குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Monday, February 25, 2013

இது விதியல்ல




பஹமுன அஸாம்



தினக்குரல் உதயசூரியனில் வெளியான ஆக்கம்

மனிதன் கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்தியர்களையே உயர்ந்தவர்களாகக் கருதி மதிப்பும் மரியாதையும் கொடுக்கின்றான்.ஏனெனில் பல்வேறு நோய்களில் இருந்து அவர்களைக் காப்பாற்றும் புனிதமான தொழிலை அவர்கள் செய்வதால் தான் அந்த கௌரவத்தை அவர்களுக்கு மனிதன் வழங்குகிறான். ஆனால் வைத்தியர்களில் சிலரது கவனக்குறைவாலும் அசமந்தப் போக்காலும் அண்மைக்காலமாக அநியாயமான முறையில் அப்பாவிகளான பலரின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதை அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக எம்மால் அறிந்து கொள்ள முடிகிறத.

அண்மையில் கொழும்பில் உள்ள பிரபலமான தனியார் வைத்தியசாலையில் புத்தினி ரத்நாயக்க என்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதியை பலர்அறிந்திருக்க வாய்ப்பில்லை. வலிப்பு நோய்க்கு  சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி  உயிரிழந்து சடலமாகவே வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டாள்.
சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் தனது தாய் இரு சகோதரிகளுடனும் வாழ்ந்து வந்த புத்தினியின் தந்தை வெளிநாடு சென்றிருந்தார்.
கடந்த 30 ஆம் திகதி புத்தினிக்கு வலிப்பு ஏற்பட்டதையடுத்து அவள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு புத்தினியைப் பரிசோதித்த வைத்தியர் எம்.ஆர்.ஐ ஸ்கான் பரிசோதனை செய்யவேண்டும் என்று சிபாரிசு செய்தார்.

அதற்கமைய மறுநாள் பிற்பகல் அப் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாய் சமிலா குமாரி தனது மகளை பரிசோதனைக்காக வைத்தியசாலையில் உரிய இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஒரு பெண் வைத்தியர் மட்டுமே இருந்துள்ளார். அவர் புத்தினியை “ஸ்கான்’ செய்வதற்கான ஏற்பாடுளை மேற்கொண்டார். புத்தினியின் தாய் வெளியே இருக்க உள்ளே வைத்தியர் தனது வேலைகளை ஆரம்பித்துள்ளார்.

சிறிது நேரத்திள் உள்ளே இருந்து ஒரு பெரிய வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து புத்தினியை பரிசோதனை செய்த வைத்தியர் “யாராவது உதவிக்கு வாருங்கள்’ என்று கத்தியுள்ளார். அப்போது அப்பரிசோதனை அறையில் எந்தத் தாதியரும் உதவிக்கு இருக்கவில்லை. அந்த வைத்தியர் புத்தினியின் வாயில் ஊதியும் நெஞ்சை அழுத்தியும் முதலுதவி கொடுப்பதில் தீவிரமாக செயற்பட்டுள்ளார். எனினும் அவ்வேளையில்  புத்தினியின் உடல் நீல நிறமாகி விகாரமாகக் காணப்பட்டதாகவும், அப்போதே அவரது உயிர் பிரிந்திருக்கும் என்றும் புத்தினியின் தாயார் தெரிவித்துள்ளார்.  சிறிது நேரத்தின் பின்னரே தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் உதவிக்கு வந்துள்ளார்கள். உடனே ஒக்சிஜன் கொடுத்து புத்தினியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார்கள்.

இவ்வாறு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த புத்தினியை(புத்தினியின் சடலத்தை) ஐந்து நாட்களின் பின்னரே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி குடும்பத்தவர்களிடம் ஒப்படைத்துள்ளார்கள். அத்தோடு வைத்திய செலவுகள் என்று சொல்லி  9 இலட்சம் ரூபாவுக்கான பற்றுச் சீட்டையும் கொடுத்துள்ளார்கள்.  மேலும்புத்தினியை ஸ்கான் செய்யும் போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும் அதனால் உடனே ஸ்கான் செய்வதை நிறுத்திவிட்டு அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்ததாகவும் புத்தினியின் உயிரைக்காப்பாற்ற முடிந்தவரை முயற்சித்ததாகவும் அவரது மரணத்துக்கான விளக்கத்தை வைத்தியர்களும் நிர்வாகமும் குடும்பத்தவர்களுக்கு கொடுத்தனர்.
புத்தினிக்கு நேர்ந்த கதியை எண்ணி ஆத்திரமடைந்த குடும்பத்தவர்கள்  இனியும் இது போன்ற சம்பவங்கள் எவருக்கும் நிகழக்கூடாது என்பதற்காக  ஊடகங்களை அழைத்து இதனை அம்பலப்படுத்த முற்பட்டபோது  வைத்தியசாலை நிர்வாகம் அதனை எதிர்த்துள்ளது. அத்தோடு பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்தது.
எம்.ஆர்.ஐ.ஸ்கான் இயந்திரத்தை இயக்கும்  போது ஒரு வைத்தியருடன் இரு தாதியர்களும் துணையாக இருக்க வேண்டும். ஆனால் அன்று புத்தினியை பரிசோதனை செய்யும் போது ஒரு வைத்தியர்மட்டுமே இருந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த புத்தினியின் தந்தை  சம்பவத்தை அறிந்த உடன் இலங்கைக்கு வந்துள்ளார். அத்தோடு தனது மகள் அநியாயமாக உயிரிழந்ததற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காவும் இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பதற்காகவும் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
புத்தினியின் இறுதிக் கிரியைகள் கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.

உலகத்தை அறிய காலடி எடுத்து வைத்து புறப்பட ஆரம்பிக்கும் தருணத்தில் அநியாயமாக இவ்வுலகத்தை விட்டே சென்று விட்டது அந்த மலராத மொட்டு.
அண்மைக்காலமாக ஒரு சில வைத்தியர்களின் கவனயீனத்தாலும் அசமந்தப் போக்காலும் பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன.நோய்களைத் தீர்ப்பார்கள் உயிர்களைக் காப்பார்கள் என்று நம்பிச் செல்லும் வைத்தியர்களே எம்மை அங்கவீனர்களாக்குவதையும் உயிர்களை எடுக்கும் எமன்களாக மாறுவதையும் எப்படி ஏற்றுக் கொள்வது?
அண்மையில் அச்சலா பிரியதர்ஷனி என்ற சட்டக்கல்லூரி இறுதி ஆண்டுமாணவியின் கையொன்று அநியாயமாக துண்டிக்கப்பட்ட சம்பவத்தையும் அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். சட்டத்துறையில் காலடி எடுத்து வைத்து தனது எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இத்தருணத்தில் அநியாயமாக தனது இடது கையை பறிகொடுத்து விட்டு இன்று நாட்டில் அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி காரணமாக எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஸ்டாராக மாறியுள்ளார்.

எங்கோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது. ஆனால் நான் யார்மீது குற்றம் சொல்லி பழிசுமத்தவில்லை< இது எனது விதியாக இருக்கலாம் என்று மனதைத் தேற்றிக் கொண்டுள்ளார் அவர்.
இவ்வாறு ஒரு சில வைத்தியர்களினதும் தாதியர்களினதும் கவனக்குறைவால் ஏற்படும் பாரிய விளைவுகளால் முழு வைத்தியத்துறைமீதும் மக்கள் நம்பிக்கை இழக்ழும் நிலை ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியாது.