குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Tuesday, March 5, 2013

தெலைபேசியால் பறிக்கப்பட்ட உயிர்


பஹமுன அஸாம்

2013.02.28 ஆம் திகதி தினக்குரல் உதயசூரியனில் பிரசுரமான எனது கட்டுரை

மாதா பிதா குரு தெய்வம் என தொன்று தொட்டு போற்றி வருகிறோம். ஆனால் இன்று ஒரு சில அதிபர் ஆசிரியர்களின் மனித நேயமற்ற செயற்பாடுகளால் அவர்களே மாணவர்களுக்கு எமனாக மாறும் பல சம்பவங்களை நாம் கேள்விப் படுகின்றோம்.

அவ்வாறானதொரு சம்பவம் தான் நிஷாதி மகேஷிகா என்ற மாணவிக்கும் நடந்துள்ளது. மினுவாங்கொடை நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 18 வயதான இந்த உயர்தர வகுப்பு மாணவி தனது பாடசாலை அதிபரின் இரக்கமற்ற நடவடிக்கையால் அநியாயமாக இன்று இவ்வுலகைவிட்டே பிரிந்து சென்று விட்டாள். இத்தனைக்கும் மூல காரணமாக அமைந்தது ஒரு கையடக்கத் தொலைபேசியே.

வருட ஆரம்பம் என்றாலே பாடசாலைகளுக்கு திருவிழாக் காலம் தான். விளையாட்டுப் போட்டி, சுற்றுலாக்கள் என்று பாடசாலையே களை கட்டிவிடும்.மகேஷிகாவின் பாடசாலையிலும் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஹீனடிய கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் ஆடி அம்பளம எட்வட் டி சில்வா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்ற மகேஷிகா எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாக வரவும் தவறவில்லை. சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அவள் பெரிய பாடசாலைகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தும் அதிக தூரம், பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு செல்லவில்லை. உயர்தரப் படிப்பையும் மினுவாங்கொடை நாலாந்தாவிலேயே கற்று வந்தாள். 

அன்று ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை. அன்று அவர் நினைத்திருக்கமாட்டார் அதிபர் வடிவில் எமன் தன்னை நெருங்குவதை. நிஷாதி மகேஷிகாவின் பாடசாலை விளையாட்டுப் போட்டி அவளது பாடசாலைக்குறிய மைதானத்தில் நடைபெறவில்லை. வேறு ஒரு பொது மைதானத்திலேயே நடை பெற்றது. ஏற்கனவே அவள் விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் வெளிப்படுத்திய திறமைகளுக்கான சான்றுகள் குவிந்து கிடக்க, இந்த விளையாட்டுப் போட்டியில் மேலும் சில சான்றிதழ்களும் கேடயங்களும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு விளையாட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்துக்குச் செல்ல ஆயத்தமாகிறாள். சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று அதன் பிறகு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஒரு வேளை விளையாட்டுப் போட்டி முடிந்து வரும்  போது தாமதமாகிவிட்டால் பஸ்ஸில் வந்து பிறகு தனியாக இருட்டில் நடந்து வர முடியாது என்பதால். கூட்டிக் கொண்டு போக வரும்படி  தந்தைக்கு தொலைபேசி அழைப்பெடுப்பதற்காக தாயின் அனுமதியோடு கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள். 

விளையாட்டுப் போட்டி களைகட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவ்வேளை பாடசாலை மாணவத் தலைவிகள் கையடக்கத் தொலைபேசி உள்ளதா என சகமாணவிகளிடம் சோதனையில் ஈடுபடுகிறார்கள். சில மாணவிகள் தமக்குப் பக்கத்தில் இருந்த  பெற்றோர்களிடம் தெலைபேசியைக் கொடுத்து தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் மகேஷிகாவால் அவ்வாறு செய்யமுடியவில்லை. மாணவத் தலைவியர்களில் இருவர் மகேஷிகாவின் தொலைபேசியை எடுத்துக் கொண்டனர் பிறகு அத்தொலைபேசி அதிபரின் மேசைக்குச் செல்கிறது. செய்வது அறியாது திகைத்த மகேஷிகா அச்சம், விரக்தியோடு வீட்டுக்குச் செல்கிறாள். 

மறு நாள் வெள்ளிக்கிழமை. விளையாட்டுப் போட்டியின் களைப்பு கால் வலி காரணமாக பாடசாலைக்குச் செல்லவில்லை. சனி ஞாயிறு தொடர்ந்து நான்காம் திகதி சுதந்திர தினம். ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை தாயையும் அழைத்துக்  கொண்டு பாடசாலைக்குச் செல்கிறாள். அங்கு அதிபரின் பேச்சுக்களால் தாயும் மகளும் தலைகுனிந்து நிற்கின்றார்கள். தெலைபேசியில் தேவையில்லாத படங்கள் வைத்திருப்பதாக அதிபர் கூறியதைக் கேட்டு மகேஷிகாஅதிர்ந்து போனாள். “இல்லை அப்படி ஒரு படமும் எனது தொலைபேசியில் இல்லை. நண்பிகளுடன் எடுத்த படங்கள் மாத்திரம் தான் அதில் இருக்கின்றன என ’மகேஷிகா தன் பக்கத்து நியாயத்தை அதிபருக்கு எடுத்துச் சொல்ல முற்படுகிறாள். ஆனால் “வாயை மூடு’ என்ற அதிபரின் அதிகார வார்த்தையால் மௌனித்துப் போகிறாள். 

