குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Sunday, September 7, 2014

அளுத்கமயில் என்ன நடந்தது?

அஸாம் தாவுஸ்

அண்மைக்காலமாக முஸ்லிம் பள்ளிவாசல் களும் இந்துக் கோவில்களும் விஷமிகளால் சேதமாக்கப்படுவதும் உடைக்கப்படுவதும் அடிக்கடி இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அத்தாக்குதல்களை நிரந்தரமாக நிறுத்துவதற்கு இந்த அரசாங்கமோ சம்பந் தப்பட்ட அரசியல் தலைமைகளோ எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  அவ்வாறு, குறிப்பிட்ட இனவாதிகளால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அரசு தலையிட்டு உடனுக்குடன் கட்டுப்படுத்தியிருந்தால் இன்று அநியாயமாக  5 உயிர்களை காவுகொடுத்திருக்க வேண்டி ஏற்பட்டிருக்காது. 

கடந்த வியாழக்கிழமை பொசன் போயா தினத்தன்று அளுத்கமவில் இருவருக்கி டையில் ஏற்பட்ட வாக்குவாதமே இன்று பாரியளவில் பூதாகரமாகி வெடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. 
 “பதிராஜகொடை ஸ்ரீ சுமங்கல பிரிவேனா தேரர் தனது காரில் சென்று கொண்டிருந்த போது  பாதையோரத்தில்  நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அவரது பயணத்துக்கு இடையூறாக இருந்துள்ளன.  அப்போது தேரரின் காரை ஓட்டிச் சென்ற சாரதி இறங்கிச் சென்று  போக்குவரத்துக்கு இடைஞ்சலான முறையில் பாதையில் வாகனங்களை நிறுத்தியிருந்தமை தொடர்பில் அங்கிருந்த முஸ்லிம் இளைஞர்களை மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியுள்ளார். அப்போது கார் சாரதிக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து காரினுள் இருந்த பதிராஜகொடை ஸ்ரீ சுமங்கல பிரிவேனா தேரர் விகாரைக்கு ஓடிச் சென்று சம்பவத்தைக் கூறியுள்ளார். 


அத்துடன் தேரர்,  சில ஆதரவாளர்களுடன் பொலிஸ் நிலையம் குறிப்பிட்ட முஸ்லிம் இளைஞர்கள்  சென்று தன்னைத் தாக்கியதாக பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சாரதியுடன் கைகலப்பில் ஈடுபட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில்  வைக்கப்பட்டனர்.  தடுப்புக் காவலில் இருக்கும் நேரத்தில் பொலிஸார் மற்றும் சில தேரர்களும் அங்கு வைத்து அவர்களைத் தாக்கியதாக அளுத்கமையில் இருந்து ஹுஸைமத் என்பவர் உதயசூரியனுக்குத் தெரிவித்தார். 

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுபலசேனா அமைப்பு அளுத்கமவில் பாரிய கூட்டமொன்றையும் ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடத்தப் போவதாக அறிவித்தது. இவ் அறிவித்தலைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புக்களான அகில இலங்கை ஜெமியதுல் உலமா, இலங்கை முஸ்லிம் கவுன்சில், வக்பு சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ., முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனம் போன்றன இச்சந்தர்ப்பத்தில் இதுபோன்ற தொரு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்துவது பாரிய உயிராபத்துகளை ஏற்படுத்தும் எனவும்  பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் தெரிவித்து இவ்வார்ப்பாட்டப் பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டாம் என பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொண்ட போதும் அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 


அளுத்கமவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவ்வாறானதொரு ஒன்று கூடல் இடம்பெறாமல் இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான பௌத்த மக்கள் கலகொட அத்தே ஞானசார தேரரின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலான  ஆக்ரோஷ மான உரையைக் கேட்டிருக்கவும் மாட்டார்கள். பௌத்த மக்கள் ஆத்திரமடைந்திருக்கவும் மாட்டார்கள். 

  கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற பொதுபலசேனா அமைப்பின் கூட்டத்தில் கலகொட அத்தே ஞானசார தேரர் பௌத்த மக்கள் கொந்தளிக்கும் விதத்தில் மிக நீண்டதொரு உரையை ஆற்றியுள்ளார். இந்த உரையின் நிறைவில் பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டப் பேரணி  ஆரம்பமாகியது. இப்பேரணியில் பொதுபலசேனா அமைப்புடன் இராவண பலய, புத்தசாசன பாதுகாப்புக் கமிட்டி என்பனவும் இணைந்து கொண்டன.  உணர்ச்சிவசப்பட்டிருந்த பௌத்த மக்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி கோஷமிட்டுக் கொண்டு ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்தனர். 

இதற்கிடையில் தமது வணக்கஸ்தலத்தைத் தாக்கிவிடுவார்கள் என்று அச்சமடைந்த முஸ்லிம் தரப்பினர் சுமார் 400 பேர்வரை  பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கில் அங்கு ஒன்று கூடினார்கள்.   
இச்சந்தர்ப்பத்திலேயே சில விஷமிகளால் கல் எறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு இனத்துக்கிடையிலும் ஏற்பட்ட கைகலப்பு உக்கிரமடைந்து கலவரமாக வெடித்துள்ளது.
  
இதன் போது அப்பகுதியில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கலவரம் மேலும் உக்கிரமடைந்தது.  சுமார் 5.30 மணியளவில் ஆரம்பமான இக்கலவரம் 6.30 வரை ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் நீடிக்கவே 6.45 அளவில் பொலிஸார்  ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தனர்.  இருப்பினும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நேரத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் அட்டகாசம் ஓயவில்லை. மாறாக இந்த ஊரடங்குச் சட்டம் கலகக்காரர்களுக்கு மிகவும் சாதகமாகவே அமைந்தது.  பள்ளியைப் பாதுகாக்கும் நோக்கத்தில் முஸ்லிம் தரப்பு ஆண்கள் பலரும் பள்ளிவாசலில் இருக்க கலகக்காரர்கள் ஊருக்குள் நுழைந்து முஸ்லிம்களின் வீடுகள், வியாபார ஸ்தலங்கள் என்பவற்றை உடைத்து தீ மூட்டி எரிக்க ஆரம்பித்தார்கள். வீடுகளில் இருந்த ஒரு சில ஆண்களும் தமது குடும்பத்தில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக நின்றதனால் கலகக்காரர்களை எதிர்த்து நிற்க முஸ்லிம்தரப்பினரால் முடியாமல் போய்விட்டது.  

இச்சம்பவத்தில்  முக்கியமான கேள்வியாக இருப்பது கண்டனப் பேரணிக்காகச் சென்றவர்களுடைய கைகளுக்கு பெற்றோல், வாள், கத்திகள், தடிகள்  என்பன  எவ்வாறு கிடைத்தன என்பது தான். இதிலிருந்து ஆர்ப்பாட்டப் பேரணிக்காகச் சென்றவர்கள் முன்கூட்டியே கலவரத்தை மேற்கொள்ளத் தயார் நிலையிலேயே அங்கு சென்றுள்ளார்கள் என்பது தெளிவாகப் புரிகின்றது. 

மேலும் கலவரத்தின் போது 7 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் குண்டடிபட்ட ஏழு பேரும் முஸ்லிம்கள் இந்த 7 பேரில் ஏன் கலகக்காரர்களில் ஒருவரைக்கூட துப்பாக்கி ரவைகள் பதம் பார்க்கவில்லை. கலவரத்தின் போது வெடித்த துப்பாக்கிகள் பாதுகாப்புப் படையினரது மட்டும்தானா அல்லது கலகக்காரர்களுடைய துப்பாக்கிகளும் களத்தில் இறங்கியதா என்பது பாரிய கேள்விக் குறிதான்.  

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் கலவரம் இரவு 3 மணி வரை தொடர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்தில் இருக்க ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தும் அவ்வளவு நேரம் கலவரம் தொடர்ந்தமைக்கான காரணம் என்ன?


ஊரடங்குச் சட்டமும், பாதுகாப்புப் படையினரும் சரியாகச் செயற்பட்டிருந்தால் இன்று அளுத்கம மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள முஸ்லிம்களது வீடுகள், வாகனங்கள் மற்றும் பெறுமதியான உடமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கும். எனவே சம்பவ தினம் ஊரங்குச் சட்டம் முஸ்லிம் தரப்பினருக்கு மாத்திரம் தானா என்பது யோசிக்க வேண்டிய விடயம் தான். 

எது எப்படியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 இற்குப் போட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டது. இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் 12 மணிவரை மக்களின் நலன்கருதி   ஊரடங்குச்சட்டத்தை பொலிஸார்  சற்று நேரம் தளர்த்தினர்.
அந்த நேரம் மக்களுக்கு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள  போதுமானதாக இருக்க வினலை. காரணம் ஊருக்குள் உள்ள அனைத்துக் கடைகளும் எரித்து நாசமாக்கப்பட்டு விட்டன. மக்கள் பொருட்களை வாங்க  நீண்ட தூரம் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு சென்று வர குறித்த நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமானதாக இருக்க வில்லை. இதனால் நேற்றைய தினம் காலை 8 மணிக்கு மீண்டும் ஊர்வலத்தைத் தளர்த்தியமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 2500 பேர் பேருவளை ஜாமியா நளீமியாவில் தஞ்சமடைந்திருந்த போதும் பாதுகாப்புக் கருதி திங்கட்கிழமை நண்பகல் முதல் பேருவளை அல் ஹுமைசரா கல்லூரியில் தங்கவைக்கப்பட்டனர். 

இத்தனை சம்பவமும் நடந்தேரிய நிலையில் முஸ்லிம்களின் ஆலமரமாக இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் சிரிப்புவராத கோமாளிக் கூத்தாகவே உள்ளது. கடந்த திங்கட் கிழமை சம்பவ இடத்துத்துக்குச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கண்ணீர் மல்க மிக உருக்கமான வார்த்தைகளை முன்வைத்தார். அதாவது நான் அரசாங்கத்துடன் இருக்கும் போது எனது மக்களுக்கு இவ்வாறான தொரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இனியும் நான் இந்த அரசாங்கத்துடன் இருக்க வேண்டுமா என்று  அன்றைய தினம் காலை பாதிக்கப்பட்ட மக்கள் முன்பாக தன்னைத்தானே கேட்டுக் கொண்ட அவர், அன்று மாலை நேரமே அரசாங்கத்தை விட்டு விலகி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை இன்னும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என்று அறிக்கை விடுகின்றார். 

இவ்வளவு காலமும் சிறு சிறு அசம்பாவிதங்கள் நடந்தபோது மௌனமாக இருந்த அரசியல் தலைமைகள் இச்சம்வத்துக்குப் பிறகாவது ஒரு முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்த முஸ்லிம் மக்களுக்கு இதிலும் பெரிய ஏமாற்றம் தான் எஞ்சியது. 

பொலிவியாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ,  ஏனைய சம்பவங்களைப் போன்று இச்சம்பவத்துக்கும் டுவிட்டரில் தனது அனுதாபச் செய்தியை விடுத்துள்ளதோடு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

எது எப்படியோ முஸ்லிம்களின் நிலையை சர்வதேசம் தெரிந்து கொள்ள 5 உயிர்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டமைதான் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 



Wednesday, December 25, 2013

தேவயாணிக்காக சங்கீதாவை மறந்துவிட்ட இந்திய அரசு

அஸாம் தாவுஸ்

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத்தூதுவராகப் பணியாற்றிய தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவையும் சீற்றமடைய வைத்துள்ளது. விசா மோசடி காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவாயனி கோபர்கடேவைப் பற்றி ஊடகங்கள் மற்றும் அரச தலைவர்களின்  அனுதாப மற்றும் கோப  அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 

தேவயானி கோபர்கடேவின் கைது பற்றி கவலைப்படுகிறவர்கள் கோபப்படுகின்றவர்கள் அவர் தனக்கு வழங்கப்பட் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்ததை மறந்து போனமைதான் ஏனென்று தெரியவில்லை. ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத ஒருவர் கைது செய்யப்பட்டது போன்று இந்திய அரசு ஆவேசப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.

தனது பிள்ளைகளின் முன்னால் கைது செய்தமை , கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றமை, நிர்வாணமாக்கி சோதனையிட்டமை, பெரிய குற்றங்களைச் செய்த கைதிகளுடன் சேர்த்து வைத்திருந்தமை போன்றன அமெரிக்கக் காவல் துறையினரின் அதிகப்படியான செயல்தான்.

இருப்பினும் இந்தக் கருத்துக்களை நியூயோர்க் நகர அரசுதரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா மறுத்துள்ளார். தேவயானி குழந்தைகளின் முன் கைது செய்யப்படவோ அவருக்கு கைவிலங்கிடப்படவோ இல்லை என்றும், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு தொலைபேசியில் உரையாட அனுமதித்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தேவயானி ஒரு தனியறையில் பெண் அதிகாரியொருவரினாலேயே சோதனையிடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் பிரீத் பராரா ஒரு இந்திய வம்சாவழி அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயானி மீது முறைப்பாடு செய்தது ஒரு இந்தியப் பெண். அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது இந்திய வம்சாவழியில் வந்த ஒருவர். எனவே இந்த கைது விடயம் வீட்டுப் பிரச்சினையை ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கொண்டு  சென்ற ஒரு விடயமே தவிர,  இந்திய அரசு அமெரிக்காவைக் குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
 தேவயானி ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர். அவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை தனது சுயநலனுக்காகவே துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த விடயங்கள் தேவயானி வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் சென்ற சங்கீதா ரிச்சார்ட் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதென்றே கூறலாம். மேலும் இது போன்ற பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதில் பிழையேதும் இருக்காது.
தேவயானியைக் கைது செய்தமைக்காக ஆத்திரப்பட்ட இந்திய மக்கள் அதே இந்திய மண்ணில் பிறந்த சங்கீதா ரிச்சார்ட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

தேவயானியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காகவும் அவரின் இரு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காகவும் அழைத்துச் செல்லப்பட்டவர்தான் சங்கீதா ரிச்சார்ட். பொதுவாகவே வெளிநாடுகளில் வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுதல், கொலை, சித்ரவதை, சரியான ஊதியம் வழங்காமை என்று பல துன்பங்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை எல்லா நாடுகளிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்தவரிசையில் தான் சங்கீதா ரிச்சார்ட்டும் இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளார். 
 தேவயானியின் வீட்டு வேலைகளுக்காகவும் அவரது இரு பெண் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காகவும் சங்கீதா ரிச்சார்ட்டை தேவயானி நியூயோர்க் அழைத்துச் சென்றுள்ளார்கள். ஒப்பந்தத்தில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் சங்கீதா ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வரை வீட்டு வேலைகளைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மாதாந்தம் 4500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதாக  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 473 டொலரே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா ஒரு நாள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நியூயோர்க் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வழக்கறிஞரை நாடி விடயத்தைச் சொல்லியுள்ளார். அன்றிலிருந்து தான் தேவயானியின் தலையெழுத்து மாற்றியெழுதப்பட்டது.

சங்கீதா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தேவயானி ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார். சங்கீதா ரிச்சார்ட்டின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தேவயானி பற்றி மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. சங்கீதா குட்டையை குழப்பி விட தேவாயனியின்  விசா மோடி விடயமும் அம்பலத்துக்கு வந்தது. அமெரிக்க விசா பெற்றுக் கொள்வதற்காக சங்கீதா பற்றிய பிழையான தகவல்களை வழங்கியுள்ளார் தேவயானி. மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விட குறைவான சம்பளத்தைக் கொடுத்து அமெரிக்க அரசுக்கு பொய்யான கணக்கு காட்டியது பெரிய தவறாகும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.    

கைது செய்யப்பட்ட தேவயானி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி குற்றங்களுக்காக 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.

இவ்வாறிருக்க தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு வழக்கைத் திரும்பப் பெறாவிட்டால் இந்திய. அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியா தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் அளித்த பேட்டியொன்றில் தேவயானி கோபர்கடே மீதான வழக்கு திரும்பப் பெறவோ மன்னிப்புக் கோரவோ மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்  
இந்நிலையில் தேவயானியை ஐ. நா.வின்  இந்திய அரசின் நிரந்தர அதிகாரியாக நியமித்துள்ளது இந்திய அரசு. இதன்மூலம் அவர் துணைத் தூதர் என்ற அந்தஸ்தில் இருந்து தூதரக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதனால் அவருக்கு முன்னரை விட அதிகமான சலுகைகளும் பாதுகாப்பும் கிடைப்பதோடு< அவரை எளிதில் கைது செய்யவும் முடியாது.

பணிப்பெண்ணுக்கு எதிராக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடே இழைத்த குற்றங்கள் தொடர்பாக பேசுவதை விட்டுவிட்டு, தேவயானி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டும் இந்திய அரசு மற்றும் ஊடகங்கள் என்று எல்லோரும் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. சங்கீதாவும் தன்னாட்டுப் பிரஜை என்பதை இந்திய அரசு மறந்துவிட்டதா அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் தவரிழைத்தால் அது குற்றமிழைத்தால் அது குற்றமில்லையென இந்திய அரசு கருதுகிறதா?




Saturday, December 14, 2013

கொலையில் முற்றுப் பெற்ற காதல் கதை

பஹமுன அஸாம்

திரைப்படங்களைப் பார்ப்பதைப் போன்று குற்றச் செயல்கள் தற்போது சர்வ சாதாரணமான ஒரு விடயமாகப் போயுள்ளன.கொலை கொள்ளை பாலியல் துஷ்பிரயோகம் என்று நேற்றுப் பிரசுரமான செய்தி தவறுதலாக இன்று பிரசுரமாகி விட்டதோ என்று என்னும் அளவுக்கு தினமும் பல்வேறு சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்த வண்ணமே உள்ளன.

அதிலும் காதல் கள்ளத் தொடர்புகளால் ஏற்படும் கொலைகள் அண்மைக் காலத்தில் சற்று அதிகமாகவே பதிவாகியுள்ளன என்றுதான் கூறவேண்டும்.
அந்தவகையில் ஒரு இளம் ஜோடியின் காதல் கதை கடைசியில் காதலனின் கொலையில் முற்றுப் பெற்ற சம்பவம் வாரியபொல மடிகேமிதியாலையில் இடம் பெற்றுள்ளது.

மார்க்கப்பற்று நற்பண்புள்ள ஒரு இளைஞனாக சுற்றித்திருந்தவர் தான்  யூசுப் ஹினாயா உம்மா தம்பதியி ன் கடைக்குட்டியான 18 வயதான  ரிபாத். யார் வம்பு தும்புக்கும் போகாமல் நிறைய நற்பெயரை சம்பாதித்துள்ளார் என்பதை அவரால் ஊரான மிதியாலையில் உள்ள ஒருசிலரோடு கதைத்த  போது தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி,  வடமேல் மாகாணசபைத் தேர்தல் முடிந்து  மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.  மிதியாலையிலும் ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவை சாப்பிட்ட ரிபாத் தனது நண்பர்கள் இருவருடன் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். தனது மகன் வெளியே செல்லும் கடைசிப் பயணம் அது என்பதை ரிபாதின் தாயார் அன்று அறிந்திருந்தால் நிச்சயமாக அவரை வெளியே போக விட்டிருக்க மாட்டார்
நண்பர்களோடு கூட்டத்தில் பங்கேற்ற ரிபாத் இரவு 9.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பினார். வீடு செல்லும் வழியில் ஒரு கடையில் 2 ஐஸ் கிறீம் கப்களை வாங்கிக் கொண்டார். தனது நண்பர்கள் இருவருடனும் பல கதைகளையும் கதைத்துக் கொண்டு போகும் போது தான் ரிபாதின் கைத் தொலைபேசி அலறியது. தொலைபேசித் திரையில்  தனது காதலியின் பெயரைக் கண்டதும் காதலுக்கு உரித்தான இனம் புரியாத ஒரு சந்தோசம். இருந்தாலும் மறு பக்கத்தில் இருந்து அழைப்பது தனது உயிரைக் பறிக்கப் போகும் எமன் என்பதை ரிபாத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“நீங்க ரெண்டு போரும் போங்க நான் ஒரு இடத்துக்குப் போய்ட்டு வாரன்ஹ என்று ரிபாத் தன்னுடன் வந்த இரு நண்பர்களிடமும் சொன்ன போது அதை மறுத்த நண்பர்கள் இருவரும் நாங்களும் வருகிறோம்  என்றார்கள். “இல்லை இல்லை நான் அவசரமா போய் வாரான் நீங்க போங்க’ என்று சொல்லி நண்பர்கள் இருவரையும் அனுப்பிவிட்டுத்  தனியாக சென்றார்.

நேரம் பதினொன்று பனினிரேண்டு என்று கடிகாரமுள் ஓடிக் கொண்டிருக்க மகன் ரிபாதை இன்னும் காணவில்லை என்று பெற்றோர் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அதிகாலை 3 மணியையும் தாண்டி விட்டது. ரிபாதை இன்னும் காணவில்லை. அச்சம் கொண்ட பெற்றோர் நாலா பக்கமும் ரிபாதை தேட ஆரம்பித்தார்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட ரிபாத் அதிகாலை சுபாஹ் தொழுகைக்காக பள்ளிக்கு வருவார் என்று எதிர்பாத்த குடும்பத்தினருக்கு அதிலும் ஏமாற்றம் தான் கிடைத்தது. இருந்தும் ரிபாதை தேடும் பணியில் இருந்து யாரும் ஓயவில்லை. 

