குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Saturday, July 13, 2013

நோக்கத்தை மறந்து செயற்படும் துறவிகள்

பஹமுன அஸாம்

யுத்த வெற்றிக்குப்பின்னர் சேதமடைந்த வீதிகள் திருத்தப்படுகின்றதோ இல்லையோ தெருவுக்கொரு புத்தர் சிலை மாத்திரம் நிருவப்பட்டு வருகின்றன. எங்கே நமது வீட்டுக்கு முன்னாலும்  இரவோடு இரவாக புத்தர் சிலை முளைத்திருக்மோ என்ற அச்சத்துடனேயே கண்விழிக்கவேண்டியுள்ளது.

சிறு பான்மை இனம் என்ற ஒன்று இனி இல்லை. இலங்கையில் இனி இரண்டே இனம் தான். அது ஆண் இனம், பெண் இனம் என்று மேடைகளில் கம்பீரமாக அறிக்கைவிடும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ  இலங்கையில் அண்மைக்காலமாக நடைபெறும் இந்த இனவாத அடக்குமுறைகள் பற்றிக் கேள்விப்படுவதில்லை போலும்.

அயலவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், ஏனைய மதத்தவர்களுடன் எவ்வாறு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரியாதவர்கள் மதகுருமார்களாக இருப்பது தான் வேடிக்கை(வேதனை)க்குரியதாக உள்ளது.

அண்மைக்காலமாக பல இடங்களில் இரவோடு இரவாக புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட செய்திகளை அடிக்கடி கேள்விப்பக்கூயதாக விருக்கும். 

கடந்த மே மாதம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையாரடியில்  புத்தர் சிலை ஒன்று அமைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சிலராலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதே போன்று யாழ்ப்பாணம் குருநகர் மடத்தட்டிப் பகுதியில் கடந்த வெசாக் தினத்தன்று இராணுவத்தினரால் புத்தர் சிலை வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பிரதேச வாசிகளின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டது.  இவ்வாறு சில சமயங்களில் புத்தர் சிலை வைப்பது தடுத்து நிருத்தப்பட்ட போதும் பல சந்தர்ப்பங்களில் புத்தர் சிலைகள் நிருவப்பட்டதை தடுத்து நிறுத்த முடியாமல் போனது கவலைக்குறியதாகவே உள்ளது.


இவ்வாறான ஒரு சம்பவம் தான் கடந்த 30ஆம் திகதி வாழைச்சேனையில் பதிவாகியது.வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறந்துரைச்சேனை அல் அஸ்கர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இரவோடு இரவாக புத்தர் சிலையொன்று முளைத்துள்ளது. 

வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் உள்ள அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பனவற்றுக்குப் பொதுவாக உள்ள விளையாட்டு மைதானத்திலேயே இரவோடு இரவாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்வுகள் இம்மைதானத்திலேயே இடம்பெற்று வருகின்றன. இவ்வாறிருக்க கடந்த 2010 மார்ச் மாதம் 1ஆம் திகதி மைதானத்துக்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி øமாதனத்தின் சுற்று மதிலை உடைத்து விட்டு இது விகாரையின் காணி என்றும் இதில் வெளியாட்கள் யாரும் இனி விளையாட வரக் கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தார். 

அதனைத் தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தால் இவ்விடயம்  தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. கடந்த மாதம் 25 ஆம் திகதி மைதானம் பாடசாலைக்குரியது என்று  நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இருந்த போதும் வாழைச்சேனை புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பொருட்படுத்தாமல் கடந்த முப்பதாம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக மைதானத்தில் ஒரு மேசையின் மீது புத்தர் சிலையை வைத்துள்ளார்.
கடந்த யுத்த காலத்தின்போது விகாரையின் காணிகளை முறையாக பராமரிப்பு செய்ய முடியாமல் போனதால் தற்போது பாடசாலை மைதானம் என்று குறிப்பிடப்படுவதாகவும். விகாரைக்கு தற்போது குறைவான காணியே உள்ளதாகவும், இது முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டமல்ல புத்த ஜயந்தி விகாரைக்கான காணியை மீட்கும் போராட்டமாகும் என்றும் புத்தஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபயவன்ச  அலங்கார தேரர் புத்தர் சிலை வைப்பிற்கான காரணத்தைக்  குறிப்பிட்டுள்ளார். 

