குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, March 15, 2013

மகளிர் தினத்தில் மனம்திறக்கும் பெண்மணிகள்


(பஹமுன அஸாம்)
asam.mtm@gmail.com

இன்று மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பல முன்னேற்பாடுகள் இடம்பெற்றுவருவதனையும் எம்மால் அறிய முடிகிறது. வருடாந்தம் இத்தினத்தில் மிகவும் உற்சாகமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும் அதனால் பெண்கள் சமுதாயத்திற்கு எந்தளவில் பயன்கள் கிடைத்தன? அவர்களின் எத்தனை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டன? போன்ற விடயங்கள் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமூகத்தின் பல்வேறு மட்டத்திலும் உள்ள சில சகோதரிகள் கூறிய கருத்துக்களை இங்கு தருகிறோம்.

கோமளேஷ்வரி செல்வகுமார், யாழ்ப்பாணம். (ஆட்டோ ஓட்டுனர்)


நான் கோமளேஷ்வரி செல்வகுமார். நான் யாழ்ப்பாணத்தில வெள்ளாந்தெருவில இருக்கிறன். நான் ஆட்டோ ஓட்டித் தான் குடும்பத்த கொண்டு நடத்துறன். எனக்கு ஐந்து  பிள்ளகள். கணவன் நோய்வாய்ப்படடிருக்கிறார். அதனால் அவர் தொழிலுக்குப் போறதில்ல. நான் ஆட்டோ ஓட்டி கிடைக்கிற வருமானத்தாலதான் குடும்பத்துக்கான எல்லா செலவுகளையும் சமாளிக்கிறன். பெண்களப் பொறுத்தவரையில இண்டைக்கு சும்மா வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறதைவிட எங்களால் செய்யக்கூடிய இப்படியான சுயதொழில்களைச் செய்யிறது பிரயோசனமானது.

அதிகமான பெண்கள் கோழி, ஆடு, மாடு வளர்க்கிறதையும் தையல் வேலையையும்  தான் செய்யுறாங்க. இவற்றால வருமானத்தப் பெற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் காத்துக் கொண்டு இருக்க வேணும். ஆனா ஆட்டோ ஓடுறதால உடனுக்குடனே வருமானம் வருது. அதனால தான்  நான் மத்த பெண்களுக்கும் சொல்லுறன். எதையும் எங்களால முடியாது கஷ்டம் என்று நினைக்காமல் நம்பிக்கையோடு செய்தால் எங்களாலும் சாதிக்கலாம்.

அடுத்தது மகளிர் தினத்தில மட்டும் தான் பெண்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகினம். ஏனைய நாட்களில அது பற்றி பேசவும் மாட்டாங்க தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் மாட்டாங்க. எனவே இந்த ஒரு நாளைக்கு மட்டும் மகளிர் தினத்தை மட்டுப் படுத்தாம எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பெண்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுறன்

ஆர்த்திகா பாலச்சந்திரன், கொழும்பு (பல்கலைக்கழக மாணவி)

நான் ஆர்த்திகா பாலச்சந்திரன். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கிறன். மகளிர் தினம் என்பது இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டாயம் தேவையான ஒன்று தான். ஏனென்றால் ஆரம்ப காலத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகவே கணப்பட்டன. அந்த நிலமை இன்று படிப்படியாக குறைவடைந்துள்ளது என்று சொல்லலாம். இப்படி ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தி. பெண்களின் நிலைமைகள் பற்றி பேசப்படுவதால் அவர்களின் நிலை வெளியுலகத்துக்குத் தெரியவருகிறது. இதனால பெண்களின் நிலைப்பாட்டை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிக் கூறுவதாக இருந்தால் அவர்களுக்கு இன்னும் பூரண பாதுகாப்பு இல்லை என்றே கூறவேண்டும். உதாரணமாக தினசரிப்பத்திரிகையொன்றை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எனவே இந்த நிலைமை மாறும் வரை பெண்களுக்கு பூரண சுதந்திரம் பாதுகாப்பு உள்ளது என்று என்னால் கூறமுடியாது.

அடுத்தது பெண்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். இதை விட்டு சாதாரணமாக ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் சிறையில் அடைத்துவிட்டு விடுதலை செய்வதையோ, அபராதமாக ஒரு தொகைப் பணத்தைக் கட்டி சுதந்திரமாக நடமாடவோ விடக்கூடாது. அவ்வாறு செய்வதால தப்பு செய்பவர்கள் தொடர்ந்து அவற்றை செய்துகொண்டே இருப்பார்கள். 

புஷ்பராணி, பதுளை. (தனியார் நிறுவன செயலாளர், கணக்காளர்)

நான் புஷ்பராணி. எனது சொந்த இடம் பதுளை. ஒரு தனியார் நிறுவனம் செயலாளராகவும் கணக்காளராகவும் இருக்கிறன். எமது நிறுவனத்தால தோட்ட மற்றும் கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கு  சுயதொழிலுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அறிவூட்டல் கருத்தரங்குகளை நடத்துவதோடு  சிறுவர்களுக்கான முன்பள்ளியையும் நடத்துகிறது. 

