குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Saturday, May 26, 2012

வானொலிப் பெட்டியால் வந்த கொலை வெறி



Published On:
 Sunday 20 May, 2012


கதரக் கதர கல்லால் அடித்துக் கொலை. 
மனோஜ் சிவகுமாருக்கு  நடந்த கோரச் சம்பவம்


மாரிமுத்து அம்மா கிதலன்வத்த பிரதேசத்தில் வசித்துவரும் ஒரு தோட்டத் தொழிலாளி. தனது கணவன் விட்டுச் சென்றதன் பின்னர், இரு பிள்ளைகளுடனும் லயம் அறையில் ஒரு வறண்ட வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். தனிமைக்கு அவர்களது பெற்றோரும் அவருடனேயே இருந்தார்கள். மாரிமுத்து அம்மாவின் முதலாவது மகள் உமா ராணி. அவர் கொழும்பில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலைபார்த்து வந்தார். இதனால் அவர் அதிகமாக வீட்டுக்கு வருவதில்லை.

இரண்டாவது மகன் மனோஜ் சிவகுமார். அவன் கிதலன்வத்தையில் உள்ள ஒரு பாடசாலையில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வந்தான். வறுமைக் கோட்டின்கீழ் பல போராட்டங்களுக்கு மத்தில் தமது வாழ்ககையை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் அண்மையில் ஏற்பட்ட இழப்பு அவர்களுக்கு மட்டுமல்ல அந்தப் பகுதியையே சோக மழைக்குள் ஆழ்த்தியது.

காலைப் பொழுது விடிந்ததில் இருந்து மாலைப் பொழுது சாயும்வரை தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளோடு போராடிய மாரிமுத்து அம்மா ஒரு சிறிய வானொலிப் பெட்டியை வாங்கினார். ஆனால், அந்த வனொலிப் பெட்டி திடீர் என்று காணாமல் போய்விட்டது. பலருக்கு இது சாதாரண விடயமென்றாலும் மாரிமுத்து அம்மா போன்ற தோட்டத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு இது ஒரு பெரிய விடயம்தான். தேயிலைக் கொழுந்து பறித்து கால் வயிறு, அறை வயிறு நிரப்பும் அவர்கள் அந்தப் போராட்டத்துக்கு மத்தியிலும் சிறுகச்சிறுக சேமித்து இந்த வானொலிப் பெட்டியை வாங்கியுள்ளார்.

இது அவரது உள்ளத்துக்கு பெரிய ஒரு சந்தோஷம்தான். ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் அவருக்கு கொடுத்து வைக்கவில்லை. யாரோ அந்த வானொலிப் பெட்டியை திருடிக்கொண்டு போய்விட்டார்கள். மாரிமுத்து அம்மாவுக்கு ஒருவர் மீதுதான் சந்தேகம் ஏற்படுகிறது. அதுவேறு யாருமல்ல அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் மலர்மதி. மாரிமுத்து அம்மா தனது சந்தேகத்தை பொலிஸாரிடமும் தெரிவிக்கின்றார்.



மலர்மதி சிறிது காலத்துக்கு முன்னர்தான் கிதலன்வத்தைக்கு வந்தார். அது அவரது பாட்டியுடனாகும். கிதலன்வத்தையில் ஏனைய பெண்கள் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்கச் சென்றாலும் மலர்மதி அந்தத் தொழிலைச் செய்யவிரும்பவில்லை. அதற்குப் பதிலாக சிறிய நிறுவனங்களக்குச் சென்று அங்குள்ள ஏதாவது வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு வருவார். காலப்போக்கில் அந்த வாழ்கையும் மலர்மதிக்கு போதுமாகிட்டதுபோல. எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டார்.

மாரிமுத்து அம்மா தன்னைப்பற்றி பொலிஸாரிடம் முறையிட்டதால் ஆத்திரமடையும் மலர்மதி தனது விஷப் பார்வையை மாரிமுத்து அம்மாவின் பக்கம் திருப்புகிறார். அப்போது அந்தப் பார்வையில் சிக்குவது மாரிமுத்து அம்மாவின் 6 வயது மகன் மனோஜாகும். அன்று மே மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை. வெசாக் போயா தினத்துக்கு முந்திய நாள். வழமைக்கு மாற்றமாக அன்றை உதயம் மாரிமுத்து அம்மாவுக்கு எந்த வித்தியாசத்தையும் காட்டிக் கொள்ளவில்லை. மனோஜ் காலையிலேயே எழுந்து பாடசாலைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.


