த்தி செய்து கொடுப்பதை வங்கி நிர்வாகம் ஏற்பதில் எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாது.

வங்கியில் மாத்திரமல்ல இன்று வைத்தியசாலைகளை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைதான். மறுபக்கம் பிரதேச செயலகங்களை எடுத்துக் கொண்டாலும் அதோ கதிதான். ஏன் நமது கையடக்கத் தொலைபேசியை எடுத்துக் கொண்டாலும் அதிலும் மூன்று மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை முகவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். இருந்தும் இன்று நம்மில் அனேகமானவர்கள் கௌரவத்துக்காக ஆங்கில மொழியையே தெரிவு செய்கிறார்கள்

நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயல்படாத வரைக்கும் இந்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். செம்மொழி என்றும் பழமையான மொழி என்றும் இலக்கிய விழாக்களில் மார் தட்டுவதில் எந்தப் பெருமையும் இல்லை. பேசுவது என்னமோ பேசுபவருக்கு பெருமையாக இருக்கலாம். அதாவது தான் ஒரு சிறந்த பேச்சாளன் என்ற பெருமைக்காக பேசலாம். ஆனால் நாம் நமது அன்றட நடடிக்கைகளின் போது தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் வரும் போது கட்டாயமாக நாம் அதனைப் பயன்படுத்த வேண்டும். அந்த உரிமையை விட்டுக் கொடுப்பதில் இருந்து நாம் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

Monday, October 15, 2012

முதல் பிரசவத்திலேயே ஐந்து பிள்ளைகள்


கேகாலை ஹெட்டிமுல்லைப் பகுதியில் வசிக்கும் திலினி ரசாங்கிகா என்ற பெண் இன்று தனது முதல் பிரசவத்தில் ஒரே தடவையில் ஐந்து குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ஒரு பெண்ணுக்கு தான் தாய்மையடைகிறதை விடப் பெரிய சந்தோஷம் வேறு என்ன இருக்கப் போகிறது. அதிலும் இந்தத் தாய் மூன்று வருடங்கள் தவமிருந்தே இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். செய்தியைக் கேள்விப்பட்ட நமக்கே உள்ளத்தில் ஒரு சின்ன சந்தோஷம் தளிர்விடும் போது அந்தத் தாயின் உள்ளத்தில் பொங்கும் ஆனந்தத்துக்கு அளவே இருக்காது என்பதை அந்தத் தாயின் முகத்தில் பூத்திருக்கும் புன்னகையில் இருந்தே தெரிகிறது.

ஐந்தில் மூன்று ஆண் குழந்தைகளும் இரண்டு பெண் குழந்தைகளுமாகும். பிள்ளை இல்லை என்று மூன்று வருடங்கள் பட்ட வேதனைக்கு பரிசாக கடவுள் ஒரே தடவையில் ஐந்தை அள்ளிக் கொடுத்துவிட்டான் போலும்.

எப்படியோ ஐந்து குழந்தைகளையும் எந்தக்குறையுமின்றி வளர்த்டிதடுக்க அந்தக் கடவுளே அனைத்து வசதிகளையும் அந்தத்தாய்க்கு கொடுக்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க திருணமாகியும் குழந்தைப் பாக்கியமில்லாமல் எந்தனை சகோதரிகள் நம்மிடத்தில் இருக்கின்றார்கள். இவர்களை நினைக்கும் போது சற்றுக் கவலையாகத்தான் இருக்கிறது. இருப்பினும் ஏதோ ஒரு நன்;மைக்காகவே இவ்வாறு காலம் செல்கிறது என்று தைரியமாக இருக்க வேண்டும்.

திருமணமான முதல் வருட முடிவுக்குள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை என்றால்  அவளுக்கு வந்து சேரும் வாய்ப்பேச்சுக்களுக்கு குறைவே இருக்காது. சில பகுதிகளில் அவர்களை ஒரு அபசகுணமாகவே கருதுவார்கள். நல்ல காரியங்கள் நடத்தும் போது தள்ளி வைப்பார்கள். இந்த மூட நம்பிக்கை நம்மிடத்தில் காணப்படாவிட்டாலும் தமிழ் சினிமாவிலும் நெடுந்தொடர்களிலும் அதிகமாவே காணப்படுகின்றன. இது பாரத மக்களிடம் காணப்படுகிறதா இல்லை இயக்குநர்கள் தம் இஷ்டத்துக்கு சின்னத்திரையில் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. இலங்கையைப் பொறுத்தவரையில் நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளும் இவ்வாறானா மூடநம்பிக்கையுள்ள முட்டாள்கள் உள்ளார்களா என்று.

