குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Sunday, March 17, 2013

உயர்குடிக்கும் விளையாட்டுப் போட்டிகள்


(பஹமுன அஸாம்)


விளையாட்டுப் போட்டிகள் என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான். ஓரிரு பாடங்களுக்குப் பிறகு மைதானத்துக்கு ஓடி விடுவர்கள். உற்சாகத்தோடு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இருந்த நிலை. ஆனால் இந்த நிலை இன்று மாறியுள்ளது.


பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி என்றாலே பயந்து விலகி ஓடுமளவுக்கு மாணவர்களின் மன நிலை மாறிவிட்டது. சுமார் ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தமையே இதற்குக் காரணமாகும்.

கடந்த ஜனவரி 28ஆம் திகதி பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பலியான முதலாவது உயிர் என்ற பதிவு மன்னார் கோயில்குளத்தைச் சேர்ந்த டிலோஜனுடையதாகும். மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலையில்) 12ஆம் ஆண்டில் பயின்ற டிலோஜன் மிகுந்த உற்சாகத்துடன் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறான். ஆனால் அந்த உற்சாகத்தோடு அவனால் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போகிறது. இடை நடுவில் வாந்தியெடுத்து விழுகிறார். வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் டிலோஜனது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

இரண்டாவதாக ஜனவரி 31ஆம் திகதி கௌஷல்யா பவித்ராணி என்ற மாணவிக்கு நேர்ந்த கதி பலரது உள்ளங்களைவிட்டு இன்னும் மறைந்திருக்காது. சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி கௌஷல்யா பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் இடைநடுவில் பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சிலாபம் வாழ்மக்களை மட்டுமன்றி நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்த மாணவியின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குமுன் மற்றுமொரு மாணவியும் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தாக பெப்ரவரி 18ஆம் திகதி மொறட்டுவப் பிரதேசத்தில் இருந்து ஒரு செய்தி வெளியானது. ஞானேஷ்வர பௌத்த வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி பயின்ற அஞ்சலி இசுரிகா என்ற மாணவியே அவ்வாறு தனது உயிரை அநியாயமாக துறந்தவர். இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அப்பாடசாலை மாணவிகள் மாத்திரமல்ல ஏனைய பாடசலை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களது உள்ளத்திலும் ஒருவித பயம் குடிகொண்டுவிட்டது. விளையாட்டுப் போட்டிகளை மேற்கொண்டு நடத்துவதற்குத் தயங்குகிறார்கள்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பின்னர் மற்றும் ஒரு செய்தி கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி அரநாயக்க ரிவிசந்த தேசியப் பாடசாலையில் இருந்து பதிவாகிறது. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது இவ்வருடத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தனது பெயரை நான்காவதாக பதித்துவிடுகிறார் ஹஷினி அனுஷா குமாரி என்ற மாணவி. 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றிய அவரால் 300 மீற்றர் தூரத்தை மட்டுமே ஓட முடிந்தது. இடைநடுவில் கீழேவிழுந்தவர் தன் உயிரையும் இழந்துவிடுகிறார்.

இவ்வாறு ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 26 ஆம் திகதி வரையான சுமார் ஒரு மாதகால இடைவெளியில் நான்கு மாணவர்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய வேளையில் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித அச்சமான சூழ்நிலையே காணப்படுகிறது. திறமையாக விளையாடக்கூடிய மாணவர்களும் பயம் காரணமாக போட்டியில் பங்கு பற்றத் தயங்குகிறார்கள். பின்வாங்குகிறார்கள். மறு பக்கம் அதிபர் ஆசிரியர்களும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயங்குகிறார்கள். 

இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற முன்னர் போட்டிகளில் பங்குபற்றும் சகல மாணவர்களுக்கும் வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியே நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இச்செயற்திட்டத்தை பாரபட்சமின்றி சகல பாடசாலைகளிலும் மேற்கொள்ள வேண்டும். இன்னொரு பாடசாலையில் இது போன்றதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவது இவைதான் ஆரம்பமல்ல. சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஹோமாகம கல்வி வலயத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியை முடித்து வெற்றிக் கோட்டில் விழுந்த மாணவனின் வாய் மற்றும் மூக்கால் நுரை கக்கி இறந்திருக்கின்றார். பதிவுகளின்படி இதுதான் விளையாட்டுப் போட்டியின் போது ஒரு மாணவன் உயிரிழந்த முதலாவது சம்பவமாக கருதப்படுகிறது. அதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக பதிவுகள் இல்லை. அச்சம்பவத்தின் பின்னர் அவ்வப்போது பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குத்துச்சண்டை, கராத்தே போன்ற போட்டிகளின் போதான உயிரிழப்புக்களே அதிகமாக இடம் பெறுகின்றன. 

பாடசாலை மாணவர்களின் போசாக்கு, தேகாரோக்கியத்தில் பெற்றோர் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் சுமார் 50 வீதமான மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கிறார்கள். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போதும் மாணவர்கள் இவ்வாறுதான் காணப்படுவார்கள். கடையில் உள்ள துரித உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றை நிறப்பிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்குத் போதியளவு சத்துக்கள் கிடைப்பதில்லை. 

சாதாரணமாக பாடசாலையில் தினமும் கலையில் நடக்கும் சுமார் ஐந்து நிமிட ஒன்று கூடலின் போதே ஓரிரு மாணர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். ஓட்டப் பந்தயங்களின்போது ஏற்படும் அதிக களைப்புக்கு இவர்கள் எவ்வாறு ஈடுகொடுப்பார்கள். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணியாகவே இருக்கின்றது.  எப்படியே விளையாட்டுப் போட்டிகளின்போது இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடருமேயானால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கங்களையும் சர்வதேச வெற்றிகளையும் பெற்றுத் தரக்கூடிய வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

No comments:

Post a Comment