காலை 6.30 மணியளவில் ரிபாதின் சகோதரர் ஒருவர் அவர் கற்ற பாடசாலைக்குச் சென்று தேடிப்பார்த்த போது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. தான் சிறுவயது முதல் படித்த பாடசாலையில்  உள்ள ஒரு கட்டிடத்திற்குள்  ரிபாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தாய்ப்பாசத்தைப் பங்கு போட்டுக் கொண்ட  தனது சகோதரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் காணும் போது யாருக்குத்தான் இதயம் பதறாமல் இருக்கும். கதறியழுத ரிபாதின் அண்ணன் ஓடிச் சென்று தனது சகோதரனின் உடலை மீட்டார். 

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மகனுக்கு என்ன பிரச்சினை. யாருக்கும் தொல்லை கொடுக்காது தன் பாடு தன் வேலை என்று இருக்கும் ரிபாத் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம். குடும்பத்தார் உட்பட ஊர்மக்களுக்கும் ரிபாதின் மரணம் ஒரு புதிராகவே இருந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து ரிபாதின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதுகிலும் இடது கையிலும் அடித்த காயங்கள் காணப்பட்டதாகவும் அதற்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும். தூக்கில் தொங்கியமையே மரணத்துக்கான காணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் பலரது சந்தேகங்களுக்கு மத்தியில் ரிபாதின் சடலம் மண்ணுக்குள் அடங்கிப் போகின்றது. சடலம் அடக்கப்பட்டாலும் அந்த மரணம் தொடர்பிலான சந்தேகங்களும் சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை. அதற்குக் காரணம் ரிபாதின் மரணத்தில் சில விடயங்கள் ஒன்றுக் கொன்று முரணாகக் கணப்பட்டன.

ரிபாத் வீடு திரும்பும் போது வாங்கிய ஐஸ் கிறீம் கப்கள் இரண்டையும் காணவில்லை. அதை சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் எங்கும் தென்படவில்லை. அத்தோடு  இரவு கையில் இருந்த ரிபாதின்  இரண்டு கைத் தொலைபேசிகளையும் காணவில்லை. பாடசாலை வளவில் உள்ள கினற்றின் வாளிக் கயிறே பயன்படுத்தப்பட்டிருந்த போதும் அங்கிருந்த வாளியைக் காணவில்லை. மேலும் தூக்கில் தொங்கிய கயிற்றின் முடிச்சு வித்தியாசமாக இருந்ததோடு இரண்டரை அடி உயரத்தில் ஏறி நின்று  தூக்கில் தொங்க எந்த தளபாடத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லை. மேற்படி விடயங்கள் அனைவரதும் சந்தேகத்தை மேலும் தூண்டிவிட்டன.

சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் சென்றபோது பொலிஸார் விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை இதனால் ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் கடந்த 03 ஆம் திகதி வாரியப்பெல பொலிஸாருக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள்.  அதன் பலனாக ரிபாதின் கொலை தொடர்பான விசாரணைகள் குளியாப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் அதிரடியாக களத்தில் இறங்கியதால் குற்றவாளிகளால் நீண்டநாள்  பதுங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரிபாதின் மரணத்தில் இருந்த சில கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்த பொலிஸார் கடைசியில் ரிபாதின் காதலியின் தந்தை சகோதரன் மற்றும் மாமா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  அவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து ரிபாதின் கொலைக்கான மர்மம் துலங்க ஆரம்பித்தது.

இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரிபாதின் தொலைபேசிக்கு வந்த அழைப்பு ரிபாதின் காதலியிடமிருந்தாகும். அந்த அழைப்புக்கு பின்னர் தனது நண்பர்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு காதலியைக் காண்பதற்காகவே அவர் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். காதலியின் வீட்டாருக்கு இவர்களது காதல் பிடிக்காததால் ஆரம்பத்தில் இருந்து அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்துள்ளார்கள்.  வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலியின் அறைக்குப் பக்கத்தில் சென்று  யன்னல் ஓரத்தில் நின்று உரையாடிய அந்த இளம் காதல் ஜோடி தாம் சந்தித்துக் கெள்ளும் கடைசி சந்திப்பு  அதுவென்றும் தமது கண்கள் ஒன்றை ஒன்று பாரத்துக் கொள்ளும் கடைசிப் பார்வை அதுதான் என்றும் ரிபாதோ ரிபாதின் காதலியோ அப்போது அறிந்திருக்க மாட்டார்கள்.

இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த காதலியின் தந்தையும் சகோதரனும் ரிபாதை  தாக்கியுள்ளார்கள். ரிபாத் மயங்கி கீழே விழுந்துள்ளான். ரிபாத் சுயநினைவுக்கு வராததால்  உடனடியாக செயற்பட ஆரம்பித்த குடும்பத்தினர் விஷயம் வெளியே தெரியாமல் இருக்கவும் தாம் தப்பித்துக் கொள்வதற்கும் உடனடியாக ஒரு திட்டத்தைத் தீட்டுகின்றார்கள்.
இரவோடு இரவாக ஒரு மோட்டார் சைக்கிளில் ரிபாத்தை நடுவில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்த கிணற்றின் வாளிக் கயிற்றைப் எடுத்து ரிபாதின் களுத்தில் கட்டி தூக்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

இத்தோடு தனது மகளின் சகோதரியின் காதலும் முடிந்து விட்டது காதலனும் முடிந்த விட்டான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது. எப்போதாவது  உண்மை வெளியே வரும் அந்தவிதத்தில் தான் மண்னோடு புதைந்து போக இருந்த ரிபாதின் மரணம் தொடர்பான உண்மைகளும் வெளியே வந்து விட்டன. 

அடக்கம் செய்யப்பட்டிருந்த ரிபாதின் சடலம் கடந்த 07 ஆம் திகதி தோண்டி எடுக்கப்ட்டு மேலதி விசாரணைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.

எது எப்படியோ சில நொடிகள் யோசிக்காது அவசரப்பட்டுச் சொய்யும் காரியங்களால் பலரது எதிர்கால வாழ்க்கை  வீணாகிப் போகின்றது என்பது தான் உண்மை.


Wednesday, September 25, 2013

தாயின் கல்லக்காதலனால் துஷ்பிரயோகப் படுத்திக் கொல்லப்ட்ட ஒரு வயதுக் குழந்தை

பச்சிளம் மொட்டுகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்வதும் அவ்வாறு துஷ்பிரயோகப் படுத்திய உலகம் அறியாத பிஞ்சுக்குழந்தைகளைக் கொன்று வயலிலும் ஆற்றிலும் வீசிவிட்டுச் செல்வது தொடர்பான செய்திகளுக்கு இன்றைய ஊடகங்களில் பஞ்சமே இல்லை. இவ்வாறான சம்பவங்கள் ஒரு நாளைக்கு ஒன்றேனும் வரும் என்ற நிலை மாறி பக்கத்துக்கு ஒரு செய்தி என்று வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வாறு காமுகர்களின் பசிக்கு இரையாகும் அதிகமான உயிர்கள் தனக்கு என்ன நடந்தது என்பதையே அறிந்துகொள்ள முடியாத பருவத்தில் உள்ளமையே பரிதாபகரமான விடயம்.
இவ்வாறானதொரு  சம்பவம் கடந்த 16 ஆம் திகதி வெலிமட பொரகஸ் என்ற பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.   அனுஷா சந்துனி என்ற ஒரு வருடமும் இரண்டு மாதங்களுமேயான குழந்தை  தனது தாயின் கள்ளக் காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

ஜெயசித்ராவின் முதலாவது மகளுக்கு  5 வயது. இரண்டாவது மகள் அனுஷா. தனது திருமண வாழ்க்கை முறிந்து போனதால் இரு பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைத்து விட்டு வரக்காபொல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு, வீட்டு வேலைக்காரியாகச் சென்றாள் ஜெயசித்ரா.

அங்கு வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் போது அதே வீட்டில் வேலை பார்த்த சூரசேன என்பவருடன் ஜெயசித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டது.  சிறிது காலத்தில் இவர்களது இந்த முறையற்ற தொடர்பை வீட்டுக்காரர்கள் அறிந்து கொள்ள ஜெயச்சித்ரா, சூரசேன இருவரும் வேலையை விட்டு அனுப்பப்பட்டார்கள்.

இவ்வாறு வேலை பறிபோன ஜெயசித்ரா தனது  தாயின் பாதுகாப்பில் இருந்து இரண்டாவது மகள் அனுஷாவையும் அழைத்துக் கொண்டு சூரசேனவின் ஊரான  உடபுசல்லாவ ரக்வானைக்குச் சென்றாள்.  அங்கு அவர்களது குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கு வருமானமோ வழியோ ஒழுங்காக அமையாததால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெலிமட பொரகஸ் பிரதேசத்துக்குச் சென்றார்கள்.  அங்கு அன்றாட கூலி வேலைகளைச் செய்து தமது வாழ்க்கையை நடத்த ஆரம்பித்தார்கள்.

தனக்கு ஒரு விடிவுகாலம் ஆரம்பித்து விட்டது என்று எண்ணி புதிதாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜெயசித்ரா, துரதிர்ஷ்ட வசமாக கடந்த 16 ஆம் திகதி நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். சூரசேன ஜெயசித்ராவை வெலிமடை வைத்தியசாலையில் அனுமதித்து அவளுக்குத் தேவையானவற்றைச் செய்து விட்டு அனுஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றான்.

அவ்வாறு வீட்டுக்குச் சென்ற சூரசேன மீண்டும் 17 ஆம் திகதி அதிகாலை அனுஷாவைத் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஒடி வந்தான். மகளுக்கும் திடீரேன்று என்னமோ நடந்து விட்டது என்று வைத்தியசாலையில் அனுமதிக்கிறான். வைத்தியசாலையில் அனுஷாவைப் பரிசோதித்த வைத்தியர்கள் அனுஷாவின் உயிர் பிரிந்து நீண்ட நேரமாகிவிட்டதை உறுதிப்படுத்துகிறார்கள். அத்தோடு சூரசேனவும் காணாமல் போய்விட்டான்.

சூரசேன காணாமல் போனதும் குழந்தையின் இறப்பும் சந்தேகத்துக்கிடமாக இருந்ததால் வெலிமட நீதவானின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக அனுஷாவின் உடல்  பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது.