பௌத்த துறவிகள் என்போர் உலக இன்பங்களைத் துறந்து ஆன்மீக ஈடேற்றத்தை நோக்கமாகக் கொண்டவர்கள் என்று எல்லோரும் அறிந்திருக்கிறோம்.  ஆனால் இன்றைய ஒருசில பௌத்த துறவிகள் உலக இன்பங்களில் மூழ்கி தமது நோக்கத்தை மறந்து செயற்படுகிறார்கள் என்பதை  எண்ணும்போது தான் கவலையாக உள்ளது.

Sunday, July 7, 2013

மாணவனை மிருகத்தனமாகத் தாக்கிய அதிபர்

பஹமுன அஸாம்

பாடசாலைகள் என்பது நல்லதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் இடம். அத்தகைய புனிதமான இடங்கள் இன்று சர்ச்சைக்குரிய இடங்களாக மாறிவருகின்றமையை அவதானிக்கக்கூடியதாவுள்ளது

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை முழந்தாளிடவைத்தது. மாணவரொருவர் அதிபரைத் தாக்கியமை  அத்தோடு ஹொரணைப் பிரதேச பாடசாலை அதிபரொருவரால் பதினொராம் தரத்தில் கற்கும் 15 வயது மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டமை.  அந்தச் சூடு தணிவதற்குள் திறந்த பல்கலைக்கழக சட்ட பீட தலைவரை சட்டபீட மாணவரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியமை என கல்வித்துறை இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

இவற்றின் பரபரப்புகள் தணிவதற்குள் மற்றுமொரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் கடந்த 26 ஆம் திகதி தொடங்கொடைப் பகுதியில் பதிவாகியுள்ளது. பொசன் வெளிச்சக் கூடு போட்டியொன்றின் பரிசிலை அமைச்சரிடம் இருந்து தனக்குப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடைக்காமல் போனதால் ஆத்திரமடைந்த அப்பாடசாலையின் அதிபரான பெண் பரிசிலைப் பெற்றுக் கொண்ட மாணவனை மிருகத்தனமாக அடித்து வைத்திய சாலைக்கு அனுப்பிய செய்திதான் அது.

கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு வெசாக் வெளிச்சக்கூடு போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலைப் படைப்புகளில் ஆர்வம் காட்டிய தொடங்கொட நவோத்யா மகா வித்தியாலய 11 ஆம் தர மாணவனான இஷார ஜயலத் இப் போட்டியில் தானும் கலந்து கொண்டு முதல் பரிசை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக தொடங்கொட பொலிஸ் நி லயைப்  பொறுப்பதிகாரியை நாடினான். விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்ட இஷார ஜயலத் அதைப் பூர்த்தி செய்து அதிபரின் உறுதிப்படுத்தலோடு அதனை மீண்டும் பொலிஸ் நிலைத்தில் கையளித்தான்.

இஷார எப்படியாவது முதல் பரிசைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கனவோடு உற்சாகமாக பொசன் வெளிச்சக்கூட்டைத் தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டான். பொசன் போயா தினமன்று இஷாரவின் வெளிச்சக்கூடுகளும் ஏனையவற்றுடன் சளைக்காமல் கம்பீரமாக நின்றது. பலரும் பார்த்து ரசித்த அந்த வெளிச்சக்கூடு நடுவர்களையும் கவர்ந்து விட்டது.  இஷாரவின்  முயற்சி வீண்போகவில்லை. அவன் எதிர்பார்த்தது போலவே போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிக் கொண்டான்.

போட்டிக்கான பரிசில் வழங்கும் வைபவம் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவின் தலைமையில் இடம் பெற்றது. அப்போது முதல் பரிசைப் பெற்றுக் கொண்ட பாடசாலையின் பெயர் சொல்லப்பட்ட போது இஷார மகிழ்ச்சியாக சென்று தனக்குக் கிடைத்த முதல் பரிசு 15000 ம் ரூபாவை  அமைச்சர் குமார வெல்கமவிடம் இருந்து பெற்றுக் கொண்டான். ஆனால் அந்த மகிழ்ச்சி மேடையை விட்டு இறங்கிய ஓரிரு கணப்பொழுதுகளில் தவிடுபொடியாகி விட்டது. தனது கற்பனைத் திறனுக்கும் கலை முயற்சிக்கும் கிடைத்த பணத்தை அதிபர் பறித்துக்கொண்டு “நான்  மேடை ஏறி பெற்றுக் கொள்ள இருந்த பணத்தை நீ ஏன் சென்று பெற்றுக் கொண்டாய்’ என்று கேட்டு இஷாரவை கடுமையாகத் திட்டியுள்ளார்.

