குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Thursday, June 27, 2013

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்; கருத்துக்களம்

                               பஹமுன அஸாம்

அண்மைக்காலத்தில் எமது நாட்டில் சர்ச்சையைக் கிளப்பிய விடயங்களில் ஒன்று தான் முஸ்லீம் பெண்களின் ஆடை விவகாரம். பொது பலசேனா போன்ற இனவாதஅமைப்புக்கள் இன்னும் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில தேவையற்ற கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. 

மன்னம்பிட்டிய, பாணந்துறை போன்ற இடங்களின் அபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட போது எந்த முஸ்லீம் அரசியல் வாதியும் வாய்திறக்கவில்லை. அதேசமயம் இந்தியாவில் ஒரு தேரர் தாக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடயத்தை ஜெனீவாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தேசிய பட்டியல் முஸ்லீம் தரப்பு எம்.பி. கவலைப்பட்டதைப் பலர் அறிந்திருப்பீர்கள். தனது சமூகத்திலுள்ள பெண்களுக்கு  பிரச்சினை ஏற்பட்ட போது வாய்மூடி இருந்து விட்டு ஆக்கிரமிப்பு வர்க்கத்தினர் கொடுக்கும் காசுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்படும் இப்படிப்பட்டவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும் மக்களே இவர்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கான முழுப் பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையே பின்பற்றுகிறார்கள். திருமணம் விவாகரத்து போன்ற எல்லாமே ஷரீஆ சட்டப் பிரகாரமே மேற் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தனக்கு திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்ளிடத்தில் தனது உடல் அங்கங்கள் தெரியும் விதத்தில் நடந்து கொள்வது ஹராமாகும். கை,கால் பாதம், முகம் போன்றவற்றைக் காட்ட அணுமதி உள்ளது.

மெல்லிய, இறுக்கமான ஆடைகள், உடலின் அங்கங்கள் தெரியக் கூடிய ஆடைகள் அணிவதும் ஹராமாகும். தனது வீட்டுக்குள் பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் வெளியே செல்லும் போது மார்க்கம் அனுதித்ததன் பிரகாரமே ஆடைஅணிகலன்களை அணிய வேண்டும். 
பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அபாயாக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன.  
அபாயா விடயத்தில் பொதுபலசேனா அமைப்பால் அண்மையில் பல சர்ச்சைகள் கிளம்பின. எனவே இந்த அபாயா விடயத்தில் பொதுபலசேனாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவ்வமைப்பின் இணைப்பாளர் பேராசிரியர் டிலன்த விதானகேயைத் தொடர்பு கொண்டு கேட்ட போது;


முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதை நாம் ஒரு மத ரீதியான பிரச்சினையாகப்  பார்க்கவில்லை.  பொது இடங்களில் முகத்தை மூடி நடமாடுவதைத் தான் எதிர்க்கின்றோம். 
ஒருவர் முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு வந்தால் அவர் யார் எப்படிப்பட்டவர் என்ற எதையும் எம்மால் இனங்கண்டு கொள்ள முடியாது. உதாரணமாக பாதையில் செல்கின்ற வாகனங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டிருந்தால் (டின்டட்) பொலிஸார் அவற்றை அகற்றி விடுகின்றனர். ஏனென்றால் அவர்களால் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று அறிந்து கொள்ள முடியாது. அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும். 
அதே போன்று தான் முகத்தை மூடி ஆடை அணிவதால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே தான் நாம் இந்த ஆடைகளை எதிர்க்கின்றோம். அவர்கள் வீட்டிலும் தனிப்பட்ட இடங்களிலும் எவ்வாறு வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். ஆனால் பொது இடங்களில் முழுமையாக மறைத்து இருப்பதையே நாம் எதிர்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

அபாயாவிடயத்தில் பொதுபலசேனா அமைப்பினர் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து கூறும் நியாயம் இதுதான்.

இதே வேøளை இது தொடர்பாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இஸ்லாம்  மற்றும் இஸ்லாமிய நாகரீக விரிவுரையாளர் எம்.ஆர் .அஸாத்திடம்  முஸ்லிம் பெண்கள் ஏன் அபாயா அணிகிறார்கள். இதனால் என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டபோது;

“இன்று நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாலியல் பலாத்காரம் வல்லுறவு போன்றவை பாரியளவில் இடம்பெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதுதான். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பலவிதமான ஆடைகளை அணிந்து  பொது இடங்களில் செல்கிறார்கள். குறிப்பாக சில ஆடைகள் பாலியல் உணர்வுகøள் தூண்டுவனவாகவே உள்ளன. அபாயாவைப் பொறுத்தவரையில் அந்த நிலமை இல்லை.  அவ்வகை ஆடைகள் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைவதில்லை. எனவே அவர்கள் குற்றச்செயல்களில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணி அவர்கள் அணியும் ஆடைகள் தான். 

அபாயாக்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. உண்மையில் இது ஒரு தவறான கருத்தாகும். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அபாயாவை விரும்பியே அணிகிறார்கள். 

இதேவேளை இன்று ஒரு சில பெண்கள் அபாயாவை ஒரு ஆடம்பரப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் அனுமதித்த வரையறைக்கு அப்பால் போய் இறுக்கமானவையாகவும், கவர்ச்சியாகவும் அணிகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினாலேயே அபாயாவின் தனித்துவம் சிதைக்கப்பட்டு ஏனையவர்கள் அதை விமர்சிக்கும் நிலைக்கு போயுள்ளது எனலாம். 

அபாயாவின் முக்கியமான நோக்கம் எமது உடலை மற்றவர்களுக்குக் காட்டக் கூடாது என்பதாகும். இந்த ஆடையின் மூலமாக அல்லாஹ்வின் திருப்தியை நாம் பெறுகிறோமா என்பதிலும் அதை அணிபவர்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

அதே போன்று இந்த அபாயா தொடர்பாக தனது கருத்துக்களை இவ்வாறு தெரிவிக்கின்றார் குருநாகல் ஹுசைனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.இலியாஸ் மௌலவி;

முஸ்லீம்கள் இஸ்லாம் மதம் அண்மைக்காலமாக  கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருவதை அறிவார்கள். அதிலும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகளைப் பற்றியும் பலர் விமர்சனம் செய்கிறார்கள் குறிப்பாக பெண்களின் ஆடைகள் தொடர்பில் இன்று பலவிதமான சர்சைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் விதமான சிறப்பான ஆடை முறையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

ஆனால் இன்று ஒரு சில முஸ்லீம் பெண்கள் இந்த அபாயாவை ஒரு நாகரீகஉடடையாகக் (பேஷனாக) கருதி அணிகிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய ஒரு விடயமாகும். என்று கவலையுடன்  தனது கருத்தைச்  சொன்னார்.

உண்மையில் இந்த அபாயாக்களைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு  ஒரு பயனுள்ள பாதுகாப்பான ஆடையாகவே உள்ளது. இன்று பலர் அதை அறியாமல் அணிவதும் அதைப்பற்றிக் கதைப்பதும் தான் கவலைக்குரியதாக உள்ளது.

பலர் இன்று முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற அதே நேரத்தில், ஒரு தேரர் முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பைப் பற்றி நல்ல முறையில் கூறியுள்ளமை தான் வியப்பாக உள்ளது. 


சர்வமத ஆய்வு வட்டம் அண்மையில் நிப்போன் ஹோட்டலில் நடத்திய  செய்தியாளர் மகாநாட்டில் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறிய கருத்து இவ்வாறு இருந்தது;

முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கம் மிக்கதாகும். முஸ்லீம் மாணவிகள் அணியும் ஆடைகள் சிறப்பானவை. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். அண்மையில் முஸ்லீம் நாடொன்றுக்கு நான் சென்றபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை மிகவும் அழகாகவும் இருந்தன எனவே அந்த ஆடை அமைப்பை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்தக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதத்திலேயே அமைந்திருக்கின்றது. அபாயா விடயத்தில் பிரச்சினை எழுவதற்கு ஒரு சிலரின் இனவாத தூண்டுதல்களே காரணமாகும்.

முழுமையாக உடை அணிந்து ஒழுக்கமாக செல்பவர்களை பிடிக்காத அந்த விஷமிகளுக்கு பெண்கள் அரைகுறை ஆடையுடனும்  கவர்ச்சியாகவும் செல்வது தான் பிடிக்கும் போலிருக்கிறது.



Wednesday, June 12, 2013

மாடு அறுப்பது மாத்திரம் தானா பிரச்சினை


                                                                -பஹமுன அஸாம்-

காலத்தின் வேகத்துக்கு ஏற்ப பல வளர்ச்சிகளைக் கண்டு கொண்டு மிக வேகமாகப் பயணித்துக்கு கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் அந்த வளர்ச்சிகளுக்கு நிகராக பல பிரச்சினைகளும் காலத்துக்குக் காலம் புகைந்து கொண்டே தான் இருக்கும். அவை சமூகம் சார்ந்தவையாகவோ அல்லது தனி மனிதர்கள் சார்ந்தவையாகவோ இருக்கலாம். தனி மனிதர் சார்ந்த பிரச்சினைகளையும் ஒரு சமுகத்தின் பிரச்சினையாக திசை திருப்பி அதில் குளிர் காய நினைப்பவர்கள் எத்தனையோ பேர். 