முட்டாள்தனமாக போலிச் சாமியார்களையும், வைத்தியர்களையும் தேடிச் சென்று ஏமாற்றத்தை விலைகொடுத்து வாங்க வேண்டாம். 'குழந்தை இல்லாதவர்கள் உடனே நாடுங்கள்' என்று இன்று பத்திரிகைகளில் அதிகமான விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. இந்த எல்லா விளம்பரங்களும் எவ்வளவு தூரம் உண்மையானவை என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் நல்லவர்களாக இருந்தாலும் இன்று அதிகமானவர்கள் பணத்துக்காகவும் காமத்துக்காகவுமே இவ்வாறான விளம்பரங்களைப் பிரசுரிக்கின்றனர்.

பெண்களைப் பொறுத்தவரையில் கடவுள்நம்பிக்கை என்பது அவர்களிடையே அதிகமாகவே இருக்கும். அவர்களை ஏமாற்றக்கூடிய போலிச் சாமியார்களும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து செல்லும் பெண்களிடம் தவணை முறையில் சிறிது காலத்துக்கு பணப் புறட்டுவார்கள். மேலும் தனியாகச் செல்லும் பெண்களுக்கு மயக்க மருந்துகளை கொடுத்து அவர்களைத் தப்பான செயல்களுக்கு பயன்படுத்துவார்கள். குழந்தையில்லை என்று மனமுடைந் செல்லும் பெண்கள் இவ்வாறான செயல்களால் இன்னும் உளரீதியாக பாதிக்கப்படுவீர்கள்.

எனவே இது விடயத்தில் பெண்கள் கூடிய அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.
குழந்தையில்லை என்று வருத்தப்படுவதை விட்டுவிட்டு நம்பிக்கையுடன் இருங்கள். அந்த காத்திருப்புக்கு ஒரு நல்ல பலன் கிடைக்கும். திலினி ரசாங்கிகாவின் காத்திருப்புக்குக் கிடைத்த பரிசை மறந்துவிடாதீர்கள்.





பஹமுன அஸாம்

Wednesday, September 19, 2012

Sunday, August 5, 2012

சிறுவர் துஷ்பிரயோகம்

விஸ்வரூபம் எடுத்துள்ள 

சிறுவர்  துஷ்பிரயோகக் கலாசாரம்


பஹமுன அஸாம்


சிறுவர் துஷ்பிரோகம் என்பது இன்று சர்வசாதாரணமான ஒரு விடயம் போல வியாபித்துள்ளது. தினம் தினம் எங்கு பார்த்தாலும் இது தொடர்பில் ஏதாவது மனதை உலுக்கும் ஒரு செய்தி அல்லது சம்பவம் நமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் உள்ளன.
நாளாந்தம் வெளிவரும் தேசிய பத்திரிகைகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு செய்தி சிறுமி துஷ்பிரயோகம், சிறுமி மீது தாத்தா சேஷ்டை என்று விதவிதமான ரைமிங் கலந்த தலைப்புக்கள் நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாட்டின் கண்கள், எதிர்காலத்தின் தூண்கள் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மறு பக்கம் துஷ்பிரயோகக் கலாசாரம் பூதாகரமாக வளர்ச்சியடைந்து நாளைய தலைவர்களை இன்றே நாசம் பண்ணிவிடுமோ என்ற அச்சம் ஆக்கிரமித்துள்ளது.
காமவெறி பிடித்த அரக்கர்களின் உடற் பசிக்கு எமது சின்னஞ்சிறு மொட்டுக்கள் பலியாவதை நினைக்கும் போது நல்ல இரத்தம் ஓடும் எந்தவொரு மனமும் பதராமல் இருக்காது.


உலகமறியாத பிஞ்சு உள்ளங்களிடம் தமது இச்சைகளைத் தீர்க்க முற்படுகிறவர்கள் நிச்சயமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அரக்க குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள்.
சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை இரண்டுவிதமாகப் பிரித்து நோக்கலாம். முதலாவது உணர்வுரீதியான ரீதியிலான துன்புறுத்தல் இரண்டாவது உடலியல் ரீதியிலான துன்புறுத்தலாகும்.
உணர்வு ரீதியிலான துன்புறுத்தலில் சிறுவர்களுடன் ஆபாசமாகக் கதைத்தல், ஆபாசமான படங்களைக் காட்டுதல் போன்ற உணர்ச்சியைத் துண்டும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.
உடலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஸ்பரிசம் செய்தல், தொட்டு விளையாடுதல், உறவுகொள்ளுதல் போன்வற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகமானது பாரியளவில் வியாபித்திருக்கும் நிலையில் இவற்றுக்கான காரணங்களை கட்டாயமாக நாம் தேடிப் பார்க்க வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அணை கட்டுவதில் எந்தப் பயனுமில்லை. எனவே அசம்பாவிதம் நடக்க முன்னர் அதற்கான காரணம் என்ன அதே போல அதற்கான தீர்வு என்ன என்ற விடயங்களை அறிந்து அதுபடி நாம் செயற்படுவோமேயானால் இத்தகைய பாரிய குற்றச்செயல்கள் இடம் பெறுவதை நாம் தடுக்கலாம்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணம் என்ன வென்று சற்று அவதானித்தால் பாதுகாப்பின்மை, பெற்றோரின் கவனக்குறைவு, பொருளாதாரப் பலவீனம், சிறுவர்களின் அறியாமை, பெற்றோரின் விவாகரத்து, பெற்றோரின் வெளிநாட்டுப் பயணம், போதைக்கு அடிமையாதல், தனிமைப்படுத்தப்படல் போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

இன்று அதிகமான பெற்றோர் சிறு பிள்ளைகள் தானே என்று குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்து விடுவார்கள். இதனால் அரக்கர்கள் குழந்தைகளை இலகுவாக சீரழித்து விடுவார்கள். அதோபோன்று அவர்களது ஆடைகள் விடயத்திலும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். சிறுபிள்ளைதானே என்று  அங்கம் தெரிய உடுத்தி அழகு பார்க்கும் ஆடைகளே அவர்களுக்கு எமனாக அமைந்து விடக்கூடும். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலான ஆடைகளை சிறுவர்களுக்குக் கூட அணிவிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதில் இருந்து முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தனிமைப்படுத்தப் படும் போது அவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
குழந்தைகள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் எதர்பார்ப்பவர்களாகத்தான் இருப்பார்கள். தனிமைப்படுத்தப்படும் போது பெற்றோர் பாதுகாவலர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு இல்லமல் போகும். இச்சந்தர்பத்தில் அன்பும் அரவணைப்பும் யாரிடம் இருந்து கிடைக்கிறதோ அப்பக்கம் குழந்தை இலகுவாகச் சார்ந்துவிடும்.
இவ்வாறான சந்தரப்பங்களில் அரக்கர்கள் குழந்தைகளை இலகுவாக சீரழித்து விடுவார்கள். இனிப்புக்கள் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி குழந்தைகளின் மனதை இலகுவாக மாற்றிவிடுவார்கள்.
அதே மாற்றத்தோடு மறு பக்கம் தொலைபேசி, இணையத் தளங்களின் மூலமும் குழந்தைகளைக் குறிவைக்கின்றார்கள். விஞ்ஞான வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து கொண்டு போகும் தற்காலத்தில் கைத்தொலைபேசிகள், கணினிகள் நன்மை பயக்கும் அதே வேளை பயங்கர விளைவுகளுக்கும் அவை துணை போகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கையடக்கத் தொலைபேசியை ஒவ்வொரு நாளும் கட்டாயம் பெற்றோர் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் யாருடன் கதைக்கிறார்கள் அதில் என்ன பார்க்கிறார்கள் என்று பெற்றோர் அவதானிக்க வேண்டும்.
தனது பிள்ளை தொடர்பு வைத்துள்ள நபர் யார்? அவர் எப்படிப் பட்டவர் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்பு வைத்துள்ள நபர் அல்லது நண்பர் சந்தேகத்துக்குரியவர் என்றால் அவருடனான தொடர்பை உடனே துண்டித்துக் கொள்ளுமாறு கண்டிக்க வேண்டும். அதே போல் பிள்ளைகளின் கணினிகள், மடிக்கணினிகளை அடிக்கடி சோதனைக்குட்படுத்த வேண்டும்.
இன்று அதிகமான வீடுகளில் குழந்தைகளுக்கென்று தனித்தனியான அறைகள் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளில் குழந்தைகள் அறையில் என்ன செய்கின்றார்கள், எவ்வாறு நேரத்தைக் செலவளிக்கின்றார்கள் என்பதை பெற்றோர், பெரியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அதிகமான பெற்றோர் இதற்கு மாறாகவே நடந்து கொள்கிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்தக் கூடாது அவர்களை சுதந்திரமாக விடவேண்டும் என்று எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே இறுதியில் இது பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.
அடுத்த மிக முக்கியமான விடயம் இன்று வேலியே பயிரை மேயும் சம்பவங்களையே நாம் அதிகமாகக் கேள்விப் படுகிறோம். பாடசாலை அதிபர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களால் பல மாணவர்கள் சீரழிக்கப்பட்டதை அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இது விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகள் செல்லும் தனியார் வகுப்புக்கள் பாதுகாப்பானதா என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
இதே போன்று தான். உறவினர்களுடன் பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்லும் போதும் அவர்களுடன் பயணங்கள் அனுப்பும் போதும் அவர்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். அண்மையில் கிருலப்பனையில் நடந்த கோரச்சம்பவம் இதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஆறே வயதான துஷாந்தினி அச்சிறுமியை பலாத்காரத்துக்கு உற்படுத்தி கொலைசெய்தது மூன்றாவது நபர் அல்ல. அந்தப் பிள்ளையின் சித்தப்பாவா முறையானவரே. அதிலும் என்ன கொடுமை என்றால் அந்த நபர் அதற்கு முன்னர் தனது சொந்தத் தங்கையையும் கீட தவறாக நடத்த முயற்சித்திருந்தது தான்.
எனவே உறவினர்கள், சகோதரர்கள் என்று நம்பி குழந்தைகளை எமன் கையில் கொடுத்து விடாதீர்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு பாரிய தண்டனைகள் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில்  கைதானால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவர். பின்னர் 3 மாதமோ ஆறு மாதமோ சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து பணத்தைக் கட்டி பிணை என்ற பெயரில் வெளியே வந்துவிடுவார்கள்.
இதுவே இன்றளவில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு இலங்கையில் வழங்கப்படும் உச்சகட்ட தண்டனையாக உள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு மரண தண்டணை விதிக்கப்படவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் சிலர் முழங்கிக் கொண்டுள்ளார்கள். ஆனால் இது எந்தளவு சாத்தியப் படும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எனவே மரண தண்டனை என்பதைச் சொல்லிக்  கொண்டு காலத்தைக் கடத்துவதை விட்டு விட்டு வேறு ஒரு தீர்வைப் பற்றி அரசு கவனம் எடுப்பது சிறந்தாகும். இன்றைய சிறுவர்களை பாதுகாப்பது தனது கடமை என்பதையும் அரசாங்கம் மறந்து விடக்கூடாது. இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் பிள்ளை நாளைய ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரக்கூடியவராகவும் இருக்கலாம் அல்லவா?