பிரேத பரிசோதனை முடிவுகளின் படி குழந்தையின் தலையில் பலமாக அடித்ததனாலும் மூளைக்கு அதிக இரத்தம் சென்றதனாலும் குழந்தையை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததனாலுமே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அது மாத்திரமன்றி உடம்பில் சிகரெட்டால் சுட்ட வடுக்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சில நாட்களின் பின் கைதான சூரசேன பொலிஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் “கடந்த 16 ஆம் திகதி ஜெயசித்ராவை வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு வீட்டுக்குச் சென்ற பின்னர் வீட்டில் குழந்தையை நள்ளிரவு வரை பாலியல் ரீதியாக பல துன்புறுத்தல்களைச் செய்தேன். அப்போது குழந்தை பலமாகக் கத்த ஆரம்பித்தது. பக்கத்தில் உள்ளவர்களுக்கு கேட்டுவிடும் என்பதனால் கையைப் பொத்தி குழந்தையின் தலையில்  மூன்று முறை தட்டினேன். அப்போது குழந்தை அமைதியடைந்து தூங்கிவிட்டது. இரவு இரண்டு மணியளவில் குழந்தையின் உடல் குளிர்ந்து காணப்பட்டது. அப்போது தான் வெலிமட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றேன். அங்கு குழந்தையை ஒப்படைத்துவிட்டு நான் உடபுசல்லாவைக்குச் சென்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளான்.

தந்தையே சொந்த மகளை வல்லுறவுக்குட்படுத்தும் இந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளை வைத்துள்ள தாய்மார் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். கன்னிப் பெண், பிஞ்சுக் குழந்தை என்ற வித்தியாசம் இல்லாமல் தமது வெறியைத் தீர்த்துக் கொள்ளும் அரக்கர்களிடம்  இருந்து தமது பிள்ளைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும். ஒரு விபரீதம் நடந்த பின்னர்  அழுது புலம்புவதில் பயனில்லை. முக்கியமாக கற்பு என்றால் என்ன என்றே அறியாத சிறுவயது பிள்ளைகளின் நடவடிக்கைகளில் எப்போதும் அவதானமாக இருக்க வேண்டும். காமுகர்கள் அப்பிள்ளைகளின் அறியாமையை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். எமது பிள்ளைகளின் அழிவுக்கு நாமே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்போம்.

Saturday, July 13, 2013

நோக்கத்தை மறந்து செயற்படும் துறவிகள்

பஹமுன அஸாம்

யுத்த வெற்றிக்குப்பின்னர் சேதமடைந்த வீதிகள் திருத்தப்படுகின்றதோ இல்லையோ தெருவுக்கொரு புத்தர் சிலை மாத்திரம் நிருவப்பட்டு வருகின்றன. எங்கே நமது வீட்டுக்கு முன்னாலும்  இரவோடு இரவாக புத்தர் சிலை முளைத்திருக்மோ என்ற அச்சத்துடனேயே கண்விழிக்கவேண்டியுள்ளது.

சிறு பான்மை இனம் என்ற ஒன்று இனி இல்லை. இலங்கையில் இனி இரண்டே இனம் தான். அது ஆண் இனம், பெண் இனம் என்று மேடைகளில் கம்பீரமாக அறிக்கைவிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெறும் இந்த இனவாத அடக்குமுறைகள் பற்றிக் கேள்விப்படுவதில்லை போலும்.

அயலவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஏனைய மதத்தவர்களுடன் எவ்வாறு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரியாதவர்கள் மதகுருமார்களாக இருப்பது தான் வேடிக்கை(வேதனை)க்குரியதாக உள்ளது.

அண்மைக்காலமாக பல இடங்களில் இரவோடு இரவாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட செய்திகளை அடிக்கடி கேள்விப்பக்கூயதாக விருக்கும். 

கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடியில்  புத்தர் சிலை ஒன்று அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே போன்று யாழ்ப்பாணம் குருநகர் மடத்தட்டிப் பகுதியில் கடந்த வெசாக் தினத்தன்று இராணுவத்தினரால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.  இவ்வாறு சில சமயங்களில் புத்தர் சிலை வைப்பது தடுத்து நிருத்தப்பட்ட போதும் பல சந்தர்ப்பங்களில் புத்தர் சிலைகள் நிருவப்பட்டதை தடுத்து நிறுத்த முடியாமல் போனது கவலைக்குறியதாகவே உள்ளது.


இவ்வாறான ஒரு சம்பவம் தான் கடந்த 30ஆம் திகதி வாழைச்சேனையில் பதிவாகியது.வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறந்துரைச்சேனை அல் அஸ்கர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று முளைத்துள்ளது. 

வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் உள்ள அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பனவற்றுக்குப் பொதுவாக உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் இம்மைதானத்திலேயே இடம்பெற்று வருகின்றன. இவ்வாறிருக்க கடந்த 2010 மார்ச் மாதம் 1ஆம் திகதி மைதானத்துக்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி øமாதனத்தின் சுற்று மதிலை உடைத்து விட்டு இது விகாரையின் காணி என்றும் இதில் வெளியாட்கள் யாரும் இனி விளையாட வரக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தால் இவ்விடயம்  தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. கடந்த மாதம் 25 ஆம் திகதி மைதானம் பாடசாலைக்குரியது என்று  நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இருந்த போதும் வாழைச்சேனை புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் கடந்த முப்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக மைதானத்தில் ஒரு மேசையின் மீது புத்தர் சிலையை வைத்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தின்போது விகாரையின் காணிகளை முறையாக பராமரிப்பு செய்ய முடியாமல் போனதால் தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படுவதாகவும். விகாரைக்கு தற்போது குறைவான காணியே உள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமல்ல புத்த ஜயந்தி விகாரைக்கான காணியை மீட்கும் போராட்டமாகும் என்றும் புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் புத்தர் சிலை வைப்பிற்கான காரணத்தைக்  குறிப்பிட்டுள்ளார். 

பௌத்த துறவிகள் என்போர் உலக இன்பங்களைத் துறந்து ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று எல்லோரும் அறிந்திருக்கிறோம்.  ஆனால் இன்றைய ஒருசில பௌத்த துறவிகள் உலக இன்பங்களில் மூழ்கி தமது நோக்கத்தை மறந்து செயற்படுகிறார்கள் என்பதை  எண்ணும்போது தான் கவலையாக உள்ளது.

Sunday, July 7, 2013

மாணவனை மிருகத்தனமாகத் தாக்கிய அதிபர்

பஹமுன அஸாம்

பாடசாலைகள் என்பது நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் இடம். அத்தகைய புனிதமான இடங்கள் இன்று சர்ச்சைக்குரிய இடங்களாக மாறிவருகின்றமையை அவதானிக்கக்கூடியதாவுள்ளது

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்தது. மாணவரொருவர் அதிபரைத் தாக்கியமை  அத்தோடு ஹொரணைப் பிரதேச பாடசாலை அதிபரொருவரால் பதினொராம் தரத்தில் கற்கும் 15 வயது மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டமை.  அந்தச் சூடு தணிவதற்குள் திறந்த பல்கலைக்கழக சட்ட பீட தலைவரை சட்டபீட மாணவரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியமை என கல்வித்துறை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

இவற்றின் பரபரப்புகள் தணிவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த 26 ஆம் திகதி தொடங்கொடைப் பகுதியில் பதிவாகியுள்ளது. பொசன் வெளிச்சக் கூடு போட்டியொன்றின் பரிசிலை அமைச்சரிடம் இருந்து தனக்குப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் ஆத்திரமடைந்த அப்பாடசாலையின் அதிபரான பெண் பரிசிலைப் பெற்றுக் கொண்ட மாணவனை மிருகத்தனமாக அடித்து வைத்திய சாலைக்கு அனுப்பிய செய்திதான் அது.

கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு வெசாக் வெளிச்சக்கூடு போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைப் படைப்புகளில் ஆர்வம் காட்டிய தொடங்கொட நவோத்யா மகா வித்தியாலய 11 ஆம் தர மாணவனான இஷார ஜயலத் இப் போட்டியில் தானும் கலந்து கொண்டு முதல் பரிசை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தொடங்கொட பொலிஸ் நி லயைப்  பொறுப்பதிகாரியை நாடினான். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்ட இஷார ஜயலத் அதைப் பூர்த்தி செய்து அதிபரின் உறுதிப்படுத்தலோடு அதனை மீண்டும் பொலிஸ் நிலைத்தில் கையளித்தான்.

இஷார எப்படியாவது முதல் பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு உற்சாகமாக பொசன் வெளிச்சக்கூட்டைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டான். பொசன் போயா தினமன்று இஷாரவின் வெளிச்சக்கூடுகளும் ஏனையவற்றுடன் சளைக்காமல் கம்பீரமாக நின்றது. பலரும் பார்த்து ரசித்த அந்த வெளிச்சக்கூடு நடுவர்களையும் கவர்ந்து விட்டது.  இஷாரவின்  முயற்சி வீண்போகவில்லை. அவன் எதிர்பார்த்தது போலவே போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிக் கொண்டான்.

போட்டிக்கான பரிசில் வழங்கும் வைபவம் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் இடம் பெற்றது. அப்போது முதல் பரிசைப் பெற்றுக் கொண்ட பாடசாலையின் பெயர் சொல்லப்பட்ட போது இஷார மகிழ்ச்சியாக சென்று தனக்குக் கிடைத்த முதல் பரிசு 15000 ம் ரூபாவை  அமைச்சர் குமார வெல்கமவிடம் இருந்து பெற்றுக் கொண்டான். ஆனால் அந்த மகிழ்ச்சி மேடையை விட்டு இறங்கிய ஓரிரு கணப்பொழுதுகளில் தவிடுபொடியாகி விட்டது. தனது கற்பனைத் திறனுக்கும் கலை முயற்சிக்கும் கிடைத்த பணத்தை அதிபர் பறித்துக்கொண்டு “நான்  மேடை ஏறி பெற்றுக் கொள்ள இருந்த பணத்தை நீ ஏன் சென்று பெற்றுக் கொண்டாய்’ என்று கேட்டு இஷாரவை கடுமையாகத் திட்டியுள்ளார்.

தான் கஷ்டப்பட்டு வெற்றி பெற்ற பணம் பாடசாலைக்குத் தானே என்று மனதைத் தேற்றிக் கொண்ட இஷார மறு நாள் 26 ஆம் திகதி வழமை போல பாடசாலைக்குச் சென்றான். காலைக் கூட்டம் நடைபெறும் போது ஒரு ஆசிரியர் “மெடம் மேடைக்குச் சென்று பெற்றுக் கொள்ள இருந்த பணத்தை நீ ஏன் மேடைக்கு சென்று பெற்றுக் கொண்டாய். சரி கூட்டம் முடிந்ததும் அதிபரைப் போய் சந்தி’ என்று சொல்லியிருக்கிறார். கூட்டம் முடிய சற்று மனப் பதறலோடு அதிபரைச் சந்தித்த இஷாரவுக்கு முதல் நாள் கிடைத்ததை விடப் பெரிய பரிசு கிடைத்தது. தாறுமாறான பிரம்படி. தான் மேடை ஏறி பெற்றுக் கொள்ள இருந்த பரிசை இஷார பெற்றுக் கொண்டதை பொறுக்க முடியாத அந்த பெண் அதிபர் இஷாரவைப் பிரம்பினால் கண்டபடி அடித்துள்ளார்.

