குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Saturday, April 20, 2013

பொய்யான தொலைபேசி செய்தியால் பறிக்கப்பட்ட மாணவியின் உயிர்


(பஹமுன அஸாம்)


பரீட்சைகளை தைரியமாக எதிர் கொண்டு சந்தோசமாக பெறுபேறுகளை எதிர்பார்த்த காலம் போய் பரீட்சை என்றாலே பயந்து சாகும் அளவுக்கு இன்று மாணவர்களின் மனோ நிலை பின்னடைந்து காணப்படுகிறது. இரவு பகல் பாராது அதீத நம்பிக்கையில் படிப்பவர்கள் தாம் எதிர் பார்த்த பெறுபேறுகள் வராத பட்சத்தில் மனமுடைந்து விரக்தியடைந்து போகிறார்கள். இந்த விரக்தியின் உச்ச கட்ட முடிவாக சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். பலர் தப்பித்துக் கொண்டாலும் ஒரு சிலர் அநியாயமாக உயிரைப் பலி கொடுக்க வேண்டி ஏற்படுகிறது. அந்த வரிசையில் இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் திருப்தியின்மையால் மூன்று மாணவர்கள் தமது உயிர்களை அநியாயமாகப் பலி கொடுத்துள்ளார்கள்.

இவ்வாறு அநியாயமாக தமது உயிரைப் பலி கொடுத்தவர்களில் திலினி அநுராதாவும் ஒருவர். பரீட்சையை எழுதி விட்டு பல கனவுகளோடும் கற்பனைகளோடும் நாட்களை கழித்து வந்தாள் திலினி. பரீட்சைப் பெறுபேறுபேறுகள் வெளியான செய்தியை அறிந்ததும் அவளது உள்ளத்தில் இனம்புரியாத அச்சம் குடிகொண்டுவிட்டது. முகத்தில் ஒரு வித கலக்கம். தனது பெறுபேறுகள் எப்படியிருக்கும். பாஸ் ஆகியிருப்பேனா அல்லது பெயிலாகியிருப்பேனா? என்ற தவிப்பு. 

“அம்மா கெதியா போயிட்டு வாங்க....
எனக்கு என்ட ரிஸல்ட் என்ன எண்டு தெரிஞ்சிக்கணும்....’

                  

அவள் கற்ற பாடசாலைக்கு பெறுபெற்றைப் பார்க்கச் செல்ல ஆயத்தமான தாய் நந்தாவிடமும் தந்தை விக்ரமரத்னவிடமும் கூறுகிறாள் திலினி. 
பெற்றோரை வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கிறாள் திலினி. கடைசியாக தனது பெற்றோரை வழியனுப்புகிறேன் என்பதை அவள் அறிந்திருந்தாளோ இல்லையோ ஆனால் தனது மகளிடம் இருந்து கடைசியாக விடைபெற்றுச் செல்கிறோம் என்பதை தாய் நந்தாவும் தந்தை விக்ரமரட்னவும் நிச்சயமாக அப்போது அறிந்திருக்கவில்லை.

பாடசாலைக்குச் சென்று அறிவித்தல் பலகையில் இருந்த பெறுபெற்றைப் பார்த்தபெற்றோர் சந்தோசத்தில் மிதக்கிறார்கள். ஏ.பி. என்று நல்ல பெறுபேறுகள். இரண்டு பாடங்களைத் தவிர ஏனைய எல்லாப் பாடங்களிலும் தமது மகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருக்கிறாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தமது மகளைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டவர்கள் அந்த நல்ல செய்தியை தமது மகளிடம் சொல்லுவதற்காக விரைவாக வீட்டுக்கு வருகிறார்கள்.

வீட்டுக்கு வந்தவர்கள் வாசலில் நின்று வழியனுப்பிய மகளைக் காணாததால் யோசனையுடன் வீட்டுக்குள் இருப்பாள் என்று உள்ளே செல்கிறார்கள். அங்கும் காணவில்லை. “திலினி’ பெயர் சொல்லி அழைத்துப் பார்க்கிறார்க்கிறார்கள். எந்த பதிலும் இல்லை. அறைகளில் எட்டிப் பார்க்கிறார்கள் எங்கும் இல்லை. அங்கும் இங்கும் தேடிய அவர்கள் வீட்டின் பின்புறத்துக்குச் சென்று பார்த்தார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி தங்கள் கண்களையே அவர்களால் நம்ப முடியாவில்லை. தமது அன்பு மகள் திலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பயங்கரமான காட்சியையே அவர்கள் கண்டார்கள். கத்திக் குளறிய தாயும் தந்தையும் ஓடிச் சென்று மகளைத் தூக்கினார்கள். அப்போது திலினியின் உயிர் பிரிந்து சில நிமிடங்கள் கடந்து விட்டன. எந்தப் பெற்றோருக்கும் இது போன்ற ஒரு கொடிய காட்சியை பார்க்கும் நிலை ஏற்படக்கூடாது. இது போன்ற ஒரு காட்சியையப் பார்க்கக் கூடாது என்றே திலினியின் பெற்றோரும் எண்ணியிருப்பார்கள். 

“மகள் பரீட்சை முடிந்த நாளில் இருந்து சற்று கலக்கமாகவே இருந்தாள். பெறுபேறுகள் வந்தபிறகு அவளது முகத்தில் பயம் சற்று அதிகரித்திருந்தது. நாங்க போய் ரிசல்ட்ட பார்த்துவிட்டு வரும் போது மகள் எங்களை விட்டுப் போய் இருந்தாள். இதுக்காகவா நான் அவளை இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தேன்’ திலினியின் தந்தை அழுது புலம்புகிறார்.

திலினியின் பெற்றோர் பரீட்சைப் பெறு÷றுகளைப் பார்க்கச் சென்ற பிறகு திலினிக்கு அவரது நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பே அவளின் உயிரைப் பறித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. “பரீட்சையில் நீ சித்தியடையவில்லை பெயிலாகிவிட்டாய்’ என்று திலினியின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பி மனமுடைந்து போன திலினி நான் இனி எப்படி சமூகத்துக்கு முகம் கொடுப்பேன். பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன் என்று மனம் குழம்பிய நிலையில் தற்கொலை தான் அதற்கு சரியான தீர்வு என்று முடிவு எடுத்துவிட்டாள்.

எது எப்படியோ போன உயிர் திரும்பி வரப் போவதில்லை. பரீட்சையில் உண்மையாகவே பெயிலாகியிருந்தாலும் அதற்கு தற்கொலை தீர்வல்ல. அதற்கு மாறாக வாழ்க்கையை வெற்றி கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இன்று பத்தாம்  தரம் கூட படிக்காத எத்தனையோ பேர் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களாக உயர் நிலையில் இருக்கின்றார்கள். 
முதல் முறை சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாதவர்கள் இரண்டாவது முறை தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்தரம் கற்று வாழ்க்கையில் சாதனைபடைத்த பலரையும் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனதில் தைரியம் உள்ளவர்கள் நிச்சயம் கொஞ்சம் யோசித்தால் வாழ்கையை வெற்றி கொள்ளவும் முடியும் என்பதை நன்றாக உணர்நது கொள்ளவேண்டும். 

No comments:

Post a Comment