அந்த விதத்தில் சில தினங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்து தற்போது ஓரளவுக்கு ஓய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு பிரச்சினைதான் மிருகவதை. உண்மையில் மிருக வதை என்று எதனைச் சொல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. வெறுமனே இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை மாத்திரம் தூக்கிப் பிடித்து பாரிய ஒரு பிரச்சினையாக திசை திருப்பிக் கொண்டிருப்போருக்கு அநியாயமாகக் கொல்லப்படும் ஏனைய உயிர்கள் பற்றிய எண்ணங்கள் வருவதில்லை போலும்.

ஒரு நாளைக்கு எத்தனைபன்றிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை ஆயிரம் கோழிகள் அறுக்கப்படுகின்றன. எத்தனை இலட்சம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இவைகள் உயிரினங்களின் வரிசையில் வருவதில்லையா? இவற்றின் உயிருக்கு பெறுமதியில்லையா.? ஒவ்வொரு நாளும் இறைச்சிக்காக அறுக்கப்படும் மாடுகளின் தொகையைவிட பல மடங்கு கோழிகள் மற்றும் மீன்கள் போன்ற உயிரினங்கள் கொல்லப்படுகின்றன. இது வரையில் இவை பற்றி யாரும் வாய் திறந்ததாகத் தெரியவில்லை.
சரி இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இறுதி யுத்தத்தின் போது எத்தனை ஆயிரம் அப்பாவி மக்களின் உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டன. அவை உயிர்கள் இல்லையா? ஐந்தறிவு படைத்த உயிரினங்கள் மீதே இவ்வளவு கருணை காட்டும் இந்த (அநியாயத்துக்கு) நல்ல உள்ளங்கள் அன்று அவ்வளவு மனித உயிர்கள் காவுகொள்ளப்படும் போது எங்கு(தூங்கப்)போயிருந்தார்கள் என்று தான் புரியவில்லை. 


இன்று ஒரு புத்த பிக்கு, மாடு அறுக்கிறார்கள் என்று அதனை எதிர்த்துத் தீக்குளித்தார். 26 வருடங்களுக்கு முன்பு அரந்தலாவை பஸ் குண்டு வெடிப்பில் 30 பிக்குகள் கொல்லப்பட்டார்களே! அப்படியானால் ஒரு மாட்டின் உயிரை விட இந்த 30 பிக்குகளின் உயிர்களும் பெறுமதியற்றுப் போய்விட்டதா என்று தான் தெரியவில்லை.

இறைச்சிக்காக  ஆடு மாடு கோழி பன்றி போன்ற விலங்குகளை வளர்ப்பது உலகில் பிரபல்யமான ஒரு கைத் தொழிலாகவே உள்ளது. பல நாடுகள் இன்று ஏற்றுமதி  செய்யும் அளவுக்கு பெரிய பண்ணைகளை வைத்து நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து கனடா, பிரித்தானியா, நோர்வே, அவுஸ்திரேலியா, நியுசிலாந்து போன்ற நாடுகளையும் குறிப்பிடலாம். ஏன் காந்தி வாழ்ந்த இந்திய மண்ணில் கூட இறைச்சிக்காக மாடுகள் கோழிகள் அறுக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் வருடமொன்றுக்கு 900 கோடி விலங்குகள் அறுக்கப்படுவதாகவும் அத் தொழிலில் 5 இலட்சத்து 30 ஆயிரம் போர் ஈடு பட்டுள்ளதாகவும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரம் கனடா வருடமொன்றுக்கு 65 கோடி விலங்குகளை அறுப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வருடமொன்றுக்கு 30 கோடி விலங்குகளையும் 400 கோடி கோழிகளையும் அறுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு சுமார் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளும் 130 ற்கும்  மேற்பட்ட மாடுகளும் 100 ற்கும்  மேற்பட்ட ஆடுகளும் அறுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஆடு மாடுகளை அறுப்பதால் அவற்றில் எந்தவிதமான குறைவுகளும் ஏற்பட்டதாக இதுவரையில் எங்கும் பதிவாகவில்லை. மாறாக முன்னரை விட தற்கால சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப அவற்றின் தொகையும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. பூனைகளும் நாய்களும் வருடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குட்டிகளை ஈணுகின்றன. அதிலும் ஓரே சூலில் மூன்றுக்குக் குறையாத குட்டிகளை அவை ஈணுகின்றன. அவற்றை யாரும் அறுப்பதில்லை. அவை பட்டியாக வாழ்வதும் இல்லை. ஆனால் மாடுகள் வருடத்துக்கு ஒரு முறை தான் கன்று போடுகின்றன. அதுவும் ஒரு கன்றுதான். இப்படியிருந்தும் இவ்வளவு மாடுகள் அறுக்கப்பட்டும் அவற்றின் பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்படுவதில்லை. எப்போதும் ஒரு சம நிலை பேணப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

