குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Thursday, May 30, 2013

தற்கொலை பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல!

பஹமுன அஸாம்


2013.05.17 வவுனியா தாண்டிக்குளம்.
3 பெண் பிள்ளைகள் உயிரிழப்பு.

2013.05.21 ஹொரணை.
                                4 நாள் வயதுடைய குழந்தை உயிரிழப்பு.

2013.05.21 திஸ்ஸமகாராம யுதகண்டிய.
5 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

2013.05.27 வாழைச்சேனை மீராவேடை.
இரு பெண் குழந்தைகள் உயிரிழப்பு




மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் 16 செல்வங்களில் கிடைத்தற்கரியது மழலைச் செல்வம். அது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்துவிடாது.ஒரு குழந்தைக்காக எத்தனையோ விரதமிருந்து கோயில் குளமெனவும் வைத்தியசாலைகளிலும் ஏறி இறங்கி ஏங்குபவர்கள் எத்தனையோ பேர்.

அப்படியும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் குழந்தைப் பாக்கியம் கிடைக்õமல் பலர் ஏங்கும் நிலையில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கிணற்றிலும் ஆற்றிலும் தள்ளிவிடும் பெற்றோரை என்னவென்று சொல்வது.

அண்மைக்காலமாக குடும்பத்தோடு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் அது தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. கடந்த  17 திகதியில் இருந்து இன்று வரையான 13 நாட்கள் அதாவது அரை மாத கால இடைவெளியில் மாத்திரம் பெற்றோரின் அசட்டுத்தனமான முடிவால் 7 குழந்தைகள் அநியாயமாக தமது உயிரைப் பலிகொடுத்துள்ளார்கள். 

அந்த வரிசையில் முதலாவது சம்பவம் கடந்த 17 ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றது. தாயொருவர் தனது மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி வீழ்த்திவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றார். இருந்தும் பிரதேச வாசிகளால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் லதுர்சிகா(6வயது), சன்சிகா (2 1/2வயது), மற்றும் நிதர்சிகா (1 1/2வயது) ஆகிய பெண்குழந்தைகள்  இச்சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். தாயின் மனநிலை சரியின்மை மற்றும் குடும்பத்தின் வறுமை நிலமை என்பனவே இக்கொலைக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தன.

இச்சம்பவத்தின் அதிர்ச்சியும் கவலையும் மக்கள் மனதில் இருந்து அகல்வதற்கு முன்னர் அதாவது ஒருவாரத்துக்குள் அது போன்று மற்றுமொரு சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஹொரணையில் இடம்பெற்றது. தாயொருவர் பிறந்து நான்கு நாட்களேயான குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இம்மண்ணில் மலர்ந்து நான்கு நாட்களேயான அந்த மொட்டு பூமியின் மணத்தை நுகர்வதற்குள் கசக்கி எறியப்படுகிறது. 

அதே தினத்தில் மற்றுமொரு சம்பவம் திஸ்ஸமகாராம யுதகண்டிய பிரதேசத்தில் இடம்பெறுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 55 வயதுடைய தந்தையும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று சம்பவங்களைத் தொடர்ந்து நான்காவது சம்பவத்துக்கு மிக நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. மூன்றாவது சம்பவம் இடம் பெற்ற நாளில் இருந்து சரியாக 6ஆவது நாள் அடுத்த சம்பவமும் இடம் பெறுகிறது. அச்சம்பவம் 27 ஆம் திகதி வாழைச்சேனை மீராவோடையில் பதிவாகின்றது.  தாயொருவர் தனது இரு பெண் குழந்தைகளுடனும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றார். இச்சம்பவத்தில் இரு குழந்தைகளும் பலியாக தாய்காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். 



பூஜா(7வயது) மற்றும் மேனுஜா(3 வயது) ஆகிய பெண் குழந்தைகளே சம்பவத்தில் கொல்லப்படுகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக இந்தப் பெண் பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. 

பொதுவாகப் பார்க்கும் போது நடைபெற்ற எல்லாச் சம்பவங்களும் குடும்பத் தகராறு மனஅழுத்தம் மற்றும் வறுமை ஆகியவை காரணமாக உள்ளன. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை முயற்சிஎன்பது ஒரு விநாடியில் அல்லது ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் முடிவல்ல. நீண்டகாலமாககத் திட்டமிட்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து எடுக்கப்படுவதேதற்கொலை முயற்சி. அம்முடிவுக்கு வந்தபின் அவர்கள் எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

தற்கொலை முயற்சி என்பது அத்தீர்மானத்துக்கு வருவோருக்கு  சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும். உயிர் ஊசலாடும் அந்த ஓரிரு வினாடிகளில் மரணத்தின் விளிம்பை மனதால் காணும் அந்தக் கணப் பொழுதுகளில் வேண்டாம் இந்த விசப்பரீட்சை என்று சொல்லி எப்படியாவது உயிர் தப்ப வேண்டும் என்று தவிப்பார்கள். பெரியவர்கள் எப்படியாவது சிறிது நேரத்துக்குத் தாக்குப் பிடிப்பார்கள். பிஞ்சு உயிர்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ளும் அநியாயமாக  உயிரைப் பறிகொடுத்து விடுவார்கள். நடை பெற்ற சம்பவங்களில் தற்கொலை முயற்சியை மேற்கொண்ட பெற்றோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்தப் பாவமும் அறியாத பிஞ்சு உயிர்களே பெற்றோரின் குடும்பப் பிரச்சினைக்கும் வறுமைக்கும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

தான் மாத்திரம் கிணற்றில் பாய்ந்து இறந்து போவது தற்கொலை. குழந்தைகளுடன் பாய்வது என்பது தற்கொலையல்ல. அது கொலையாகும். தனது உயிரை மாய்த்துக் கொள்வதையே அனுமதிக்காத போது எவ்வாறு அடுத்தவர்களது உயிரைப் பறிக்கலாம்.   

அடுத்தவாரப் பத்தரிகையில் மற்றுமொரு சம்பவம் பதியப்படுவதற்கு முன்னர், இவ்வாறு குழந்தைகளுடன் கிணற்றிலும் ஆற்றிலும் பாயும் சம்பவங்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். முன்னர் குழந்தைகளோடு கிணற்றில் பாய்ந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டு காப்பாற்றப்பட்ட தாய்மார்களுக்கு உரிய உளவள ஆலோசனைகளையும் தேவைப்படின் தண்டனைகளையும் வழங்க வேண்டும். இதன் பிறகு எந்தப் பெற்றோரும் இது போன்ற ஒரு முயற்சியை மேற் கொள்ள முடியாதவாறு அந்த செயற்பாடுகள் அமைதல்  வேண்டும். 




No comments:

Post a Comment