Monday, July 9, 2012

இனி செல்போன்களை சார்ஜ் செய்யத் தேவையில்லை


நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன்
மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை பாவிக்காமல் வைத்திருந்தாலும் ஓரிரு நாட்களில் பற்றரி சார்ச் தீர்ந்துவிடும். சுவிச் ஓஃப் நிலையில் வைத்திருந்தாலும் இதே நிலைதான்.
இப் பிரச்சினைக்கு தீர்வு வந்துள்ளது.
XPAL Power நிறுவனம் தயாரித்திருக்கும் SpareOne என்ற பெயர் கொண்ட மொபைல் போனை ஒருமுறை சார்ச் பண்ணிவிட்டால், சுமார் 15 வருடங்களுக்கு மேலாக சார்ச் தீராது இருக்கும்.
இத் தொலைபேசியில் 10 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பேசமுடியும். போனை பாவிக்காது வைத்தால் அதன் சார்ச் 15 வருடங்களுக்கு அப்படியே இருக்கும்.
இத் தொலைபேசி தயாரிக்கப்பட்டதன் நோக்கம், அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகும்.

ஒருமுறை சார்ச் செய்து, சுவிச் ஓஃப் பன்ணி கைப்பையில் வைத்துவிட்டால் போதும், அவசர தேவைகளின் போது பயன்படுத்தலாம்.
இக் கைபேசியின் விலை வெறும் 50 டொலர்கள் என்பது மேலும் இனிப்பான செய்தி. இவ் வருட இறுதியில் சந்தைக்கு வர இருக்கிறது SpareOne.

