குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Thursday, May 30, 2013

தீயினால் தீர்வா?




பஹமுன அஸாம்

மதகுருமார்கள் என்பவர்கள் பற்றுக்களை ஒடுக்கியவர்கள். அதிலும் பௌத்த துறவிகளை நாம் சாதுக்கள் எனவும் அழைக்கின்றோம். சாதுக்கள் எப்போதும் அமைதியானவர்களாக அகிம்சையைப் போதிப்பவர்களாகவே காணப்படுவர். காணப்பட வேண்டும். அவர்கள் சாதாரண மனித உணர்வுகளுக்கு அடிமையாகக் கூடாது. அவ்வாறு அடிமையாகின்றவர்களை துறவிகள் என்று கூற முடியாது.


அமைதியான முறையில் தனது நியாயமான கோரிக்கையை வென்றெடுக்கப் போராடாது தனது மதம் சார்ந்த மிக முக்கியமான பண்டிகை நாளில் அனைவரையும் மனவேதனைக்குள்ளாக்கும்படி பௌத்த துறவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் மிகுந்த வேதனையடையச் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான பௌத்த மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடினார்கள்.  கௌதம புத்தர் பிறந்த  மற்றும் அவர் ஞானம் பெற்ற பரிநிர்வாணம் அடைந்த இத் தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த வேதனைக்குரிய சம்பவமும் இடம்பெற்றது.

பௌத்தர்களின் புனித வழிபாட்டுத் தலமான கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகைக்கு முன்னால் இந்த பௌத்த பிக்கு  தனக்குக் தானே தீ மூட்டிக் கொண்ட சம்பவத்தை பலரும் அறிந்திருப்பீர்கள். 


போவத்தை இந்திரரத்ன தேரரே இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். நாட்டு மக்கள் அனைவரும் வெசாக் வெளிச்சக்கூடுகளைப் பார்க்கச் செல்வதிலும் தானசாலைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தேரரின் இந்த நடவடிக்கை நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புத்தரின் புனிததந்தம் வைக்கப்பட்டுள்ள பௌத்தர்களால் புனிதஸ்தலமாக மதிக்கப்படும் கண்டி தலதா மாளிகையின் முன்பாக போவத்தை இந்திரதன என்ற இந்த தேரர் தான் அணிந்திருந்த ஆடையுடன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். பலர் இச்சம்பவத்தை பார்த்து திகைத்து நின்ற அதேவேளை சிலர்  புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருக்க  ஒரு சிலர் மாத்திரமே அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டனர். இருந்தும் பயனில்லை. அவரது உடம்பில் அதிகமான பகுதிகளை தீ பதம் பார்த்து விட்டது.

அவர் உடனடியாக கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதுஅவரின் பணிப்புரைக்கமைய விசேட வானூர்தி(ஹெலிகொப்டர்)மூலம் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டார். உடம்பில் எல்லா இடங்களும் தீயில் கருகியதால் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் போது அவரது உடல் முழுவதும் (பெண்டேச்) கட்டுப் போடப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த பிக்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் 25ஆம் திகதி சனிக்கிழமை  உயிரிழந்தார்.



பெல்மதுளை  பிரதேச சபையின் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினரான இந்திரரத்ன தேரர் பல கோரிக்கைகளை முன்வைத்த போது அவை கவனத்திற் கொள்ளப்படாததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார். 

இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடை செய்ய வேண்டும்.

சமாதானத்தின் உரிமை மனிதர்களுக்கு மாத்திரமன்றி மிருகங்களுக்கும் இருக்க வேண்டும்.

வற்புறுத்தி மதமாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம்  கொண்டுவரப்பட வேண்டும்.

பெரும்பான்மை  இனத்தவர்களின் மதம் சீரழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது பௌத்த நாடு இதற்கேற்ற ஒரு யாப்பு வரையப்பட வேண்டும்.
மதப் போரை ஒழிக்க வேண்டும்.

என்பனவே அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும். தனது கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய கடிதம் முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இவரது இச்செயற்பாட்டை அவர் முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வர மேற்கொண்டாரா அல்லது மக்களின் கவனத்துக்குக் கொண்டுவர மேற்கொண்டாரா என்ற கேள்வி தான் தற்போது எழுந்து நிற்கிறது.

இந்திரரத்ன தேரர்  இதற்கு முன்னரும் பாதயாத்திரை போன்ற பல நடவடிக்கைகளை மேற் கொண்டு ஜனாதிபதியின் (மக்கள்) கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சித்துள்ளார். 

எப்படியோ தன் உயிரைக் கொடுத்து அவர் முன் வைத்த கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படுமா? அவரது உயிருக்கான மதிப்பு எவ்வளவு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் போவத்தை இந்திரரத்ன தேரரின் இச்செயற்பாடு மனித மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

No comments:

Post a Comment