அம்மா நான் போய்ட்டு வருகிறேன். மிகுந்த உற்சாகத்தோடு தனது தாயுடன் வழமையான ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்ட மனோ கடைசியாக தனது தாய்க்கு விடை கொடுக்கிறான். கடைசிய தனது மகனை பாடசாலைக்கு வழியனுப்புகிறோம் என்பதை அறியாத மாரிமுத்து அம்மாவும் மகனை சந்தோஷமாக அனுப்பிவைக்கிறார். ஒருவேலை ஏற்படப்போகும் கொடூரத்தை அவர் அறிந்திருந்தால் நிச்சயமாக மனோவை அன்றைய தினம் பாடசாலைக்கு அனுப்பியிருக்கமாட்டார்.மனோ பாடசாலைக்கு வருகிறார். அப்போதைக்கு மலர்மதி தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். கையில் சில கற்கலை வைத்துக்கொண்டிருந்த மலர்மதியின் கண்களில் அப்போதைக்கும் எமன் குடிகொண்டிருந்தான்.

மனோ பாடசாலைக்குள் வருவதோடு மலர்மதிக்குள் இருந்த எமன் செயற்பட ஆரம்பித்தது. கையில் இருந்த கல் ஒன்றார் மனோவுக்கு அடித்தார். அடிபட்ட மனோ கத்திக்கொண்டு பாடசாலையைச் சுற்றி ஓடினார். அது மலர்மதியிடம் இருந்து தப்பிக்க பாதுகாப்பான ஒரு இடத்தைத் தேடியாக இருக்கலாம். தப்பித்து ஓடிய மனோவை தன்னால் தனியாக பிடிக்க முடியாது என்று எண்ணிய மலர்மதி தனது நாயை ஏவிவிட்டார். நாயும் தனது எஐமானான மலர்மதியின் கட்டளைக்கு இணங்க மனோவைத் துரத்திப் பிடிக்கிறது.

கீழேவிழும் மனோவின் மேல் நாய் நிற்கின்றது. இப்போது தான் மலர்மதியினுள் இருந்த எமன் செயற்பட ஆரம்பிக்கிறான். மலர்மதி தனது கையில் இருந்த கற்கலால் மனோவின் தலையிலும் முகத்திலும் அடிக்கிறார். தலைவெடித்து பீரிட்டுப் பாயும் மனோவின் சூடான இரத்தம் பாடசாலை பூமியை நனைக்கிறது. மனோவைப் போன்று பாடசாலைக்கு நேரத்தோடு வந்திருந்த ஏனைய மாணவர்கள் இந்தக் கோரச் சம்பவத்தைப் பார்த்துப் பயந்து கத்துகிறார்கள். பிள்ளைகள் கதறும் சத்தம்கேட்ட பெற்றோர் என்னமோ ஏதோ என்று பதறியடித்துக் கொண்டு பாடசாலைக்குள் நுளைவதற்குள் நடைபெற வேண்டிய எல்லாம் நடந்துவிட்டது.



தன்னைப் பொலிஸாரிடம் காட்டிக்கொடுத்த மாரிமுத்து அம்மாவை பழிவாங்கும் எண்ணத்தில் காலையிலேயே அழகாக பூத்துக் குலுங்கியிருந்த மனோவை நசிக்கி நாசமாக்கி விட்டு வேலியால் பாய்ந்து தப்பித்துச் செல்கிறார் மலர்மதி. மனோ அடையாளம் தெரியாத அளவுக்கு இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்தான். அவனது ஒரு கண்கூட கழன்று விழுமளவுக்கு மலர்மதியின் உள்ளம் கல்லாக இருந்திருக்கிறது. உடனே செயற்பட்ட பெற்றோர் மனோவை அவசரமாக பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்கிறார்கள்.

பொலிஸாரின் ஆலோசனைப்படி மனோ தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறான். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பதுல்ல பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுகிறான். பதுல்ல வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 4 நாட்கள் போராடிய மனோவால் எமனை வெற்றிகொள்ள முடியாமல் போய்விட்டது. மனோ நிரந்தரமாக இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்கிறான். ஒரு வானொலிப் பெட்டி திருட்டில் ஆரம்பித்த பழிவாங்கும் எண்ணம் கடைசியில் ஒரு பிஞ்சு உயிரை காவுகொள்கிறது.

No comments:

Post a Comment