Wednesday, June 20, 2012

பரிதாபமான வெளிநாட்டு வாழ்க்கை


அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று.
இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள் கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால் அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம் தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால் உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.
இங்கு பணி புரியும் பல தொழிலாளர்களின் நிலை பரிதாபமானது. ஏறத்தாழ 90 வீதத்தினர் வறுமையில்தான் வாழுகின்றனர். காலையில் இரண்டு குபூசை டீயில் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர் பலர் உள்ளனர். தங்கள் வசதிகளுக்கென்று மிகக் குறைவாக செலவழித்து மீதிப்பணத்தை ஊரில் காத்து நிற்கும் மனைவி பிள்ளைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலோர் ஒப்பந்த ஊதியத்தில் வருபவர்கள். ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். வேலைக்கு ஆளெடுக்கும் பல ஏஜெண்டுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இவர்கள், கட்டார் நாட்டில் வேலை, கை நிறையச் சம்பளம், குளிர்விக்கப்பட்ட வீடுகள், நல்ல உணவு, போக வர வாகன வசதி என்று அள்ளி விடுவார்கள். சொந்த நாட்டில் போதுமான அளவிற்குச் சம்பாதிக்க முடியவில்லை, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலர் இந்த ஏஜெண்டுகள் விரிக்கும் மாய வலையில் சிக்கி விடுவார்கள். கடவுச்சீட்டுக்காக, விசாவிற்காக இரண்டு இலட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஏஜெண்டுகள் வற்புறுத்துவார்கள். நிறையச் சம்பளம்தான் கிடைத்து விடுமே என்ற நம்பிக்கையிலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற ஆர்வத்திலும் கையிலிருக்கிற சேமிப்பு, மனைவி, பிள்ளைகளின் தங்க நகைகள் அனைத்தையும் அடகு வைத்து வருகிற பணம், சொந்தக்காரர், நண்பர்களிடம் வாங்கிய கடன் அனைத்தையும் கொண்டுவந்து ஏஜெண்டுகளிடம் கொடுப்பார்கள். கண்களில் கனவுகளுடன் – மனதில் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் மனைவி மக்கள் விடை கொடுத்து அனுப்புவர்.
இங்கு வந்து இறங்கும்போதுதான் தெரியும், எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று. இவர்களின் கடவுச்சீட்டு ஏஜெண்டுகள் கையில் இருக்கும். தப்பிக்க இயலாது. தஙகுவதற்கு கோழிக்கூண்டு போன்ற ‘போர்ட்டாகேபின்’ கள், ஒரே அறையில் அடுக்குக் கட்டில்களில் பலர், வேலை செய்யாத ஏர் கண்டிஷன்கள், வேலைக்குச் செல்ல குளிர்விக்கப்படாத பேருந்துகள் – இவர்கள் படும் அவதி சொல்லக்கூடியவை அல்ல. இந்தத் துன்பங்களை எல்லாம் தாண்டி பெருந்துன்பம் ஒன்று காத்துக்கொண்டிருக்கும். அதுதான் மிகக் குறைந்த ஊதியம். சாதாரணமாக ஒருவருக்கு ஆயிரம் ரியாலுக்கும் மிகக் குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அறுநூறிலிருந்து எண்ணூறு ரியால் ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதில்தான் வேலை வாங்குவதற்கென்று பட்ட கடன்களை அடைக்க வேண்டும், நகைகளை மீட்க வேண்டும், குடும்பத்தினர் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும். என்ன செய்ய இயலும்? சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியாது. நிர்ப்பந்தமான நிலை. தங்களையே மாய்த்துக்கொள்ளத் துணிந்து விடுகின்றனர் பலர்.
இந்நிலை மாற என்ன செய்ய முடியும்? இந்த நாட்டின்(கட்டார்) ஆட்சியாளர்களைக் குறை சொல்ல இயலாது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தாலும் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த ஏஜெண்டுகள் 75 வீதத்தை தங்களுக்கென்று எடுத்துக் கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் ஏஜெண்டுகள்தாம். ஆசை காட்டி மோசம் செய்கிறவர்கள்.
பல நாடுகளில் அரசாங்கமே வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் பணிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன. இங்கு பணிகளுக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஜெபராஜ் தேவசகாயம்
ஏஸ்ரீலங்கா