26 ஆம் திகதி இஷாரவின் பெற்றோர் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது இஷார வீட்டில் இருக்கவில்லை. “வெளிச்சக்கூடு போட்டியில் பரிசு பெற்றுக் கொண்டதற்காக கூட்டம் முடிந்து எல்லோர் முன்னிலையிலும்  அதிபர் எனக்கு கண்டபடி அடித்தார். எனக்கு இனி பாடசாலை செல்ல முடியாது. எனக்கு அவமானமாக உள்ளது. நான் வீட்டை விட்டுச் செல்கிறேன்’ என்று கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்றிருந்தான். இஷாரவின் பெற்றோர் ஊர் முழுவதும் தேடியும் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் ஒரு காட்டுக்குள் இருந்து இஷாரவைக் கண்டு பிடித்த பெற்றோர் அவனது உடம்பில் 20 இற்கும் மேற்பட்ட பிரம்படித் தழும்புகள் இருந்தக் கண்டு பதறிப் போனார்கள். சம்பவம் தொடர்பாக தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்கள். பொலிஸார் உடனடியாக இஷாரவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கடிதமொன்றைக் கொடுத்து அனுப்பினார்கள்.

அதிபரின் இந்த நடவடிக்கை மிருகத்தனமாகவே உள்ளது. இஷார கஷ்டப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற பரிசு. அதை அவனே மேடை எறிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிபர் அதனை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்ததைக் கண்டித்து வீதியில் இறங்கி பதாதைகள் ஏந்தி கோஷம் போட்டவர்கள்  இஷாரவின் விடயத்தில் ஒன்றுமே செய்யாமல் வாய்மூடி இருப்பதற்கு என்ன காரணம்? ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கின்றோம், கண்ணியப் படுத்துகிறோம். ஆனால் அவர்களின் இது போன்ற மிருகத்தனமான செயல்களை எவ்வாறு பொறுத்துக் கொள்வது.?

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் இதுவரையில் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் யாரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் பரகும்பா வீரசிங்கவைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் தொடர்பாக அவர்களது கருத்தைக் கேட்டதற்கு  இச்சம்பவத்தை தான் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்த முறைப்பாடோ அறிவித்தலோ தனக்கும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும்  தவறுசெய்திருந்தால் உரிய நபர் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அந்த பொசன் வெளிச்சக்கூடு போட்டி கல்விக் காரியாலயத்தின் அனுமதியோடு நடைபெற்ற ஒன்றா என்பன போன்ற விடங்யங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்

ஒரு ஆசிரியையை அவமானப்படுத்தியதற்காக ஒரு மாகாண சபை உறுப்பினரையே கைது செய்தவர்கள், ஒரு மாணவனை நியாயமான காரணமில்லாமல் மிருகத்தனமாக அடித்து காயப்படுத்திய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி எதுவும் நடக்காதது போன்று  இருப்பது மாணவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயலாகவே உள்ளதுடன் அந்த ஆசிரியரின் மருகத்தனமான செயலை நியாயப் படுத்துவதுமாகவே உள்ளது.




Thursday, June 27, 2013

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்; கருத்துக்களம்

                               பஹமுன அஸாம்

அண்மைக்காலத்தில் எமது நாட்டில் சர்ச்சையைக் கிளப்பிய விடயங்களில் ஒன்று தான் முஸ்லீம் பெண்களின் ஆடை விவகாரம். பொது பலசேனா போன்ற இனவாதஅமைப்புக்கள் இன்னும் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில தேவையற்ற கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. 

மன்னம்பிட்டிய, பாணந்துறை போன்ற இடங்களின் அபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட போது எந்த முஸ்லீம் அரசியல் வாதியும் வாய்திறக்கவில்லை. அதேசமயம் இந்தியாவில் ஒரு தேரர் தாக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடயத்தை ஜெனீவாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தேசிய பட்டியல் முஸ்லீம் தரப்பு எம்.பி. கவலைப்பட்டதைப் பலர் அறிந்திருப்பீர்கள். தனது சமூகத்திலுள்ள பெண்களுக்கு  பிரச்சினை ஏற்பட்ட போது வாய்மூடி இருந்து விட்டு ஆக்கிரமிப்பு வர்க்கத்தினர் கொடுக்கும் காசுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்படும் இப்படிப்பட்டவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும் மக்களே இவர்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கான முழுப் பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையே பின்பற்றுகிறார்கள். திருமணம் விவாகரத்து போன்ற எல்லாமே ஷரீஆ சட்டப் பிரகாரமே மேற் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தனக்கு திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்ளிடத்தில் தனது உடல் அங்கங்கள் தெரியும் விதத்தில் நடந்து கொள்வது ஹராமாகும். கை,கால் பாதம், முகம் போன்றவற்றைக் காட்ட அணுமதி உள்ளது.

மெல்லிய, இறுக்கமான ஆடைகள், உடலின் அங்கங்கள் தெரியக் கூடிய ஆடைகள் அணிவதும் ஹராமாகும். தனது வீட்டுக்குள் பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் வெளியே செல்லும் போது மார்க்கம் அனுதித்ததன் பிரகாரமே ஆடைஅணிகலன்களை அணிய வேண்டும். 
பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அபாயாக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன.  
அபாயா விடயத்தில் பொதுபலசேனா அமைப்பால் அண்மையில் பல சர்ச்சைகள் கிளம்பின. எனவே இந்த அபாயா விடயத்தில் பொதுபலசேனாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவ்வமைப்பின் இணைப்பாளர் பேராசிரியர் டிலன்த விதானகேயைத் தொடர்பு கொண்டு கேட்ட போது;


முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதை நாம் ஒரு மத ரீதியான பிரச்சினையாகப்  பார்க்கவில்லை.  பொது இடங்களில் முகத்தை மூடி நடமாடுவதைத் தான் எதிர்க்கின்றோம். 
ஒருவர் முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு வந்தால் அவர் யார் எப்படிப்பட்டவர் என்ற எதையும் எம்மால் இனங்கண்டு கொள்ள முடியாது. உதாரணமாக பாதையில் செல்கின்ற வாகனங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டிருந்தால் (டின்டட்) பொலிஸார் அவற்றை அகற்றி விடுகின்றனர். ஏனென்றால் அவர்களால் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று அறிந்து கொள்ள முடியாது. அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும். 
அதே போன்று தான் முகத்தை மூடி ஆடை அணிவதால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே தான் நாம் இந்த ஆடைகளை எதிர்க்கின்றோம். அவர்கள் வீட்டிலும் தனிப்பட்ட இடங்களிலும் எவ்வாறு வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். ஆனால் பொது இடங்களில் முழுமையாக மறைத்து இருப்பதையே நாம் எதிர்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

அபாயாவிடயத்தில் பொதுபலசேனா அமைப்பினர் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து கூறும் நியாயம் இதுதான்.

இதே வேøளை இது தொடர்பாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இஸ்லாம்  மற்றும் இஸ்லாமிய நாகரீக விரிவுரையாளர் எம்.ஆர் .அஸாத்திடம்  முஸ்லிம் பெண்கள் ஏன் அபாயா அணிகிறார்கள். இதனால் என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டபோது;

“இன்று நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாலியல் பலாத்காரம் வல்லுறவு போன்றவை பாரியளவில் இடம்பெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதுதான். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பலவிதமான ஆடைகளை அணிந்து  பொது இடங்களில் செல்கிறார்கள். குறிப்பாக சில ஆடைகள் பாலியல் உணர்வுகøள் தூண்டுவனவாகவே உள்ளன. அபாயாவைப் பொறுத்தவரையில் அந்த நிலமை இல்லை.  அவ்வகை ஆடைகள் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைவதில்லை. எனவே அவர்கள் குற்றச்செயல்களில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணி அவர்கள் அணியும் ஆடைகள் தான். 

அபாயாக்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. உண்மையில் இது ஒரு தவறான கருத்தாகும். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அபாயாவை விரும்பியே அணிகிறார்கள். 

இதேவேளை இன்று ஒரு சில பெண்கள் அபாயாவை ஒரு ஆடம்பரப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் அனுமதித்த வரையறைக்கு அப்பால் போய் இறுக்கமானவையாகவும், கவர்ச்சியாகவும் அணிகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினாலேயே அபாயாவின் தனித்துவம் சிதைக்கப்பட்டு ஏனையவர்கள் அதை விமர்சிக்கும் நிலைக்கு போயுள்ளது எனலாம். 

அபாயாவின் முக்கியமான நோக்கம் எமது உடலை மற்றவர்களுக்குக் காட்டக் கூடாது என்பதாகும். இந்த ஆடையின் மூலமாக அல்லாஹ்வின் திருப்தியை நாம் பெறுகிறோமா என்பதிலும் அதை அணிபவர்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

அதே போன்று இந்த அபாயா தொடர்பாக தனது கருத்துக்களை இவ்வாறு தெரிவிக்கின்றார் குருநாகல் ஹுசைனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.இலியாஸ் மௌலவி;

முஸ்லீம்கள் இஸ்லாம் மதம் அண்மைக்காலமாக  கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருவதை அறிவார்கள். அதிலும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகளைப் பற்றியும் பலர் விமர்சனம் செய்கிறார்கள் குறிப்பாக பெண்களின் ஆடைகள் தொடர்பில் இன்று பலவிதமான சர்சைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் விதமான சிறப்பான ஆடை முறையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

ஆனால் இன்று ஒரு சில முஸ்லீம் பெண்கள் இந்த அபாயாவை ஒரு நாகரீகஉடடையாகக் (பேஷனாக) கருதி அணிகிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய ஒரு விடயமாகும். என்று கவலையுடன்  தனது கருத்தைச்  சொன்னார்.

உண்மையில் இந்த அபாயாக்களைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு  ஒரு பயனுள்ள பாதுகாப்பான ஆடையாகவே உள்ளது. இன்று பலர் அதை அறியாமல் அணிவதும் அதைப்பற்றிக் கதைப்பதும் தான் கவலைக்குரியதாக உள்ளது.