மகளிர் தினம் என்பது ஒரு முக்கியமான தினமாகும். எமது நிறுவனத்தாலும்  ஒவ்வொரு வருடமும் பதுளைப் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.   பெண்களைப் பொறுத்தவரையில் பல பிரச்சினைகள் கோரிக்கைகள் அவர்களுக்கு இருக்கின்றன. நாம் அவற்றை இனங்கண்டு உரியவர்களிடம் முன்வைக்கின்றோம். ஆனாலும் எங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.  மகளிர் தினம் என்பது உண்மையில் நன்மை பயக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் அதனால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை.

பதுளைப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது. இன்று அதிகமான இடங்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள். தமக்கென்று ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். பதுளையிலும் ஒரு சில கடைகளைத் தவிர அநேகமான இடங்களிலும் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். இது உண்மையில் பெருமைக்குரிய விடயம் தான். ஆனால் இவர்களில் ஒரு சிலரை சில முதலாளிமார் தப்பான கண்ணோடு பார்ப்பதும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தைக் கொடுக்காது விடுவதும் கவலைக்குரிய விடயங்கள்.

பெண்கள் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களுடைய வறுமை நிலையைப் பயன்படுத்தி பணம் படைத்தவர்கள் சீரழித்து விடுவார்கள். சில பட்டதாரிப் பெண் பிள்ளைகள் கூட சாதாரணமான கடைகளில் வேலை செய்கின்றார்கள். அவர்களின் அறிவையும் திறமைகளையும்  இன்றைய சமூகம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் இன்று ஒருசிலர் பெண்களைப் பெண்களாகவே மதிப்பதில்லை. அவர்கள் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதை இழிவாகப் பார்க்கிறார்கள். இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். 

எனவே இனிவரும் காலங்களிலாவது பெண்கள் தூங்கிக் கொண்டிருக்காமல் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று என்னைப் போன்ற பெண்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். 

விஜயலக்ஷ்மி, மட்டக்குளி (குடும்பத் தலைவி)

நான் மட்டக்குளி விஜயலக்ஷ்மி. மகளிர் தினத்தப் பொறுத்தவரையில அது பெண்களுக்கான ஒரு விசேட தினமாகும். ஆரம்ப காலத்துல அடுப்படியில் முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று பெரிய பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். தமக்கென்று வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஏனையவர்கள் மதிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார். ஆனாலும் ஒரு சின்னக் கவலை. எவ்வளவு பெரிய தொழிலில், இருந்தாலும் பதவியில் இருந்தாலும் வீதியில் இறங்கினால் அவர்களின் நிலை வேதனையானதுதான்.

ஒழுங்கான பாதுகாப்பில்லை, பஸ்ஸில் ஏறிõனால் நிம்மதியாக ஓரிடத்துக்குச் செல்ல முடியாது. சில அநாகரிகமானவர்களின் நடத்தைகள் மிகவும் வேதனை தரக்கூடியதாகவே இருக்கின்றது. பெண் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பினால் அவள் திரும்பி வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் தாய்மார் இருக்க வேண்டும்.

எனவே இந்த மகளிர் தினத்திலிருந்தாவது பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் உரிய அதிகாரிகள் அக்கறை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வினிபீடா பிந்து (நகர சுத்திகரிப்புத் தொழிலாளி)

நான் வினிபீடா பிந்து.எனக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் பெண்பிள்ளைகள்தான். எனது கணவர் இறந்து விட்டார். அதற்குப் பிறகு குடும்பப்  பொறுப்பை நான்தான் சுமக்கிறேன். 11 வருடமாக இந்த  நகர சுத்திகரிப்பு தொழிலை செய்கிறேன். ஒரு நாள் கூட இத்தொழிலை நான் கௌரவக் குறைச்சலா நினைச்சது கிடையாது. மனநிம்மதியோடு தான் செய்யிறன். எனக்கு இதால மாதச் சம்பளம் ஒன்று கிடைக்கிறது. அந்தக் காசு குடும்பத்த நடத்துறதக்கு போதுமானதாக இருக்கிறது. இன்னொருவரிடத்துல கையேந்தாம குடும்பத்த நடத்துரன். 

எனது மூத்த மகள் ஒரு கடையில் கணக்காளராக வேலை செய்கிறார். இரண்டாவது மகள் சட்டக் கல்லூரி நுழைவுக்காக படிக்கிறாள். மூன்றாவது மகளும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தத் தொழிலைச் செய்து அவர்களைப் இவ்வளவு தூரம் படிக்க வைக்க முடிவதை நினைத்து பெருமை படுறன். பெண்கள் தினம் கொண்டாடப்படுவது ஒரு நல்ல விடயம் தான். நான் பெரியளவில அதுகள்ள ஈடுபடாவிட்டாலும் ஒரு பெண் என்ற அடிப்படையில் எங்களப்பத்தி சிந்திப்பதற்காக ஒரு நாள் இருக்கிறது என்பத நினைத்து சந்தோசப்படுறன்.

திமுத்து ஆட்டிகல. (சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பின் தலைவர்)

இந்த வருடம் பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் முதலாம் திகதியில் இருந்து இன்று வரை பல நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தி வருகிறோம். இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மீறப்பட்டு பெண்கள் பாரியளவில் உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முக்கியமாக வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்  செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை அவர்களுக்கு சொந்த வீடடில் கூட தனியாக இருக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. 

எனவே இவ்வாறு சிவில் சமூகத்தில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை விடுவித்து சிறந்ததொரு பெண்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் இந்த வருடம் நாம் பல நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம். 


No comments:

Post a Comment