தான் கஷ்டப்பட்டு வெற்றி பெற்ற பணம் பாடசாலைக்குத் தானே என்று மனதைத் தேற்றிக் கொண்ட இஷார மறு நாள் 26 ஆம் திகதி வழமை போல பாடசாலைக்குச் சென்றான். காலைக் கூட்டம் நடைபெறும் போது ஒரு ஆசிரியர் “மெடம் மேடைக்குச் சென்று பெற்றுக் கொள்ள இருந்த பணத்தை நீ ஏன் மேடைக்கு சென்று பெற்றுக் கொண்டாய். சரி கூட்டம் முடிந்ததும் அதிபரைப் போய் சந்தி’ என்று சொல்லியிருக்கிறார். கூட்டம் முடிய சற்று மனப் பதறலோடு அதிபரைச் சந்தித்த இஷாரவுக்கு முதல் நாள் கிடைத்ததை விடப் பெரிய பரிசு கிடைத்தது. தாறுமாறான பிரம்படி. தான் மேடை ஏறி பெற்றுக் கொள்ள இருந்த பரிசை இஷார பெற்றுக் கொண்டதை பொறுக்க முடியாத அந்த பெண் அதிபர் இஷாரவைப் பிரம்பினால் கண்டபடி அடித்துள்ளார்.

26 ஆம் திகதி இஷாரவின் பெற்றோர் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது இஷார வீட்டில் இருக்கவில்லை. “வெளிச்சக்கூடு போட்டியில் பரிசு பெற்றுக் கொண்டதற்காக கூட்டம் முடிந்து எல்லோர் முன்னிலையிலும்  அதிபர் எனக்கு கண்டபடி அடித்தார். எனக்கு இனி பாடசாலை செல்ல முடியாது. எனக்கு அவமானமாக உள்ளது. நான் வீட்டை விட்டுச் செல்கிறேன்’ என்று கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டுச் சென்றிருந்தான். இஷாரவின் பெற்றோர் ஊர் முழுவதும் தேடியும் அவனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் ஒரு காட்டுக்குள் இருந்து இஷாரவைக் கண்டு பிடித்த பெற்றோர் அவனது உடம்பில் 20 இற்கும் மேற்பட்ட பிரம்படித் தழும்புகள் இருந்தக் கண்டு பதறிப் போனார்கள். சம்பவம் தொடர்பாக தொடங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்கள். பொலிஸார் உடனடியாக இஷாரவை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கடிதமொன்றைக் கொடுத்து அனுப்பினார்கள்.

அதிபரின் இந்த நடவடிக்கை மிருகத்தனமாகவே உள்ளது. இஷார கஷ்டப்பட்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற பரிசு. அதை அவனே மேடை எறிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதிபர் அதனை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் ஆசிரியை ஒருவரை முழந்தாழிட வைத்ததைக் கண்டித்து வீதியில் இறங்கி பதாதைகள் ஏந்தி கோஷம் போட்டவர்கள்  இஷாரவின் விடயத்தில் ஒன்றுமே செய்யாமல் வாய்மூடி இருப்பதற்கு என்ன காரணம்? ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கின்றோம், கண்ணியப் படுத்துகிறோம். ஆனால் அவர்களின் இது போன்ற மிருகத்தனமான செயல்களை எவ்வாறு பொறுத்துக் கொள்வது.?

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் இதுவரையில் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இன்னும் யாரும் கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் இலங்கை தேசிய அதிபர் சங்கத்தின் தலைவர் பரகும்பா வீரசிங்கவைத் தொடர்பு கொண்டு இச்சம்பவம் தொடர்பாக அவர்களது கருத்தைக் கேட்டதற்கு  இச்சம்பவத்தை தான் ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டதாகவும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்த முறைப்பாடோ அறிவித்தலோ தனக்கும் இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும்  தவறுசெய்திருந்தால் உரிய நபர் பாரபட்சம் இன்றி தண்டிக்கப்பட வேண்டுமெனவும் அந்த பொசன் வெளிச்சக்கூடு போட்டி கல்விக் காரியாலயத்தின் அனுமதியோடு நடைபெற்ற ஒன்றா என்பன போன்ற விடங்யங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்

ஒரு ஆசிரியையை அவமானப்படுத்தியதற்காக ஒரு மாகாண சபை உறுப்பினரையே கைது செய்தவர்கள், ஒரு மாணவனை நியாயமான காரணமில்லாமல் மிருகத்தனமாக அடித்து காயப்படுத்திய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி எதுவும் நடக்காதது போன்று  இருப்பது மாணவர்களை அச்சத்துக்குள்ளாக்கும் செயலாகவே உள்ளதுடன் அந்த ஆசிரியரின் மருகத்தனமான செயலை நியாயப் படுத்துவதுமாகவே உள்ளது.