பலர் இன்று முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற அதே நேரத்தில், ஒரு தேரர் முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பைப் பற்றி நல்ல முறையில் கூறியுள்ளமை தான் வியப்பாக உள்ளது. 


சர்வமத ஆய்வு வட்டம் அண்மையில் நிப்போன் ஹோட்டலில் நடத்திய  செய்தியாளர் மகாநாட்டில் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறிய கருத்து இவ்வாறு இருந்தது;

முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கம் மிக்கதாகும். முஸ்லீம் மாணவிகள் அணியும் ஆடைகள் சிறப்பானவை. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். அண்மையில் முஸ்லீம் நாடொன்றுக்கு நான் சென்றபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை மிகவும் அழகாகவும் இருந்தன எனவே அந்த ஆடை அமைப்பை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்தக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதத்திலேயே அமைந்திருக்கின்றது. அபாயா விடயத்தில் பிரச்சினை எழுவதற்கு ஒரு சிலரின் இனவாத தூண்டுதல்களே காரணமாகும்.

முழுமையாக உடை அணிந்து ஒழுக்கமாக செல்பவர்களை பிடிக்காத அந்த விஷமிகளுக்கு பெண்கள் அரைகுறை ஆடையுடனும்  கவர்ச்சியாகவும் செல்வது தான் பிடிக்கும் போலிருக்கிறது.



Wednesday, June 12, 2013

மாடு அறுப்பது மாத்திரம் தானா பிரச்சினை


                                                                -பஹமுன அஸாம்-

காலத்தின் வேகத்துக்கு ஏற்ப பல வளர்ச்சிகளைக் கண்டு கொண்டு மிக வேகமாகப் பயணித்துக்கு கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அந்த வளர்ச்சிகளுக்கு நிகராக பல பிரச்சினைகளும் காலத்துக்குக் காலம் புகைந்து கொண்டே தான் இருக்கும். அவை சமூகம் சார்ந்தவையாகவோ அல்லது தனி மனிதர்கள் சார்ந்தவையாகவோ இருக்கலாம். தனி மனிதர் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரு சமுகத்தின் பிரச்சினையாக திசை திருப்பி அதில் குளிர் காய நினைப்பவர்கள் எத்தனையோ பேர். 

அந்த விதத்தில் சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்து தற்போது ஓரளவுக்கு ஓய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் மிருகவதை. உண்மையில் மிருக வதை என்று எதனைச் சொல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. வெறுமனே இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை மாத்திரம் தூக்கிப் பிடித்து பாரிய ஒரு பிரச்சினையாக திசை திருப்பிக் கொண்டிருப்போருக்கு அநியாயமாகக் கொல்லப்படும் ஏனைய உயிர்கள் பற்றிய எண்ணங்கள் வருவதில்லை போலும்.

ஒரு நாளைக்கு எத்தனைபன்றிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை ஆயிரம் கோழிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை இலட்சம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவைகள் உயிரினங்களின் வரிசையில் வருவதில்லையா? இவற்றின் உயிருக்கு பெறுமதியில்லையா.? ஒவ்வொரு நாளும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகளின் தொகையைவிட பல மடங்கு கோழிகள் மற்றும் மீன்கள் போன்ற உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இது வரையில் இவை பற்றி யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
சரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி யுத்தத்தின் போது எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. அவை உயிர்கள் இல்லையா? ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் மீதே இவ்வளவு கருணை காட்டும் இந்த (அநியாயத்துக்கு) நல்ல உள்ளங்கள் அன்று அவ்வளவு மனித உயிர்கள் காவுகொள்ளப்படும் போது எங்கு(தூங்கப்)போயிருந்தார்கள் என்று தான் புரியவில்லை. 


இன்று ஒரு புத்த பிக்கு, மாடு அறுக்கிறார்கள் என்று அதனை எதிர்த்துத் தீக்குளித்தார். 26 வருடங்களுக்கு முன்பு அரந்தலாவை பஸ் குண்டு வெடிப்பில் 30 பிக்குகள் கொல்லப்பட்டார்களே! அப்படியானால் ஒரு மாட்டின் உயிரை விட இந்த 30 பிக்குகளின் உயிர்களும் பெறுமதியற்றுப் போய்விட்டதா என்று தான் தெரியவில்லை.

இறைச்சிக்காக  ஆடு மாடு கோழி பன்றி போன்ற விலங்குகளை வளர்ப்பது உலகில் பிரபல்யமான ஒரு கைத் தொழிலாகவே உள்ளது. பல நாடுகள் இன்று ஏற்றுமதி  செய்யும் அளவுக்கு பெரிய பண்ணைகளை வைத்து நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து கனடா, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளையும் குறிப்பிடலாம். ஏன் காந்தி வாழ்ந்த இந்திய மண்ணில் கூட இறைச்சிக்காக மாடுகள் கோழிகள் அறுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 900 கோடி விலங்குகள் அறுக்கப்படுவதாகவும் அத் தொழிலில் 5 இலட்சத்து 30 ஆயிரம் போர் ஈடு பட்டுள்ளதாகவும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரம் கனடா வருடமொன்றுக்கு 65 கோடி விலங்குகளை அறுப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வருடமொன்றுக்கு 30 கோடி விலங்குகளையும் 400 கோடி கோழிகளையும் அறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் 130 ற்கும்  மேற்பட்ட மாடுகளும் 100 ற்கும்  மேற்பட்ட ஆடுகளும் அறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆடு மாடுகளை அறுப்பதால் அவற்றில் எந்தவிதமான குறைவுகளும் ஏற்பட்டதாக இதுவரையில் எங்கும் பதிவாகவில்லை. மாறாக முன்னரை விட தற்கால சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றின் தொகையும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. பூனைகளும் நாய்களும் வருடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குட்டிகளை ஈணுகின்றன. அதிலும் ஓரே சூலில் மூன்றுக்குக் குறையாத குட்டிகளை அவை ஈணுகின்றன. அவற்றை யாரும் அறுப்பதில்லை. அவை பட்டியாக வாழ்வதும் இல்லை. ஆனால் மாடுகள் வருடத்துக்கு ஒரு முறை தான் கன்று போடுகின்றன. அதுவும் ஒரு கன்றுதான். இப்படியிருந்தும் இவ்வளவு மாடுகள் அறுக்கப்பட்டும் அவற்றின் பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு சம நிலை பேணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

அண்மையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி கோடிக்கணக்கில் கோழிகள் குவியல் குவியலாகப் அழிக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டன. மேற்கவ் என்ற வியாதி பரவிய காலத்தில் மில்லியன் கணக்கான மாடுகள் கொன்று எரிக்கபட்டன. இவற்றினால் மாட்டிறைச்சிக்கோ கோழி இறைச்சிக்கோ பெரிதாக தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த இன்றை காலத்தில் இயந்திரங்கள் மூலம் ஓரே நாளில் பல்லாயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் எம்மில் அநேகமானவர்கள் அறிந்திருப்பார்கள்.

நமது வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால். இன்று போல் விதவிதமான உணவுகளோ உடன் உணவுகளோ அன்று இருக்கவில்லை. விவசாயம் செய்தும் வேட்டையாடியுமே நமது முன்னோர்கள் ஜீவித்தார்கள். பௌத்தர்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் போற்றும் பண்டைய அரசர்கள் கூட வேட்டையாடி இறைச்சியைச் சாப்பிட்டுள்ளார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக தேவநம்பிய தீஸ மன்னன் காட்டுக்கு மான் வேட்டையாடச் சென்ற சமயமே மகிந்த தேரரைச் சந்தித்து பௌத்த மதத்தை தழுவிக் கொண்டார் என்ற வரலாற்றை பலரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே ஆரம்பக்கால பௌத்த மக்களிடமும் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் பழக்கம் இருந்தமை உறுதியாகின்றது.

மேலும் தாய்லாந்து பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். அந்நாட்டு மக்கள் விஷப்பாம்புகளை உணவாக உற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் மிகவும் விலை உயர்ந்த உணவாக மாட்டிறைச்சி கருதப்படுகிறது. இவர்கள் சமைக்காத மீன்களையும் உட்கொள்கின்றனர்.  வியட்நாம் மக்கள் ஈசல், கரப்பான் பூச்சிகளையும் உணவாக உட்கொள்கின்றனர். இந்த நாடுகளில் எல்லாம் பேசப்படாத மிருக வதை  இலங்கையில் மாத்திரம் பேசப்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் மாடு அறுப்பதல்ல சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினை. அது ஒரு  இன ரீதியான பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக மீன்பிடித்துறையை எடுத்துக் கொண்டால் 70 வீதமான மீனவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் அனைவரும் மீனை உட்கொள்கிறார்கள். எனவே மீன் பிடித்தலுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மீறி யாரும் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் கிளர்ந்து எழுந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

எனவே இலங்கையில் ஆடு மாடு கோழிகள் அறுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்றதாகும். மாடு அறுப்பதைத் தடை செய்வதானால் கோழி அறுப்பது மற்றும் மீன் பிடிப்பது என்பவற்றையும் தடை செய்யவேண்டும். ஆடு மாடு கோழி வளர்ப்பினால் இன்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுகின்றன. வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றில் அதிகமான சிங்களவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனவே இவற்றைத் தடை செய்தால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பலருக்கு தொழில் வாய்ப்பின்றிப் போகும் என்பதில் ஐயமில்லை.  
பஹமுன அஸாம்

Thursday, May 30, 2013

தற்கொலை பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல!

பஹமுன அஸாம்


2013.05.17 வவுனியா தாண்டிக்குளம்.
3 பெண் பிள்ளைகள் உயிரிழப்பு.

2013.05.21 ஹொரணை.
                                4 நாள் வயதுடைய குழந்தை உயிரிழப்பு.

2013.05.21 திஸ்ஸமகாராம யுதகண்டிய.
5 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

2013.05.27 வாழைச்சேனை மீராவேடை.
இரு பெண் குழந்தைகள் உயிரிழப்பு




மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் 16 செல்வங்களில் கிடைத்தற்கரியது மழலைச் செல்வம். அது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்துவிடாது.ஒரு குழந்தைக்காக எத்தனையோ விரதமிருந்து கோயில் குளமெனவும் வைத்தியசாலைகளிலும் ஏறி இறங்கி ஏங்குபவர்கள் எத்தனையோ பேர்.

அப்படியும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் குழந்தைப் பாக்கியம் கிடைக்õமல் பலர் ஏங்கும் நிலையில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கிணற்றிலும் ஆற்றிலும் தள்ளிவிடும் பெற்றோரை என்னவென்று சொல்வது.

