குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, December 25, 2013

தேவயாணிக்காக சங்கீதாவை மறந்துவிட்ட இந்திய அரசு

அஸாம் தாவுஸ்

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத்தூதுவராகப் பணியாற்றிய தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவையும் சீற்றமடைய வைத்துள்ளது. விசா மோசடி காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவாயனி கோபர்கடேவைப் பற்றி ஊடகங்கள் மற்றும் அரச தலைவர்களின்  அனுதாப மற்றும் கோப  அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 

தேவயானி கோபர்கடேவின் கைது பற்றி கவலைப்படுகிறவர்கள் கோபப்படுகின்றவர்கள் அவர் தனக்கு வழங்கப்பட் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்ததை மறந்து போனமைதான் ஏனென்று தெரியவில்லை. ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத ஒருவர் கைது செய்யப்பட்டது போன்று இந்திய அரசு ஆவேசப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.

தனது பிள்ளைகளின் முன்னால் கைது செய்தமை , கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றமை, நிர்வாணமாக்கி சோதனையிட்டமை, பெரிய குற்றங்களைச் செய்த கைதிகளுடன் சேர்த்து வைத்திருந்தமை போன்றன அமெரிக்கக் காவல் துறையினரின் அதிகப்படியான செயல்தான்.

இருப்பினும் இந்தக் கருத்துக்களை நியூயோர்க் நகர அரசுதரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா மறுத்துள்ளார். தேவயானி குழந்தைகளின் முன் கைது செய்யப்படவோ அவருக்கு கைவிலங்கிடப்படவோ இல்லை என்றும், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு தொலைபேசியில் உரையாட அனுமதித்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தேவயானி ஒரு தனியறையில் பெண் அதிகாரியொருவரினாலேயே சோதனையிடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் பிரீத் பராரா ஒரு இந்திய வம்சாவழி அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயானி மீது முறைப்பாடு செய்தது ஒரு இந்தியப் பெண். அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது இந்திய வம்சாவழியில் வந்த ஒருவர். எனவே இந்த கைது விடயம் வீட்டுப் பிரச்சினையை ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கொண்டு  சென்ற ஒரு விடயமே தவிர,  இந்திய அரசு அமெரிக்காவைக் குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
 தேவயானி ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர். அவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை தனது சுயநலனுக்காகவே துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த விடயங்கள் தேவயானி வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் சென்ற சங்கீதா ரிச்சார்ட் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதென்றே கூறலாம். மேலும் இது போன்ற பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதில் பிழையேதும் இருக்காது.
தேவயானியைக் கைது செய்தமைக்காக ஆத்திரப்பட்ட இந்திய மக்கள் அதே இந்திய மண்ணில் பிறந்த சங்கீதா ரிச்சார்ட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

தேவயானியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காகவும் அவரின் இரு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காகவும் அழைத்துச் செல்லப்பட்டவர்தான் சங்கீதா ரிச்சார்ட். பொதுவாகவே வெளிநாடுகளில் வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுதல், கொலை, சித்ரவதை, சரியான ஊதியம் வழங்காமை என்று பல துன்பங்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை எல்லா நாடுகளிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்தவரிசையில் தான் சங்கீதா ரிச்சார்ட்டும் இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளார். 
 தேவயானியின் வீட்டு வேலைகளுக்காகவும் அவரது இரு பெண் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காகவும் சங்கீதா ரிச்சார்ட்டை தேவயானி நியூயோர்க் அழைத்துச் சென்றுள்ளார்கள். ஒப்பந்தத்தில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் சங்கீதா ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வரை வீட்டு வேலைகளைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மாதாந்தம் 4500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதாக  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 473 டொலரே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா ஒரு நாள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நியூயோர்க் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வழக்கறிஞரை நாடி விடயத்தைச் சொல்லியுள்ளார். அன்றிலிருந்து தான் தேவயானியின் தலையெழுத்து மாற்றியெழுதப்பட்டது.

சங்கீதா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தேவயானி ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார். சங்கீதா ரிச்சார்ட்டின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தேவயானி பற்றி மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. சங்கீதா குட்டையை குழப்பி விட தேவாயனியின்  விசா மோடி விடயமும் அம்பலத்துக்கு வந்தது. அமெரிக்க விசா பெற்றுக் கொள்வதற்காக சங்கீதா பற்றிய பிழையான தகவல்களை வழங்கியுள்ளார் தேவயானி. மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விட குறைவான சம்பளத்தைக் கொடுத்து அமெரிக்க அரசுக்கு பொய்யான கணக்கு காட்டியது பெரிய தவறாகும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.    

கைது செய்யப்பட்ட தேவயானி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி குற்றங்களுக்காக 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.

இவ்வாறிருக்க தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு வழக்கைத் திரும்பப் பெறாவிட்டால் இந்திய. அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியா தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் அளித்த பேட்டியொன்றில் தேவயானி கோபர்கடே மீதான வழக்கு திரும்பப் பெறவோ மன்னிப்புக் கோரவோ மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்  
இந்நிலையில் தேவயானியை ஐ. நா.வின்  இந்திய அரசின் நிரந்தர அதிகாரியாக நியமித்துள்ளது இந்திய அரசு. இதன்மூலம் அவர் துணைத் தூதர் என்ற அந்தஸ்தில் இருந்து தூதரக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதனால் அவருக்கு முன்னரை விட அதிகமான சலுகைகளும் பாதுகாப்பும் கிடைப்பதோடு< அவரை எளிதில் கைது செய்யவும் முடியாது.

பணிப்பெண்ணுக்கு எதிராக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடே இழைத்த குற்றங்கள் தொடர்பாக பேசுவதை விட்டுவிட்டு, தேவயானி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டும் இந்திய அரசு மற்றும் ஊடகங்கள் என்று எல்லோரும் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. சங்கீதாவும் தன்னாட்டுப் பிரஜை என்பதை இந்திய அரசு மறந்துவிட்டதா அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் தவரிழைத்தால் அது குற்றமிழைத்தால் அது குற்றமில்லையென இந்திய அரசு கருதுகிறதா?




No comments:

Post a Comment