குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, June 1, 2012

இணைய ஒழுங்கமைப்புக்கு ஐ.நா. ராடார் அவசியமா?

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் கூட பொருளாதார, சமூக, கலாசார முறைமைகளை மீளக்கட்டமைப்பதற்கான வலுவான சக்தியாக இணையம் (இன்ரர்நெற்) இன்று வியாபகமெடுத்து வருகின்ற நிலையில் இதனை அரசாங்க மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அமைப்பான ஐ.நா. சபையூடாகவும் ஒழுங்கமைப்புக்கு உட்படுத்த வேண்டுமென்ற பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

இந்த இணையமானது மிகவும் அனுகூலமான தொடர்பு ஊடகமென்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கல்விமான்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பாரிய வர்த்தகத்துறையிலிருந்து சவாலை எதிர்நோக்கும் சிறிய மற்றும் புதிதாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்போர் இந்த இணையத்தால் ஆரம்பத்தில் பாரியளவு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது அந்தக் கட்டத்தை உலகம் தாண்டிச் சென்று விட்டது. இலட்சோப இலட்சம் டிஜிட்டல் பரப்பு வலைப்பின்னல் கட்டுமானத்தை ஒழுங்கமைவான சில பரப்புகளினூடாக  (கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசன் போன்ற இணையத்தளங்கள்) இன்று நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால், இணையத்தின் திட்டங்கள் ஒரு சில பாரிய இணையத்தளங்களுடன் பிணைப்புகளைக் கொண்டதாகவே உருவாகிவருவதாகவும் பொதுமக்களுக்கான வெளிப்படைத்தன்மை காணப்படாத நிலைமை மேலோங்கி வருவதாகவும் மாற்றுக்கருத்துகள் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

"இணையத்தை' எவருமே ஆட்சி செய்ய முடியாது என்பது உண்மையில் வெறும் மாயைதான். அரசியல், பொருளாதார ரீதியில் பலம்வாய்ந்த சக்திகளினாலேயே "இணையம்' வடிவமைக்கப்படுவதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கம்பனிகள் இணையத்தின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.
இதேவேளை ஐ.நா.வின் கட்டுப்பாட்டின் கீழ் இணையத்தை ஒழுங்குபடுத்தும் யோசனையைக் கடந்த 2011 அக்டோபரில் இந்தியா சமர்ப்பித்திருந்தது. இணையம் தொடர்பான கொள்கைகள் குறித்து அரசாங்கங்களுக்கிடையிலான 50 பேர் கொண்ட குழுவை நியமிக்கும் யோசனையை இந்தியா தெரிவித்திருந்தது. ஜனநாயக ரீதியில் இணையமானது நிர்வகிக்கப்பட வேண்டியது சிறப்பான யோசனைதான். அதாவது சகல குழுக்கள், பொதுமக்கள் நாட்களை சமத்துவமான முறையில் சம்பந்தப்படுத்தி இந்த இணையத்தை நிர்வகிப்பதற்கு ஒரு ஒழுங்கமைப்புக் கொள்கையை சர்வதேச அமைப்பான ஐ.நா. மட்டத்தில் ஏற்படுத்துவது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமான விடயம்தான். ஆனால், நாணயத்தின் மறுபக்கம் போன்று இது ஐ.நா. வின் கீழ் உள்ள இந்த உத்தேச ஏற்பாடுகளின் பிரகாரம் பலம்வாய்ந்த நாடுகள் தமது அரசியல் பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கும் வறிய நாடுகளை தொடர்ந்தும்  தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கும் அந்நாடுகளின் உள்நாட்டு அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கும் இந்த உத்தேச ஐ.நா. போர்வையை பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகளவில் உள்ளன.  மனித உரிமைகள், சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் என்பன போன்ற விட்டுக்கொடுக்க முடியாதவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே"இணையம்' நிர்வகிக்கப்படுவது அவசியம். அத்துடன் இதனை நிர்வகிக்கும் முறைமையானது வெளிப்படைத்தன்மையைக் கொண்டதாகவும் சகல தரப்பினரையும் உள்ளீர்த்ததாகவும் இருக்க வேண்டும்.

எந்தவொரு நாடும் ஏகபோக உரிமையை இணையத்தில் கொண்டிருக்காத விதத்தில் இணைய நிர்வாகம் தொடர்பான கொள்கையை ஐ.நா. வானது தனது உறுப்பு நாடுகளூடாக வகுத்து செயற்படுவது சிறப்பானதாகும். ஆனால், லிபியா, எகிப்து இப்போது சிரியாவென "அரபு வசந்தத்தில்'  எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் தூக்கில் வீசப்பட்டதற்கு சமூக இணையத்தளங்களின் பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் சமூக இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதில் முனைப்புக் காட்டுவது எதிர்பார்க்கக்கூடிய விடயம்தான்.

தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து

No comments:

Post a Comment