அண்மையில் பறவைக் காய்ச்சல் நோய் பரவி கோடிக்கணக்கில் கோழிகள் குவியல் குவியலாகப் அழிக்கப்பட்டு தீ மூட்டி எரிக்கப்பட்டன. மேற்கவ் என்ற வியாதி பரவிய காலத்தில் மில்லியன் கணக்கான மாடுகள் கொன்று எரிக்கபட்டன. இவற்றினால் மாட்டிறைச்சிக்கோ கோழி இறைச்சிக்கோ பெரிதாக தட்டுப்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த இன்றை காலத்தில் இயந்திரங்கள் மூலம் ஓரே நாளில் பல்லாயிரக்கணக்கான கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதையும் எம்மில் அநேகமானவர்கள் அறிந்திருப்பார்கள்.

நமது வரலாற்றை சற்றுத் திரும்பிப் பார்ப்போமேயானால். இன்று போல் விதவிதமான உணவுகளோ உடன் உணவுகளோ அன்று இருக்கவில்லை. விவசாயம் செய்தும் வேட்டையாடியுமே நமது முன்னோர்கள் ஜீவித்தார்கள். பௌத்தர்கள் மட்டுமல்லாது ஏனைய மக்களும் போற்றும் பண்டைய அரசர்கள் கூட வேட்டையாடி இறைச்சியைச் சாப்பிட்டுள்ளார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக தேவநம்பிய தீஸ மன்னன் காட்டுக்கு மான் வேட்டையாடச் சென்ற சமயமே மகிந்த தேரரைச் சந்தித்து பௌத்த மதத்தை தழுவிக் கொண்டார் என்ற வரலாற்றை பலரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே ஆரம்பக்கால பௌத்த மக்களிடமும் இறைச்சிக்காக மிருகங்களை வேட்டையாடும் பழக்கம் இருந்தமை உறுதியாகின்றது.

மேலும் தாய்லாந்து பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். அந்நாட்டு மக்கள் விஷப்பாம்புகளை உணவாக உற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஜப்பானில் மிகவும் விலை உயர்ந்த உணவாக மாட்டிறைச்சி கருதப்படுகிறது. இவர்கள் சமைக்காத மீன்களையும் உட்கொள்கின்றனர்.  வியட்நாம் மக்கள் ஈசல், கரப்பான் பூச்சிகளையும் உணவாக உட்கொள்கின்றனர். இந்த நாடுகளில் எல்லாம் பேசப்படாத மிருக வதை  இலங்கையில் மாத்திரம் பேசப்படுவது தான் ஆச்சரியமாக உள்ளது. 

இலங்கையைப் பொறுத்தவரையில் மாடு அறுப்பதல்ல சம்பந்தப்பட்டவர்களின் பிரச்சினை. அது ஒரு  இன ரீதியான பிரச்சினையாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக மீன்பிடித்துறையை எடுத்துக் கொண்டால் 70 வீதமான மீனவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாகவே உள்ளார்கள். அவர்கள் அனைவரும் மீனை உட்கொள்கிறார்கள். எனவே மீன் பிடித்தலுக்கு எதிராக யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள். மீறி யாரும் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மை இனத்தவர்கள் கிளர்ந்து எழுந்துவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

எனவே இலங்கையில் ஆடு மாடு கோழிகள் அறுக்கப்படுவதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறைச் சாத்தியமற்றதாகும். மாடு அறுப்பதைத் தடை செய்வதானால் கோழி அறுப்பது மற்றும் மீன் பிடிப்பது என்பவற்றையும் தடை செய்யவேண்டும். ஆடு மாடு கோழி வளர்ப்பினால் இன்று இலட்சக்கணக்கான குடும்பங்கள் பயன் பெறுகின்றன. வேலை வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. இவற்றில் அதிகமான சிங்களவர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.  எனவே இவற்றைத் தடை செய்தால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். பலருக்கு தொழில் வாய்ப்பின்றிப் போகும் என்பதில் ஐயமில்லை.  
பஹமுன அஸாம்