அண்மைக்காலமாக குடும்பத்தோடு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் அது தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. கடந்த  17 திகதியில் இருந்து இன்று வரையான 13 நாட்கள் அதாவது அரை மாத கால இடைவெளியில் மாத்திரம் பெற்றோரின் அசட்டுத்தனமான முடிவால் 7 குழந்தைகள் அநியாயமாக தமது உயிரைப் பலிகொடுத்துள்ளார்கள். 

அந்த வரிசையில் முதலாவது சம்பவம் கடந்த 17 ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றது. தாயொருவர் தனது மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி வீழ்த்திவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றார். இருந்தும் பிரதேச வாசிகளால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் லதுர்சிகா(6வயது), சன்சிகா (2 1/2வயது), மற்றும் நிதர்சிகா (1 1/2வயது) ஆகிய பெண்குழந்தைகள்  இச்சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். தாயின் மனநிலை சரியின்மை மற்றும் குடும்பத்தின் வறுமை நிலமை என்பனவே இக்கொலைக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தன.

இச்சம்பவத்தின் அதிர்ச்சியும் கவலையும் மக்கள் மனதில் இருந்து அகல்வதற்கு முன்னர் அதாவது ஒருவாரத்துக்குள் அது போன்று மற்றுமொரு சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஹொரணையில் இடம்பெற்றது. தாயொருவர் பிறந்து நான்கு நாட்களேயான குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இம்மண்ணில் மலர்ந்து நான்கு நாட்களேயான அந்த மொட்டு பூமியின் மணத்தை நுகர்வதற்குள் கசக்கி எறியப்படுகிறது. 

அதே தினத்தில் மற்றுமொரு சம்பவம் திஸ்ஸமகாராம யுதகண்டிய பிரதேசத்தில் இடம்பெறுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 55 வயதுடைய தந்தையும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று சம்பவங்களைத் தொடர்ந்து நான்காவது சம்பவத்துக்கு மிக நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. மூன்றாவது சம்பவம் இடம் பெற்ற நாளில் இருந்து சரியாக 6ஆவது நாள் அடுத்த சம்பவமும் இடம் பெறுகிறது. அச்சம்பவம் 27 ஆம் திகதி வாழைச்சேனை மீராவோடையில் பதிவாகின்றது.  தாயொருவர் தனது இரு பெண் குழந்தைகளுடனும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றார். இச்சம்பவத்தில் இரு குழந்தைகளும் பலியாக தாய்காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். 



பூஜா(7வயது) மற்றும் மேனுஜா(3 வயது) ஆகிய பெண் குழந்தைகளே சம்பவத்தில் கொல்லப்படுகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக இந்தப் பெண் பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. 

பொதுவாகப் பார்க்கும் போது நடைபெற்ற எல்லாச் சம்பவங்களும் குடும்பத் தகராறு மனஅழுத்தம் மற்றும் வறுமை ஆகியவை காரணமாக உள்ளன. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை முயற்சிஎன்பது ஒரு விநாடியில் அல்லது ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் முடிவல்ல. நீண்டகாலமாககத் திட்டமிட்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து எடுக்கப்படுவதேதற்கொலை முயற்சி. அம்முடிவுக்கு வந்தபின் அவர்கள் எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

தற்கொலை முயற்சி என்பது அத்தீர்மானத்துக்கு வருவோருக்கு  சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும். உயிர் ஊசலாடும் அந்த ஓரிரு வினாடிகளில் மரணத்தின் விளிம்பை மனதால் காணும் அந்தக் கணப் பொழுதுகளில் வேண்டாம் இந்த விசப்பரீட்சை என்று சொல்லி எப்படியாவது உயிர் தப்ப வேண்டும் என்று தவிப்பார்கள். பெரியவர்கள் எப்படியாவது சிறிது நேரத்துக்குத் தாக்குப் பிடிப்பார்கள். பிஞ்சு உயிர்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ளும் அநியாயமாக  உயிரைப் பறிகொடுத்து விடுவார்கள். நடை பெற்ற சம்பவங்களில் தற்கொலை முயற்சியை மேற்கொண்ட பெற்றோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்தப் பாவமும் அறியாத பிஞ்சு உயிர்களே பெற்றோரின் குடும்பப் பிரச்சினைக்கும் வறுமைக்கும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

தான் மாத்திரம் கிணற்றில் பாய்ந்து இறந்து போவது தற்கொலை. குழந்தைகளுடன் பாய்வது என்பது தற்கொலையல்ல. அது கொலையாகும். தனது உயிரை மாய்த்துக் கொள்வதையே அனுமதிக்காத போது எவ்வாறு அடுத்தவர்களது உயிரைப் பறிக்கலாம்.   

அடுத்தவாரப் பத்தரிகையில் மற்றுமொரு சம்பவம் பதியப்படுவதற்கு முன்னர், இவ்வாறு குழந்தைகளுடன் கிணற்றிலும் ஆற்றிலும் பாயும் சம்பவங்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். முன்னர் குழந்தைகளோடு கிணற்றில் பாய்ந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டு காப்பாற்றப்பட்ட தாய்மார்களுக்கு உரிய உளவள ஆலோசனைகளையும் தேவைப்படின் தண்டனைகளையும் வழங்க வேண்டும். இதன் பிறகு எந்தப் பெற்றோரும் இது போன்ற ஒரு முயற்சியை மேற் கொள்ள முடியாதவாறு அந்த செயற்பாடுகள் அமைதல்  வேண்டும். 




தீயினால் தீர்வா?




பஹமுன அஸாம்

மதகுருமார்கள் என்பவர்கள் பற்றுக்களை ஒடுக்கியவர்கள். அதிலும் பௌத்த துறவிகளை நாம் சாதுக்கள் எனவும் அழைக்கின்றோம். சாதுக்கள் எப்போதும் அமைதியானவர்களாக அகிம்சையைப் போதிப்பவர்களாகவே காணப்படுவர். காணப்பட வேண்டும். அவர்கள் சாதாரண மனித உணர்வுகளுக்கு அடிமையாகக் கூடாது. அவ்வாறு அடிமையாகின்றவர்களை துறவிகள் என்று கூற முடியாது.


அமைதியான முறையில் தனது நியாயமான கோரிக்கையை வென்றெடுக்கப் போராடாது தனது மதம் சார்ந்த மிக முக்கியமான பண்டிகை நாளில் அனைவரையும் மனவேதனைக்குள்ளாக்கும்படி பௌத்த துறவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் மிகுந்த வேதனையடையச் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான பௌத்த மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடினார்கள்.  கௌதம புத்தர் பிறந்த  மற்றும் அவர் ஞானம் பெற்ற பரிநிர்வாணம் அடைந்த இத் தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த வேதனைக்குரிய சம்பவமும் இடம்பெற்றது.

பௌத்தர்களின் புனித வழிபாட்டுத் தலமான கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகைக்கு முன்னால் இந்த பௌத்த பிக்கு  தனக்குக் தானே தீ மூட்டிக் கொண்ட சம்பவத்தை பலரும் அறிந்திருப்பீர்கள். 


போவத்தை இந்திரரத்ன தேரரே இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். நாட்டு மக்கள் அனைவரும் வெசாக் வெளிச்சக்கூடுகளைப் பார்க்கச் செல்வதிலும் தானசாலைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தேரரின் இந்த நடவடிக்கை நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புத்தரின் புனிததந்தம் வைக்கப்பட்டுள்ள பௌத்தர்களால் புனிதஸ்தலமாக மதிக்கப்படும் கண்டி தலதா மாளிகையின் முன்பாக போவத்தை இந்திரதன என்ற இந்த தேரர் தான் அணிந்திருந்த ஆடையுடன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். பலர் இச்சம்பவத்தை பார்த்து திகைத்து நின்ற அதேவேளை சிலர்  புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருக்க  ஒரு சிலர் மாத்திரமே அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டனர். இருந்தும் பயனில்லை. அவரது உடம்பில் அதிகமான பகுதிகளை தீ பதம் பார்த்து விட்டது.

அவர் உடனடியாக கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதுஅவரின் பணிப்புரைக்கமைய விசேட வானூர்தி(ஹெலிகொப்டர்)மூலம் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டார். உடம்பில் எல்லா இடங்களும் தீயில் கருகியதால் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் போது அவரது உடல் முழுவதும் (பெண்டேச்) கட்டுப் போடப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த பிக்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் 25ஆம் திகதி சனிக்கிழமை  உயிரிழந்தார்.



பெல்மதுளை  பிரதேச சபையின் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினரான இந்திரரத்ன தேரர் பல கோரிக்கைகளை முன்வைத்த போது அவை கவனத்திற் கொள்ளப்படாததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார். 

இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடை செய்ய வேண்டும்.

சமாதானத்தின் உரிமை மனிதர்களுக்கு மாத்திரமன்றி மிருகங்களுக்கும் இருக்க வேண்டும்.

வற்புறுத்தி மதமாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம்  கொண்டுவரப்பட வேண்டும்.

பெரும்பான்மை  இனத்தவர்களின் மதம் சீரழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது பௌத்த நாடு இதற்கேற்ற ஒரு யாப்பு வரையப்பட வேண்டும்.
மதப் போரை ஒழிக்க வேண்டும்.

என்பனவே அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும். தனது கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய கடிதம் முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இவரது இச்செயற்பாட்டை அவர் முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வர மேற்கொண்டாரா அல்லது மக்களின் கவனத்துக்குக் கொண்டுவர மேற்கொண்டாரா என்ற கேள்வி தான் தற்போது எழுந்து நிற்கிறது.

இந்திரரத்ன தேரர்  இதற்கு முன்னரும் பாதயாத்திரை போன்ற பல நடவடிக்கைகளை மேற் கொண்டு ஜனாதிபதியின் (மக்கள்) கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சித்துள்ளார். 

எப்படியோ தன் உயிரைக் கொடுத்து அவர் முன் வைத்த கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படுமா? அவரது உயிருக்கான மதிப்பு எவ்வளவு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் போவத்தை இந்திரரத்ன தேரரின் இச்செயற்பாடு மனித மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

Sunday, May 5, 2013

தங்கத்தின் விலைச்சரிவு நிரந்தரமானதா?


பஹமுன அஸாம்



 தங்கத்திலே குறை இருந்தாலும் அதன் தரத்தினில் என்றுமே குறைவில்லை என்பார்கள். நீரில் போட்டாலும் நெருப்பில் போட்டாலும் தங்கத்தின் தரம் என்றுமே குறைவதில்லை. எக்காலத்திலும் தங்கம் என்றாலே அதற்கு உயர் பெறுமதி உள்ளது. சிறந்த முதலீட்டு ஊடகமாகவும் சேமிப்பு வழியாகவும் கூட தங்கம் காணப்படுகிறது. தங்க நகைகளை அணிவதில் பெண்கள் என்றுமே விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பாரியளவில் வீழ்ச்சியடைந்தள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய வீழ்ச்சியானது பொது மக்கள் மனதில் ஒரு மகிழ்வை எற்படுத்தினாலும் வியாபாரிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கக்கூடும். 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 55ஆயிரம் ரீபா வரை விற்கப்பட்ட 22 கரட் தங்கம் 42 ஆயிரம் ரூபா தொடக்கம் 43 ஆயிரம் ரூபா வரை குறைவடைந்துள்ளது. 

