குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Sunday, August 5, 2012

சிறுவர் துஷ்பிரயோகம்

விஸ்வரூபம் எடுத்துள்ள 

சிறுவர்  துஷ்பிரயோகக் கலாசாரம்


பஹமுன அஸாம்


சிறுவர் துஷ்பிரோகம் என்பது இன்று சர்வசாதாரணமான ஒரு விடயம் போல வியாபித்துள்ளது. தினம் தினம் எங்கு பார்த்தாலும் இது தொடர்பில் ஏதாவது மனதை உலுக்கும் ஒரு செய்தி அல்லது சம்பவம் நமது காதுகளுக்கு எட்டிய வண்ணம் உள்ளன.
நாளாந்தம் வெளிவரும் தேசிய பத்திரிகைகளைப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு செய்தி சிறுமி துஷ்பிரயோகம், சிறுமி மீது தாத்தா சேஷ்டை என்று விதவிதமான ரைமிங் கலந்த தலைப்புக்கள் நிச்சயம் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், நாட்டின் கண்கள், எதிர்காலத்தின் தூண்கள் என்றெல்லாம் போற்றிக் கொண்டிருக்கும் அதேவேளை மறு பக்கம் துஷ்பிரயோகக் கலாசாரம் பூதாகரமாக வளர்ச்சியடைந்து நாளைய தலைவர்களை இன்றே நாசம் பண்ணிவிடுமோ என்ற அச்சம் ஆக்கிரமித்துள்ளது.
காமவெறி பிடித்த அரக்கர்களின் உடற் பசிக்கு எமது சின்னஞ்சிறு மொட்டுக்கள் பலியாவதை நினைக்கும் போது நல்ல இரத்தம் ஓடும் எந்தவொரு மனமும் பதராமல் இருக்காது.


உலகமறியாத பிஞ்சு உள்ளங்களிடம் தமது இச்சைகளைத் தீர்க்க முற்படுகிறவர்கள் நிச்சயமாக மனித இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் அரக்க குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள்.
சிறுவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை இரண்டுவிதமாகப் பிரித்து நோக்கலாம். முதலாவது உணர்வுரீதியான ரீதியிலான துன்புறுத்தல் இரண்டாவது உடலியல் ரீதியிலான துன்புறுத்தலாகும்.
உணர்வு ரீதியிலான துன்புறுத்தலில் சிறுவர்களுடன் ஆபாசமாகக் கதைத்தல், ஆபாசமான படங்களைக் காட்டுதல் போன்ற உணர்ச்சியைத் துண்டும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளும் உள்ளடங்கும்.
உடலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஸ்பரிசம் செய்தல், தொட்டு விளையாடுதல், உறவுகொள்ளுதல் போன்வற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகமானது பாரியளவில் வியாபித்திருக்கும் நிலையில் இவற்றுக்கான காரணங்களை கட்டாயமாக நாம் தேடிப் பார்க்க வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அணை கட்டுவதில் எந்தப் பயனுமில்லை. எனவே அசம்பாவிதம் நடக்க முன்னர் அதற்கான காரணம் என்ன அதே போல அதற்கான தீர்வு என்ன என்ற விடயங்களை அறிந்து அதுபடி நாம் செயற்படுவோமேயானால் இத்தகைய பாரிய குற்றச்செயல்கள் இடம் பெறுவதை நாம் தடுக்கலாம்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதற்கான காரணம் என்ன வென்று சற்று அவதானித்தால் பாதுகாப்பின்மை, பெற்றோரின் கவனக்குறைவு, பொருளாதாரப் பலவீனம், சிறுவர்களின் அறியாமை, பெற்றோரின் விவாகரத்து, பெற்றோரின் வெளிநாட்டுப் பயணம், போதைக்கு அடிமையாதல், தனிமைப்படுத்தப்படல் போன்ற பல விடயங்களைக் குறிப்பிடலாம்.

இன்று அதிகமான பெற்றோர் சிறு பிள்ளைகள் தானே என்று குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்து விடுவார்கள். இதனால் அரக்கர்கள் குழந்தைகளை இலகுவாக சீரழித்து விடுவார்கள். அதோபோன்று அவர்களது ஆடைகள் விடயத்திலும் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். சிறுபிள்ளைதானே என்று  அங்கம் தெரிய உடுத்தி அழகு பார்க்கும் ஆடைகளே அவர்களுக்கு எமனாக அமைந்து விடக்கூடும். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலான ஆடைகளை சிறுவர்களுக்குக் கூட அணிவிப்பதில் இருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
மேலும் குழந்தைகளைத் தனிமைப்படுத்துவதில் இருந்து முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளவேண்டும். தனிமைப்படுத்தப் படும் போது அவர்கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்படுவார்கள்.
குழந்தைகள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் எதர்பார்ப்பவர்களாகத்தான் இருப்பார்கள். தனிமைப்படுத்தப்படும் போது பெற்றோர் பாதுகாவலர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு இல்லமல் போகும். இச்சந்தர்பத்தில் அன்பும் அரவணைப்பும் யாரிடம் இருந்து கிடைக்கிறதோ அப்பக்கம் குழந்தை இலகுவாகச் சார்ந்துவிடும்.
இவ்வாறான சந்தரப்பங்களில் அரக்கர்கள் குழந்தைகளை இலகுவாக சீரழித்து விடுவார்கள். இனிப்புக்கள் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி குழந்தைகளின் மனதை இலகுவாக மாற்றிவிடுவார்கள்.
அதே மாற்றத்தோடு மறு பக்கம் தொலைபேசி, இணையத் தளங்களின் மூலமும் குழந்தைகளைக் குறிவைக்கின்றார்கள். விஞ்ஞான வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்து கொண்டு போகும் தற்காலத்தில் கைத்தொலைபேசிகள், கணினிகள் நன்மை பயக்கும் அதே வேளை பயங்கர விளைவுகளுக்கும் அவை துணை போகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் கையடக்கத் தொலைபேசியை ஒவ்வொரு நாளும் கட்டாயம் பெற்றோர் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் யாருடன் கதைக்கிறார்கள் அதில் என்ன பார்க்கிறார்கள் என்று பெற்றோர் அவதானிக்க வேண்டும்.
தனது பிள்ளை தொடர்பு வைத்துள்ள நபர் யார்? அவர் எப்படிப் பட்டவர் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். தொடர்பு வைத்துள்ள நபர் அல்லது நண்பர் சந்தேகத்துக்குரியவர் என்றால் அவருடனான தொடர்பை உடனே துண்டித்துக் கொள்ளுமாறு கண்டிக்க வேண்டும். அதே போல் பிள்ளைகளின் கணினிகள், மடிக்கணினிகளை அடிக்கடி சோதனைக்குட்படுத்த வேண்டும்.
இன்று அதிகமான வீடுகளில் குழந்தைகளுக்கென்று தனித்தனியான அறைகள் காணப்படுகின்றன. இத்தகைய வீடுகளில் குழந்தைகள் அறையில் என்ன செய்கின்றார்கள், எவ்வாறு நேரத்தைக் செலவளிக்கின்றார்கள் என்பதை பெற்றோர், பெரியவர்கள் அவதானமாக இருக்க வேண்டும். அதிகமான பெற்றோர் இதற்கு மாறாகவே நடந்து கொள்கிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்தக் கூடாது அவர்களை சுதந்திரமாக விடவேண்டும் என்று எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே இறுதியில் இது பாரிய பிரச்சினைகளுக்குள் தள்ளிவிடும்.
அடுத்த மிக முக்கியமான விடயம் இன்று வேலியே பயிரை மேயும் சம்பவங்களையே நாம் அதிகமாகக் கேள்விப் படுகிறோம். பாடசாலை அதிபர்கள், தனியார் வகுப்பு ஆசிரியர்களால் பல மாணவர்கள் சீரழிக்கப்பட்டதை அண்மைக்காலங்களில் ஊடகங்களில் வெளியான செய்திகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இது விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகள் செல்லும் தனியார் வகுப்புக்கள் பாதுகாப்பானதா என்பதில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.
இதே போன்று தான். உறவினர்களுடன் பிள்ளைகளை தனியாக விட்டுச் செல்லும் போதும் அவர்களுடன் பயணங்கள் அனுப்பும் போதும் அவர்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். அண்மையில் கிருலப்பனையில் நடந்த கோரச்சம்பவம் இதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. ஆறே வயதான துஷாந்தினி அச்சிறுமியை பலாத்காரத்துக்கு உற்படுத்தி கொலைசெய்தது மூன்றாவது நபர் அல்ல. அந்தப் பிள்ளையின் சித்தப்பாவா முறையானவரே. அதிலும் என்ன கொடுமை என்றால் அந்த நபர் அதற்கு முன்னர் தனது சொந்தத் தங்கையையும் கீட தவறாக நடத்த முயற்சித்திருந்தது தான்.
எனவே உறவினர்கள், சகோதரர்கள் என்று நம்பி குழந்தைகளை எமன் கையில் கொடுத்து விடாதீர்கள்.
இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு பாரிய தண்டனைகள் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில்  கைதானால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவர். பின்னர் 3 மாதமோ ஆறு மாதமோ சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து பணத்தைக் கட்டி பிணை என்ற பெயரில் வெளியே வந்துவிடுவார்கள்.
இதுவே இன்றளவில் சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு இலங்கையில் வழங்கப்படும் உச்சகட்ட தண்டனையாக உள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு மரண தண்டணை விதிக்கப்படவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் சிலர் முழங்கிக் கொண்டுள்ளார்கள். ஆனால் இது எந்தளவு சாத்தியப் படும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான தண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.


எனவே மரண தண்டனை என்பதைச் சொல்லிக்  கொண்டு காலத்தைக் கடத்துவதை விட்டு விட்டு வேறு ஒரு தீர்வைப் பற்றி அரசு கவனம் எடுப்பது சிறந்தாகும். இன்றைய சிறுவர்களை பாதுகாப்பது தனது கடமை என்பதையும் அரசாங்கம் மறந்து விடக்கூடாது. இன்று துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் பிள்ளை நாளைய ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ வரக்கூடியவராகவும் இருக்கலாம் அல்லவா?