குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Tuesday, June 12, 2012

டெங்கு ஒழிப்பு போருக்கு எப்போதும் தயார்நிலை அவசியம்

டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையில் கவனயீனமாக நடந்து கொண்டதற்காக கம்பஹா மாவட்டத்திலுள்ள  18 பாடசாலைகளின் அதிபர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டெங்கு ஒழிப்பு வாரத்தில் இந்த மாவட்டத்தில் 27 பாடசாலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையில் மேற்படி 18 பாடசாலை வளவுகள் மோசமான நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் காரணமாகவே அமைச்சு இந்த கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
டெங்குநோய்  அபாயம் எமது நாட்டில் நீண்டகாலமாகவே காணப்பட்டு வருகின்றது.பல நூறுபேர் டெங்கு நோய் காரணமாக மரணத்தை அரவணைக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து மோசமான நிலை உருவாகிவரும் நிலையில் கூட இளம் சந்ததிக்கு கல்வி அறிவை புகட்டும் பாடசாலைகளில் கூட சுகாதாரத்தைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரியர்கள் தவறிவிட்டனர். நடந்து  போன அனர்த்தங்களினால் பாடம் கற்றுக்கொள்ள தவறுவோர் மீது தயவு  தாட்சண்யம் காட்டப்படக்கூடாது என்பதில் நாமும் உறுதியான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றோம்.
வருடாவருடம் டெங்கு ஒழிப்புக்கென ஒருவாரத்தை மாத்திரம் பிரகடனப் படுத்துவதால் பயனுண்டா என்ற கேள்வி எழுப்புவது கூட நியாயமானதாகவே தெரிகிறது. வருடத்துக்கு ஒரு தடவை ஒரு வாரத்தில் மாத்திரம் சுகாதாரத்தைப் பேணுவதால் பிரச்சினை தீர்ந்து விடவா போகின்றது. சுகாதார அமைச்சின் கணக்கெடுப்பின்படி  பிரதான நகரங்கள் உட்பட நாடு முழுவதும் டெங்கு அபாயம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. அதுவும் ஒட்டுமொத்த கணக்கெடுப்பில் கம்பஹா மாவட்டமே மிக மோசமான பிரதேசமாக இருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
டெங்கு ஒழிப்பை அறிக்கைகள், பிரசாரங்கள் மூலம் தீர்வுகாண முடியாது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தன்னைப்பற்றி உணரவேண்டும். தத்தமது வீடு, வீட்டுத் தோட்டம் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க முன்வந்தால் அதன் மூலம் டெங்கு நுளம்பு ஒழிப்புத் திட்டத்தில் வெற்றி இலக்கை அடைய முடியும். இன்று டெங்கு ஒழிப்பு வாரம்  கூட அரசியல் பிரசாரம் போன்றதாகவே மாறியுள்ளது. டெங்கு ஒழிப்பு வாரம் முடிந்த  பின்னர் இன்னும் ஒரு வருட காலம் வரை அதனை மறந்து விடும்  நிலையே காணப்படுகிறது. இதற்கிடையில் டெங்கு நோயால் எத்தனை உயிர்கள்  பலியாகின்றன என்பதை அடுத்த வருடக் கணக்கெடுப்பிலேயே அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பாடசாலைகளுக்கு அப்பால் கம்பஹா மாவட்டத்தில் 152 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் நூற்றுக்கும் அதிகமான இடங்கள் டெங்கு நுளம்பு பரவும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் மக்கள் செயற்பாடுகள் தொடரும் வரை டெங்கு நுளம்புக்கெதிரான  போராட்டத்தில் வெற்றிகாண முடியாது. அரசாங்கமும் இந்த விடயத்தில் மேலோட்டமாகச் செயற்பட்டு பழியை மக்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  கம்பஹா மாவட்ட பாடசாலை அதிபர்கள் 18 பேரும் தண்டிக்கப்படுவதால் மாத்திரம் காரியம் முடிந்துவிடப்போவதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் அது  போன்ற குற்றங்கள், தவறுகள், பாராமுகமான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். டெங்கு ஒழிப்புக்கான விரிவான திட்டம்  அறிமுகப்படுத்தப்படவேண்டும். இதில் முக்கிய விடயம் ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். முன்பு நாட்டின் சகல கிராமங்களிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இன்று அவை தொகுதிக்கு ஒன்று என்ற அடிப்படையிலேயே காணப்படுகின்றனர்.  40, 50 கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுதிக்கு ஒரு சுகாதார உத்தியோகத்தரால் உரிய  சேவையாற்ற முடியுமா ? மீண்டும் கிராமத்திற்கு ஒரு சுகாதார அதிகாரிகள் ( ஏஞுச்டூtட ஐணண்ணீஞுஞிtணிணூ) நியமிக்கப்படுவதன் மூலம் கிராம மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அடுத்த வருட டெங்கு ஒழிப்பு வாரம் வரை காத்திராமல் இன்றே காத்திரமான பணிகளை முன்னெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் டெங்கு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராக வேண்டும்.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து

No comments:

Post a Comment