“இரண்டு வாரங்களுக்கு வகுப்புத் தடை, உனக்கு இனி இங்கு இடமில்லை. வேறு பாடசாலை ஒன்றைத் தேடிக் கொள்’ அதிபரின் பேச்சுக்களால் மகேஷிகா மாத்திரமல்ல அவளின் தாயும் நிலைகுலைந்து போனார்.
பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த முதல் நாள் வேலைக்குச் செல்லத் தயாராகும் தாயை வீட்டில் இருக்கும்படி கேட்கிறாள் மகேஷிகா. தாயும் அன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் நிற்கிறார். ஆனால் எந்த நாளும் அப்படி இருக்கமுடியாது அல்லவா. மறுநாள் தாய் வேலைக்குச் செல்கிறார்.
வீடடில் தனியாக இருந்த மகேஷிகாவின் எண்ணங்கள் பல திசைகளில் பறந்தன. தாய் உட்பட எல்லோர் முன்பாகவும் பட்ட அவமானம், அயலவர்களின் “ஏன் பாடசாலைக்குச் செல்லவில்லை?’ என்ற கேள்வி, தனிமை போன்ற பல காரணங்களால் விரக்தியடைந்து மனம் குழம்பிப்  போன நிஷாதி மகேஷிகா இவை எல்லாத்துக்குமான தீர்வு தற்கொலை தான் என்ற முடிவுக்கு வருகிறாள். பூச்சிநாசினியை அருந்தி தனது வாழ்க்கைப் புத்தகத்துக்கு தானே முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கிறாள்.

குறைந்த பட்சம் மகேஷிகாவின் இறுதிக் கிரியையின் போது நாலந்தாக் கல்லூரி மாணவியர்கள் பாடசாலை சீருடையில் இறுதி அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பாத கல்நெஞ்சம் படைத்தவராகவே அதிபர் செயற்பட்டுள்ளார். இந்தக் கட்டுரை எழுதும் வரைக்கும் அதிபர் தன்பக்கத்து நியாயத்தை எந்த ஊடகத்திலும் வெளியிட்டதாக அறிய முடியவில்லை. 
மகேஷிகாவின் இழப்பு ஊரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் தனது ஓய்வு நேரத்தில் தனக்குத் தெரிந்தவற்றை ஊரில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு மகேஷிகா கருணையுள்ளம் கொண்டவளாக இருந்துள்ளாள்.

இது ஆரம்பமல்ல இதற்கு முன்னரும் இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்கள் தற்கொலை என்பது சாதாரணவிடயம் போலாகிவிட்டது. தோட்ட மற்றும் கிராமப்புற பாடசாலைகளிலேயே தற்கொலை என்பது அடிக்கடி இடம் பெறுவதைக் கேள்விப்பட்டோம். ஆனால் தற்போது நகர்ப்புறப் பாடசாலைகளிலும் கொலை, தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன.

மாத்தளை நதுன்கமுவ வித்தியாலயத்தில் சமில கருணாரத்ன என்ற மாணவிக்கும் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு நிலை தான் ஏற்பட்டது. மற்றுமொரு சம்பவம் 2009 ஆம் ஆண்டு கறுவாத் தோட்டம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் நடந்தது. 9 ஆம் தரத்தில் பயின்ற மாணவி ஒருவர் பாடசாலையினுள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மதவாச்சி தம்மேன்னாவ பகுதியில் செவ்வந்தி சசினிகா என்ற 15 வயது மாணவி தனது கழுத்துப் பட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் டயகம மேல் பிரிவில் 16 வயது மாணவியொருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

புசல்லாவையைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் திருப்தியில்லை என்று தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பாடசாலை மாணவர்களின் தற் கொலையைப் பொறுத்தவரையில் கைடக்கத் தொலைபேசி, காதல் தொடர்புகள் பாலியல் வல்லுறவு விவகாரங்கள், பெறுபேறுகள் திருப்தியின்மை, அதிபர் ஆசிரியர்களின் தவறான, பிறழ்வான நடத்தைகள் போனறனவே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

எனவே இது போன்ற விடயங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் முன்னேனெச்சரிக்கையாக நடந்து கொள்ள  வேண்டும். மாணவர்கள் விடும் பிழைகளை பகிரங்கமாகச் சொல்லி அவர்களை அவமானப்படுத்தக்கூடாது. மனஉளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்து விடாமல், மாணவர்கள் விடும் தவறுகளை உரிய முறையில் பக்குவமாக கையாண்டு அவர்களைத் திருத்த வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களை மாணவர்கள் எக்காலத்திலும் மறந்து விடமாட்டார்கள். மாறாக மனதில் வைத்துப் போற்றுவார்கள் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவர்களது மனதில் என்றும் நிலைத்து நிற்பார்கள். 

எது எப்படியோ போன உயிர்கள் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் இனியும் நாம் இது போன்ற மகேஷிக்காக்களையும் சமிலாக்களையும் இழக்கக் கூடாது. பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்று எத்தனையோ குழுக்கள் சகல பாடசாலைகளிலும் இயங்குகின்றன. இவைகள் வெறுமனே பெயரளவில் இயங்காது இது போன்ற விடயங்களில் கவனம் எடுத்துச் செயற்பட்டால் இத்தகைய அநியாயமான உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம். 


No comments:

Post a Comment