2004 ஆம் ஆண்டுவரை சீராக இருந்து வந்த தங்கத்தின் விலை 2004 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்தே சென்றது. இந்த அதிகரிப்பானது இவ்வருடம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டில் தங்கத்தின் விலை 6 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 

இவ்வாறு தங்கத்தின் இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் உலக சந்தையில் தங்கத்தின் நிரம்பல் அதிகமானதேயாகும்.  சைப்ரஸ் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தனது இருப்பில் இருந்த 10 தொன் தங்கத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் பெறுமதி சு
மார் 400 மில்லியன் யூரோக்களாகும். இந்த 10 தொன் தங்கம் உலக சந்தைக்கு வந்தமையே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.  மேலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிடலாம். பங்குச் சந்தை வணிகர்கள் தங்கத்தை கைவிட்டு விட்டு மீண்டும் பங்குப் பத்திரங்களை வாங்க தொடங்கியுள்ளமையும் ஒரு காரணமாகும். 

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச்சரிவு இலங்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணனைக் கேட்ட போது “தங்கத்துக்கு ஒரு நிலையான விலை இருக்காது. அது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் குறைந்திருக்கும் மறு நாள் அதிகரிக்கும். அமெரிக்காவின் கையில தான் தங்க வர்த்தகம் தங்கியுள்ளது. விலை குறைஞ்சது கொஞ்சம் சந்தோசம் தான். வியாபாரமும்
முன்னரை விட கொஞ்சம் நல்லாவே இருக்குது. 

அவரிடம் இந்த விலைக்குறைவானது உங்களுக்குப் பாதிப்பில்லையா? என்று கேட்டபோது; பாதிப்பு என்று சொல்வதை விட விலை கூட இருந்த போது நல்ல இலாபத்துக்கு நகைகளை வித்தோம். நல்ல வருமானமும் இருந்தது. நாங்க அவ்வப்போது தங்கத்தை எடுத்து நகை செய்து விக்கிறம். அதால விலைத்தலம்பல் பெரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது. அண்மையில ஒரு தனியார் வங்கி இந்த விலைச்சரிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு  என்னை

அழைத்திருந்தது. அதில இன்றைய நிலவரப்படி ஒரு விலையைக் கேட்டாங்க. நானும் மதிப்பிட்டு 36 ஆயிரம் ரூபா என்று சொன்னன். அந்த வங்கியின் மூலதன விலையின்படி வட்டியோடு 43 ஆயிரம் ரூபா முடியுது. அதன்படி
அவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா நட்டம். அத்தோட இன்று தங்கம் என்றது நம்ம கலாச்சாரம் ஆகிவிட்டது. ஒரு கலியாணத்தின் போது கட்டாயம் தங்கத்துல தாலி செய்வாங்க. ஏனைய நகைகள் போடுவாங்க. சாதாரண மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம். என்னப் பொறுத்தவரையில இன்னும் விலை குறையவேண்டும் என்று தான் நினைக்கிறன்.’ என்று தனது கருத்துக்களைச் சொன்னார். 

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள மற்றுமொரு தங்க நகைக் கடைக்குச் சென்றபோது வரவேற்பும் உபசரிப்பும் தடல்புடலாக இருந்தது. இருப்பினும் நான் நகை வாங்க வரவில்லை என்று சொன்னபோது சற்று முகம் சுழித்த அவர்கள் விடயத்தைச் சொன்னதும் என்னுடன் கதைக்க முன்வந்தார்கள். “தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சியால் வியாபாரம் கொஞ்சம் நல்லா போகுது. இருந்தாலும் நாங்க எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடுதலான வீழ்ச்சி என்கிறது கஷ்டமாத்தான் இருக்குது. அடுத்தது வாடிக்கையாளர்கள் இப்ப கொஞ்சம் கூடத் தான் வாராங்க. விலை குறைவு என்றதால மக்கள் முன்ன விட இப்ப அதிகமாக வாங்குறாங்க. இந்த விலைச்சரிவு எதிர்வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 60 ஆயிரத்துக்கு இருந்தது 45 ஆயிரத்துக்கு வந்தது. இது 30 ஆயிரத்துக்குப் போகுமா அல்லது 60 ஆயிரத்துக்கு போகுமா என்று உறுதியா சொல்ல முடியாது. 

அடுத்தது இந்த நகை வியாபரத்தில் என்னைக்குமே ஒரு நிரந்தரமான விலை இருக்காது. ஒரு தளம்பல் எப்போதுமே இருக்கும். ஒரு நாள் கூடும் ஒரு நாள் குறையும். இது வந்து மிகவும் ஒரு இக்கட்டான நிலமையா இருக்கும். ஒரு வாடிக்கையாளர் வந்து அன்று உள்ள விலையின்படி நகை செய்யக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் ஒரு ஐந்து நாள் கழித்து வரும் போது விலை குறைந்திருந்தால் அவர் அந்த குறைந்த விலைக்கு கேட்பார். விலை கூடியிருந்தால் அது பற்றி ஒண்ணுமே கதைக்க மாட்டார். நாங்க முதல்லயே ஓடர் பண்ணிட்டோம் தானே எங்களுக்கு அந்த விலைக்குத் தான் தர வேண்டும் என்று தர்க்கம் புரிவார்கள்’ என்று பரபரப்பான வியாபார நேரத்திலும் தான் பல வருட அனுபவசாலி என்பதை நிரூபித்துக் காட்டுவது போல தனது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார் ஆனந்தன் என்ற தங்க நகை வர்த்தகர்.


செட்டியார் தெருவில் உள்ள மற்றுமொரு நகை கடை உரிமையாளரான கணபதி என்பவரைச் சந்தித்தபோது “என்னைப் பொறுத்தவரையில் தங்கத்தின் இந்த விலைக்குறைவானது பாதிப்பு என்று சொல்வதைவிட அது ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கிறேன். வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் முன்னரை விட ஓரளவு கூடுதலாகவே வருகிறார்கள். பவுணுக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்திருக்கிறது. 5 பவுண்  வாங்கினால் 50000 வரை இலாபம் இருக்கும். எனவே மக்கள் தற்போது நகை வாங்குவதில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணத்திற்காக நகை செய்ய நினைத்திருப்பவர்கள் தற்போது செய்து கொள்வார்கள். அதிகமான திருமண நகை ஓடர்கள் வருகிகின்றன.  அதிலும் தற்போது நடுத்தர சாதாரண குடும்ப மக்கள் அதிகமாக வருகிறார்கள். வியாபாரிகள் என்ற வகையில எங்களுக்கும் சந்தோசமாகத்தான் இருக்கிறது. விற்பனை நன்றாக உள்ளது. இந்த விலைமாற்றமானது நிரந்தரமற்றது. திரும்பவும்  விலை அதிகரித்துச் செல்லும் என்று தான் நான் நினைக்கிறேன்.’ என்றார். 

தங்கத்தின் விøல் வீழ்ச்சி தொடர்பாக ஒரு தனியார் வங்கியின் முகாமையாளரான ஷாமிலிடம் கேட்டபோது “இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை இன்னும் நிலையான விலைக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் கூடலாம் அல்லது குறையலாம். அடுத்தது வங்கிகளைப் பொறுத்தவரையில் அடகு வைக்கும் நகைகளுக்கு கொடுக்கும் தொகையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். எமது வங்கி முன்னர் 22 கரட் தங்கத்துக்கு 42 ஆயிரம் ரூபாவை வழங்கியது. ஆனால் அந்தத் தொகை இன்று 35 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அந்த விதத்தில் 7 ஆயிரம் ரூபாய்வரை கடன் தொகையைக்குறைத்துள்ளோம். 

எமது வங்கியைப் பொறுத்தவரையில் கடந்த  5 அல்லது 6 வருடங்களாகத் தான் அடகுநடவடிக்கையை மேற்கொள்கிறது. ஆனால் நகை அடகு வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் வேறு சில வங்கிகள் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளன. அடுத்தது இன்றை விலை வீழ்ச்சிக்கு சைப்பிரஸ் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சைப்பிரஸ் அரசு தன்னிடம் இருந்த தங்கத்தை சந்தையில் விட்டது போன்று  அமெரிக்க மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளும் தம்மிடம் உள்ள தங்கத்தை சந்தையில் விடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தாலும் அதனை உறுதியாகச் சொல்லமுடியாது. அவ்வாறு நடந்தால் தங்கத்தின் விலையில் இன்னும் பாரிய வீழ்ச்சி நிச்சயமாக ஏற்படும்.’ என்று அலுவலக வேலைகளுக்கு மத்தியிலும் தனது கருத்தைச் சொன்னார்.


எது எப்படியோ இந்த விலைச்சரிவானது நிரந்தரமானதா இல்லையா என்பது உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்றாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியளவில் ஏற்பட்ட விலைச்சரிவில் தற்போது படிப்படியான ஒர் ஏற்றத்தையே காணமுடிகிறது. 56 ஆயிரத்தில் இருந்து 44ஆயிரத்து 500 வரை குறைந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி 48 ஆயிரமாக காணப்படுகிறது. சில வியாபாரிகளின் கருத்தாக அமைவது  இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தாண்டும் என்பதாகும்.

தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணிப்பிடப்படுகிறது.  ஒவ்வொரு நாட்டிலும் அதன் மத்திய வங்கி தங்கத்தை இருப்பில் வைத்திருக்கும். அவ்வாறு இருப்பில் வைத்துள்ள தங்கத்தின் பெறுமதிக்கு ஏற்பவே அந்த நாட்டின் அரசாங்க செலாவணி நாணயம்வெளியிடப்படுகிறது.
சைப்பிரஸ் தன்னிடம் உள்ள முழுத் தங்கத்தையும் விற்பனை செய்யவில்லை. 10 தொன்களை மாத்திரமே சந்தையில் விட்டது. இதன்படி பார்த்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சியானது நீண்ட நாட்களுக்கு இருக்காது. இருப்பினும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள மேலும் ஒரு சில நாடுகள் தம்மிடம் இருப்பில் உள்ள தங்கத்தை சந்தையில்விடவுள்ளதாக ஒரு கருத்தும் கசிகிறது. இவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சி மேலும் தொடரலாம் என்று உறுதியாக நம்பலாம்.